நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் வனவிலங்குகள் தொடர்பான பொருட்களின் கடத்தல் முறியடிப்பு: பாம்பு விஷம், விலங்குகளின் தோல்கள் பறிமுதல்; 6 பேர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 3:23PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த இரண்டு சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் குழுக்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2 லிட்டர் ராஜநாகப் பாம்பு விஷம், புலி, சிறுத்தை, சிவிங்கிப்புலி ஆகியவற்றின் தோல்கள், வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 25-ம் தேதி, புனே அருகே சட்டவிரோதமாகப் பாம்பு விஷம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், இந்த விற்பனையில் தொடர்புடைய மூன்று பேரைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து இரண்டு பாட்டில்களில் சுமார் 2 லிட்டர் ராஜநாகப் பாம்பு விஷம் கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது விஷம் சிந்தியதால் ஓர் அதிகாரியும் பாதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள், விஷம் ஆகியவை மகாராஷ்டிர வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

நவம்பர் 26-ம் தேதி, பன்வெல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் புலி, சிறுத்தை ஆகியவற்றின் தோல்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நவி மும்பையில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் சிவிங்கிப்புலியின் தோல், ஏர் ரைஃபிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சிறுத்தையின் தோலில் துப்பாக்கிக் குண்டு காயம் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

ராஜநாகம், புலி, சிறுத்தை, சிவிங்கிப்புலி ஆகிய நான்கு உயிரினங்களும் 1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. இவற்றை வேட்டையாடுவது, பிடிப்பது, விற்பது, அனுமதியின்றி வைத்திருப்பது ஆகியவை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வனவிலங்கு வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டிஆர்ஐ தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343015&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343099) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Marathi