சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 6:02PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை, வருணா நதிகளின் கரையோரமாக இரண்டு உயர்மட்டச் சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்தப் புள்ளி கோரி இருந்தது. இதையடுத்து 32 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரி விண்ணப்பித்துள்ளன. இந்தத் திட்டங்கள் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, முக்கிய இடங்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
மொத்தம் 89.2 கிலோமீட்டர் நீளத்தில் இந்த இரண்டு திட்டங்களும் அமைக்கப்பட உள்ளன. 2026 ஜூலை மாதம் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
வருணா நதிக்கரையோரமாக 43.2 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் உயர்மட்டச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 31-ஐ வாரணாசி சுற்றுச்சாலையுடன் இணைக்கும். இதற்கான திட்டச் செலவு ரூ.10,998.32 கோடியாகும். இந்தப் பணிக்கு 15 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இந்தச் சாலையில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வசதிகள் அமைக்கப்படும். இதன் மூலம், தேசிய நெடுஞ்சாலை 31-ல் இருந்து காசி ரயில் நிலையத்துக்குச் செல்ல தற்போது ஆகும் 40 நிமிடப் பயண நேரம் 20 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை நதிக்கரையோரமாக 46 கிலோமீட்டர் நீளத்தில் மற்றொரு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 19-ஐ வாரணாசி சுற்றுச்சாலையுடன் இணைக்கும். இதற்கான திட்டச் செலவு ரூ.14,447.64 கோடியாகும். இந்தத் திட்டத்துக்கு 17 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதில் ஆறு வழிச்சாலை, 910 மீட்டர் நீளமுள்ள கேபிள் பாலம், 1.32 கிலோமீட்டர் நீளமுள்ள சிறப்புப் பாலம் ஆகியவை இடம்பெறும்.
இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சராசரிப் பயண நேரம் 60 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்களாகக் குறையும். காசி விஸ்வநாதர் கோயில், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், விமான நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு எளிதில் செல்லும் வசதியும் மேம்படும். சுற்றுலா, ஆன்மிகப் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்தி கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் திட்டங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342695®=3&lang=1
(Release ID: 2342695)
****
SK/PLM/SH