இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 11:14AM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 9 சிவிங்கிப்புலி குட்டிகள் பிறந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 7 தசாப்தங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அழிந்துபோன இந்த விலங்கினம், சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் (புராஜெக்ட் சீட்டா) கீழ் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் மேலாண்மை, பராமரிப்பு நடவடிக்கைகள், களப் பணிகளின் காரணமாக மீண்டும் தழைத்தோங்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2026 அக்டோபர் 5 அன்று, இந்தியாவில் பிறந்த கேஜேபி21 என்ற பெண் சிவிங்கிப்புலி 5 ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றது. முகி, கேஜிபி12 ஆகியவற்றைத் தொடர்ந்து குட்டிகளை ஈன்ற மூன்றாவது இந்தியப் பெண் சிவிங்கிப்புலி இதுவாகும். ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண் சிவிங்கிப்புலி மூலம் இவை பிறந்துள்ளதால், புதிய மரபணு வரிசை இணைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20 அன்று போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கோம்ஜி 3 என்ற பெண் சிவிங்கிப்புலி, காட்டின் திறந்தவெளிச் சூழலில் 4 குட்டிகளை ஈன்றது. போட்ஸ்வானா சிவிங்கிப்புலி இந்தியாவில் குட்டிகளை ஈன்றது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்தியாவில் பிறந்த சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது; இது நாட்டின் மொத்த சிவிங்கிப்புலிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% ஆகும். இது தேசிய சிவிங்கிப்புலிகள் செயல்திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இந்தியாவில் அழிந்துபோன விலங்கினமாக 1952-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், 2022 செப்டம்பர் 17 அன்று நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளைக் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் விடுவித்தார். இதனைத் தொடர்ந்து, 2023 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும், 2026 பிப்ரவரியில் போட்ஸ்வானாவிலிருந்து 9 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சகம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
குனோ பூங்காவைச் சுற்றியுள்ள 24 கிராமங்களைச் சேர்ந்த 1,545 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு, சுமார் 6,258 ஹெக்டேர் நிலம் வனவிலங்குப் பாதுகாப்பிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் காலர்கள், கேமராக்கள் மூலம் சிவிங்கிப்புலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும், காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம், வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கும் சிவிங்கிப்புலிகளின் வாழ்விடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குனோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள 80 கிராமங்களில் 450-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கண்காணிப்பாளர்கள், ரோந்துப் பணியாளர்கள், பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் என சுமார் 380 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குனோ பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சூழலியல் சுற்றுலா வருவாயில் 5 சதவீதப் பங்கும் வழங்கப்படுகிறது. சாலைகள், தடுப்பணைகள், சுகாதார வசதிகளை உள்ளடக்கிய சூழலியல் மேம்பாட்டுப் பணிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ளூர் சமூகத்தினரும் பங்கு பெறும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளின் பலன்கள் அதிக நிலைத்தன்மையுடன் கூடியதாக முன்னேற்றம் அடைகின்றன.
2032-ம் ஆண்டிற்குள் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கையை 60 முதல் 70 வரை உயர்த்துவதே இத்திட்டத்தின் நீண்டகால இலக்காகும். சமீபத்தில் பிறந்த குட்டிகள் ஆரோக்கியமாக வளர்வதும், எதிர்கால இனப்பெருக்கமும் இந்திய மண்ணில் சிவிங்கிப்புலிகள் நிலைத்து வாழ்வதற்கு வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341719®=3&lang=1&_gl=1
***
SS/PD/PS