PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மலர் சாகுபடி பொருளாதாரத்தின் எழுச்சி:

2-வது பெரிய உற்பத்தியாளராகத் திகழும் தமிழ்நாடு

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 1:43PM by PIB Chennai

நாட்டின் தோட்டக்கலைத் துறையின் முக்கிய அங்கமாக மலர் சாகுபடி உருவெடுத்துள்ளது. சாதகமான வேளாண்-பருவநிலைச் சூழல், கலாச்சாரத் தேவை, விரிவடைந்து வரும் வணிகப் பயன்பாடுகள் ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்குகின்றன. 2025-26-ம் ஆண்டிற்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 410 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 4,882 ஆயிரம் மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 3,653 ஆயிரம் மெட்ரிக் டன் உதிரிப் பூக்களும், 1,229 ஆயிரம் மெட்ரிக் டன் கொய்மலர்களும் அடங்கும்.

நாட்டின் மொத்த மலர் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் 31% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (14%), மத்தியப் பிரதேசம் (11%), கர்நாடகா (10%), மேற்கு வங்காளம் (8%) ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் 4% பங்களிப்பை வழங்குகின்றன. வழிபாட்டு நடவடிக்கைகள், அலங்காரப் பயன்பாடுகள் மட்டுமின்றி, வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துத் தயாரிப்புகள், இயற்கை சாயங்கள் தயாரிப்பிலும் மலர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. வழிபாட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் சாமந்தி (மேரிகோல்டு) தமிழ்நாட்டில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் இந்திய மலர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், பழங்கள், காய்கறி விதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மலர் சாகுபடி ஏற்றுமதி, 2021-22 நிதியாண்டில் 216.74 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 2025-26 நிதியாண்டில் 258.26 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்கா 45.94 மில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதியுடன் முதலிடத்திலும், நெதர்லாந்து 42.18 மில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் 16.51 மில்லியன் அமெரிக்க டாலர், ஐக்கிய அரபு அமீரகம் 16.35 மில்லியன் அமெரிக்க டாலர், இத்தாலி 9.69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மலர்களை இறக்குமதி செய்துள்ளன. 2025 பிப்ரவரியில் மிசோரமிலிருந்து சிங்கப்பூருக்கு முதன்முறையாக 1,024 அந்தூரியம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம், நபார்டு நிதியுதவி, அபேடா அமைப்பின் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் இத்துறைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் மலர் சாகுபடி இயக்கம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2025 டிசம்பர் நிலவரப்படி 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2,208 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மலர் சாகுபடி விரிவுபடுத்தப்பட்டு 16,220 பேர் பயனடைந்துள்ளனர். 2017-ல் தொடங்கப்பட்ட நறுமணப் பயிர்கள் இயக்கத்தின் கீழ் 51,000 ஹெக்டேருக்கும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 1 கோடி கிராமப்புற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூரில் உள்ள ஆராய்ச்சி மையம் மூலம் துலிப் மலர் சாகுபடியும், ஒடிசாவின் சம்பல்பூரில் யூஸ்டோமா மலர் சாகுபடியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், கொள்கை ஆதரவுடன் இந்தியாவின் மலர் சாகுபடித் துறை நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340270&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340468) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati