இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2026 6:23PM by PIB Chennai
அருணாசலப் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகரில், தேசியப் பேரிடர் மீட்புப் படையான என்டிஆர்எஃப் (NDRF) 12-வது படைப்பிரிவு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (22.11.2026) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அருணாசலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, அருணாசலப் பிரதேச துணை முதலமைச்சர் திரு சௌனா மெய்ன், மத்திய உள்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன், என்டிஆர்எஃப் தலைமை இயக்குநர் திரு பியூஷ் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அருணாசலப் பிரதேசமும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் அடங்கும் என்று தெரிவித்தார். இந்தப் புதிய வளாகம் அருணாசலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் எனவும், வடகிழக்கு மாநிலங்களின் எட்டு மாநிலப் பேரிடர் மீட்புப் படைகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், வீரர்களின் பயிற்சிக்காக ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம், டைவிங் பயிற்சிக் குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். பேரிடர்களை எதிர்கொள்வதில் முன்கூட்டியே எச்சரித்தல், தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைத் தயார்நிலை, பாதிப்புகளைக் குறைத்தல், உயிரிழப்பில்லா அணுகுமுறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
2014 முதல் 2026 வரை என்டிஆர்எஃப், மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள், மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே மக்களும் கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் புயல் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையை தற்போது ஏழு நாட்களுக்கு முன்பே வழங்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை என்டிஆர்எஃப் 11,000-க்கும் மேற்பட்ட மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, 1.61 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று அவர் கூறினார். ஜப்பான், நேபாளம், துருக்கி, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் என்டிஆர்எஃப் மீட்புப் பணிகளை மேற்கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339981®=3
****
SK/PLM/RJ