கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாசலப் பிரதேசத்தில் ரூ.5,610.95 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: மத்திய அமித் ஷா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 6:06PM by PIB Chennai

அருணாசலப் பிரதேசத் தலைநகர் இட்டாநகரில் இன்று (22.11.2026) நடைபெற்ற கூட்டுறவுத் திருவிழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, 'அருணாசலப் பிரதேச கூட்டுறவு தொலைநோக்குத் திட்டம் 2047' என்ற திட்டத்தை வெளியிட்டார். மேலும், ரூ.5,610.95 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் போக்குவரத்து, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வடகிழக்கில் அனைத்து மாநிலத் தலைநகரங்களும் ரயில், விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீன எல்லையையொட்டிய 40 கிராமங்களில் முன்பு மக்கள் வெளியேறி வந்த நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் சொந்த கிராமங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். ராணுவம், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் ஆகியோர் உள்ளூர் மக்களிடம் இருந்து காய்கறிகள், முட்டை, பால் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதால் கிராமப்புறப் பொருளாதாரம் வலுப்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் தற்போது 185 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், 52 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், 43 மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன என்றும் இவற்றின் மூலம் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டுறவுத் துறையுடன் இணைந்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார். மாநிலத்தில் 266 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ரூ.6,600 கோடியில் தற்போது நடைபெற்று வருகின்றன என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, பழங்குடியின மக்களின் அடையாளம், கலாசாரம், மரபுகள், நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், இளைஞர்களுக்குச் சிறந்த கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நான்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எல்லைப் பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களுக்காக சூரிய மின்சக்தியில் இயங்கும் நடமாடும் மருத்துவ வாகனங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்கு நேரடிச் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சாரஸ் கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339970&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2340004) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati