அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நோய் தடுப்பு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 3:24PM by PIB Chennai

நோய்களைக் குணப்படுத்துதல் என்பதைத் தாண்டி, நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் முறைகளை நோக்கி இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகள் முன்னேறி வருவதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மூலக்கூறு, மரபணு அளவிலான ஆராய்ச்சிகள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் புதிய மருத்துவ முறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

புதுதில்லியில் நடைபெற்ற 'தி வீக் ஹெல்த் உச்சி மாநாடு 2026' நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இளம் வயதினரிடமும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். உணவுப் பழக்கங்களில் மாற்றம், உடற்பயிற்சியின்மை ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பதாகவும், நோய்களைத் தடுப்பதில் பொதுமக்களுக்கு சுய அக்கறை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 10,000 பேரின் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் 400-க்கும் மேற்பட்ட மரபணுப் பண்புகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குறிப்பிட்ட நோய்களுக்கான மரபணு சார்ந்த பாதிப்புகளைக் கண்டறிய இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட் பாதிப்புக் காலத்தில் இந்தியா உள்நாட்டிலேயே மரபணு டிஎன்ஏ தடுப்பூசியை உருவாக்கியதை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் இளம் சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் இதன் மூலம் கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும் முயற்சி வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிநபரின் மரபணு அமைப்பு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் துல்லிய மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் அரிய மரபணு நோய்களுக்கான பரிசோதனை, சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ ஆராய்ச்சிகளை விரைவுபடுத்த அரசு நிறுவனங்கள், தனியார் துறையினர், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் தவறான மருத்துவத் தகவல்களை நம்பாமல், தகுதியான மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நோய்த்தடுப்பு, மரபணு ஆராய்ச்சி, உள்நாட்டு மருத்துவக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மூலம் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி சுகாதார ஆராய்ச்சி முன்னேறி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339914&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2339995) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi