புவியியல் எல்லைகள், கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான ஆற்றல் சினிமாவிற்கு உண்டு. இந்த உணர்வை மையமாகக் கொண்டு 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 2026 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. ‘எல்லைகளற்ற கதைகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த ஒன்பது நாள் விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், வளர்ந்து வரும் திரைத்துறைக் கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
அடுத்த தலைமுறை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் 2021-ல் தொடங்கப்பட்ட 'நாளைய படைப்பாளிகள்' (சிஎம்ஓடி) முன்னெடுப்பின் 6-வது பதிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, ஒலிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 13 திரைப்படத் துறைகளைச் சேர்ந்த 100 இளம் திறமையாளர்களை ஒன்றிணைக்கிறது. 48 மணி நேர திரைப்படத் தயாரிப்புப் போட்டி, சிஎம்ஓடி திறன் முகாம் ஆகியவற்றின் மூலம் இவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கிறது. இந்த முன்னெடுப்பில் பங்கேற்ற சிதானந்தா எஸ் நாயக் இயக்கிய கன்னட குறும்படம் 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 2026 விழாவில் 52 பெண் இயக்குநர்கள், 62 அறிமுக இயக்குநர்களின் படங்கள் திரையிடப்படுகின்றன.
1978-ல் தொடங்கப்பட்ட இந்தியன் பனோரமா பிரிவு, பிராந்திய மொழித் திரைப்படங்களை உலக அரங்கிற்குக் கொண்டு செல்கிறது. 57-வது விழாவில் 404 திரைப்பட விண்ணப்பங்களிலிருந்து 25 திரைப்படங்களும், 358 ஆவணப்பட விண்ணப்பங்களிலிருந்து 20 படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக இந்திய சினிமா பிரிவில் 18 மொழிகளில் 76 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் மொழி சார்பில் சிவகுமார் முருகேசன் இயக்கிய ‘தாய் கிழவி’ திரைப்படம் இந்தப் பிரிவில் திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ‘அமரன்’ தமிழ் திரைப்படம் முழு நீளத் திரைப்படப் பிரிவிலும், லீனா யாதவ் இயக்கிய ‘பிகமிங்’ லடாக் மொழி திரைப்படம் ஆவணப்படப் பிரிவிலும், ஆதித்யா தர் இயக்கிய ‘துரந்தர்’ திரைப்படம் பொதுப் பிரிவிலும் முதல் திரைப்படங்களாக திரையிரப்பட உள்ளன. மராத்தி, மலையாள சினிமாவின் பாரம்பரியத்திற்கும் இதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
திரைப்படங்களின் வணிகம், சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த தெற்காசியாவின் மிகப்பெரிய திரைப்படச் சந்தையான வேவ்ஸ் திரைப்பட பஜார் தனது 20-வது ஆண்டை கொண்டாடுகிறது. திரைக்கதை எழுத்தாளர்கள் ஆய்வகம், தயாரிப்பாளர்கள் ஆய்வகம் மூலம் சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி, விநியோக வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இத்தளத்தின் மூலம் 'தி லஞ்ச்பாக்ஸ்', 'கோர்ட்', 'நியூட்டன்' ஆகிய படங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன.
இதனுடன், பிரிக்ஸ் நாடுகளின் 21 திரைப்படங்கள் திரையிடப்படும் பிரிக்ஸ் சினிமா பிரிவு, பிரேசில், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரலாறு, சமகால வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கதைகளைக் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் கலைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளையும், பல்வேறு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரப் புரிதலையும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338428®=48&lang=2
***
TV/PD/SH