இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 4:50PM by PIB Chennai
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக, கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71.24 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 2026-ம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை ஒரே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஹெராயின் போதைப்பொருள் இதுவாகும். குறிப்பிட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய ஒரு வாகனத்தையும் அதற்குப் பாதுகாப்பாகச் சென்ற இருசக்கர வாகனத்தையும் இடைமறித்துச் சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் நடத்தப்பட்ட முழுமையான சோதனையில், 69 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த வெண்மை நிறப் பொடி வடிவிலான 71.24 கிலோ ஹெராயின் கண்டெடுக்கப்பட்டது. சென்னை மற்றும் திருச்சி வழியாகக் கடல் மார்க்கமாக இலங்கைக்கு இந்தப் போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டம், 1985-ன் கீழ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, இக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சர்வதேச சட்டவிரோத சந்தைக்குள் பெருமளவிலான ஹெராயினைக் கொண்டு செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபரில் நாகப்பட்டினம் அருகே உள்ள கடலோர கிராமத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை டிஆர்ஐ பறிமுதல் செய்திருந்தது. எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்களை முறியடிப்பதில் டிஆர்ஐ-யின் வலுவான புலனாய்வு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை இத்தொடர் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338520®=3&lang=1&_gl=1
****
TV/SE/SH