இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 10:56AM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தெளிவான அதிகாரப் பகிர்வு, சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாகும். நாட்டில் முதல் கொவிட் பாதிப்பு பதிவாவதற்கு முன்பே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2020 ஜனவரி 8 அன்று கூட்டுக் கண்காணிப்புக் குழு பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொண்டதுடன், ஜனவரி 17 முதல் விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது 2020 ஜனவரி 30 அன்று கேரளத்தில் முதல் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். மேலும், 2020 பிப்ரவரியில் சீனாவின் வுஹானிலிருந்து 645 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், 2020 மார்ச் 29 அன்று 11 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப இக்குழுக்கள் 2020 செப்டம்பரில் 6 ஆகவும், 2021 மே மாதத்தில் ஆக்ஸிஜன், தடுப்பூசி, பரிசோதனை ஆகியவற்றுக்காக 10 தனித்தனி குழுக்களாகவும் மாற்றியமைக்கப்பட்டன. 2020 மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட முதலாவது தேசிய சீரோ ஆய்வில் 0.73% பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டதையடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 4-வது கட்ட ஆய்வில் 67.6% பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவானது கண்டறியப்பட்டது. ஆரோக்கிய சேது செயலி, மரபணு வரிசைப்படுத்துதல் கூட்டமைப்பு ஆகிய தொழில்நுட்பங்களும் நோய்க் கட்டுப்பாட்டிற்குப் பெரிதும் உதவின.
பரிசோதனைகளை விரிவுபடுத்த 2020 மார்ச் 21 முதல் தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி பூஜ்ஜியத்திலிருந்து, 2020 மே மாதத்திற்குள் நாளொன்றுக்கு சுமார் 4.5 லட்சமாக உயர்ந்தது. பிரதமர் தலைமையில் மாநில முதலமைச்சர்களுடன் தொடர்ந்து காணொலி வாயிலாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு, மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டன. இரண்டாவது கொவிட் பாதிப்பு அலையின் போது மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 2021 ஏப்ரல் 20 அன்று 4,880 டன்னில் இருந்து, ஏப்ரல் 30 அன்று 6,593 டன்னாக அதிகரிக்கப்பட்டது.
2021 ஜனவரி 16 அன்று சுகாதாரப் பணியாளர்களுக்கு தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கம், 2021 மே 1 முதல் அனைத்து பெரியவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2021 ஜூலை 8 அன்று ரூ.23,123 கோடி ஒதுக்கீட்டில் அவசரகால கொவிட்-19 நடவடிக்கை, சுகாதார அமைப்பு தயார்நிலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 663 புதிய ஆய்வகங்கள், 697 திரவ ஆக்ஸிஜன் சேமிப்புக் கலன்கள் அமைக்கப்பட்டன. 2021 அக்டோபர் 21 அன்று 100 கோடி தடுப்பூசி என்ற சாதனையை இந்தியா கடந்தது. வீடுதோறும் தடுப்பூசி செலுத்தும் இயக்கமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2025 டிசம்பர் 31 நிலவரப்படி, 12 வயதுக்கு மேற்பட்டோரில் 97% பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியும், 90% பேர் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை தவணையாக 22.89 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 2023 மே 5 அன்று உலக சுகாதார அமைப்பு அவசரநிலையைத் திரும்பப் பெறும் வரை இந்தியாவின் இந்தத் முயற்சிகள் தொடர்ந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336744®=3&lang=1
***
SS/PD/RJ