சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 2:13PM by PIB Chennai
இந்தியாவில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவைகள் கிடைக்கச் செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023–24-ம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரக் கணக்கீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது.
அரசின் செலவு உயர்வு:
கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மேற்கொள்ளும் சுகாதாரச் செலவுகள் மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2013–14-ம் ஆண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்த இச்செலவு, 2023–24-ம் ஆண்டில் ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
குடும்பங்களின் மருத்துவச் செலவுச் சுமை குறைவு:
மக்கள் தங்கள் கையிலிருந்து நேரடியாகச் செலுத்தும் மருத்துவச் செலவின் பங்கு, மொத்த மருத்துவச் செலவில் 2013–14-ம் ஆண்டு 64.2 சதவீதமாக இருந்தது. இது 2023–24-ம் ஆண்டில் 42.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, 21.5 சதவீதம சரிந்துள்ளது. 2022–23-ம் ஆண்டில் 43.4 சதவீதமாக இருந்த இது, அடுத்த ஆண்டில் மேலும் குறைந்துள்ளது.
தனிநபர் மருத்துவச் செலவு:
ஒரு நபருக்காக அரசு செலவிடும் மருத்துவத் தொகை, 2013–14-ம் ஆண்டில் ₹1,042 ஆக இருந்தது. இது 2023–24-ம் ஆண்டில் ₹2,959 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பும் 14.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆரம்ப சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி:
ஆரம்ப சுகாதாரச் சேவைகளுக்காக அரசு ₹1.53 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் நோய்த் தடுப்பு, நோய் கண்டறிதல், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவப் பரிசோதனைகள் ஆகிய சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பு:
மொத்த மருத்துவச் செலவில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், மக்களுக்குப் பெரிய அளவில் பயன் அளிக்கின்றன. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான மருத்துவச் செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
தனியார் மருத்துவக் காப்பீட்டின் பங்கும் 3.4 சதவீதத்திலிருந்து 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவச் செலவைக் குறைக்கும் அரசுத் திட்டங்கள்:
இலவச மருந்துகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், தேசிய டயாலிசிஸ் திட்டம், மக்கள் மருந்தகங்கள், குறைந்த விலை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் அம்ரித் மருந்தகங்கள் ஆகியவை மருத்துவச் செலவைக் குறைக்க உதவுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்குப் கட்டணமில்லா மருத்துவமனைச் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
இந்த அறிக்கை தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் தொழில்நுட்ப அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 2011-ம் ஆண்டின் சுகாதாரக் கணக்கியல் நடைமுறையைப் பயன்படுத்தி இக்கணக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசின் முதலீடு அதிகரிப்பு, குடும்பங்களின் நேரடி மருத்துவச் செலவு குறைவு ஆகியவை அனைவருக்கும் தரமான, குறைந்த செலவிலான மருத்துவச் சேவைகளை வழங்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் மிக முக்கிய முன்னேற்றமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336478
****
TV/PLM/RJ