மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பகவான் பிர்சா முண்டா பிறந்த தினம் - குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 1:52PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பகவான் பிர்சா முண்டா சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்நாள் நாடு முழுவதும் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

'தர்த்தி ஆபா' (நிலத்தின் தந்தை) எனப் போற்றப்படும் பிர்சா முண்டா, இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவராகவும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக 'உல்குலான்' என்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அவர் நடத்தினார். நீர், காடு, நிலம் ஆகியவற்றின் மீதான பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடினார்.

அவரது துணிச்சல், தியாகம், தலைமைப் பண்பு ஆகியவை இன்றும் மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன. 2021 முதல், அவரது பிறந்த தினமான நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் பெருமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பையும், அவர்களது தியாகத்தையும் போற்றுவதே இதன் நோக்கமாகும்.

இந்நாளையொட்டி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிர்சா முண்டாவின் போராட்டமானது, சமூகத்தின் உண்மையான வலிமை, அதன் பண்பாட்டு வேர்களிலும், ஒற்றுமையிலும் இருப்பதை உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். சமூகப் பொறுப்பு, சுயமரியாதை, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை பிர்சா முண்டாவின் கொள்கைகள் வலுப்படுத்தியதாகவும் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336477&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336542) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी