இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 1:49PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் 13-வது தளவாடப் பழுதுபார்ப்புப் பிரிவு, தனது 50 ஆண்டுகால சேவையைக் குறிக்கும் பொன்விழாவை முன்னிட்டு, புதுதில்லி மானெக்ஷா மையத்தில் ‘2040-ம் ஆண்டின் விமானப் பாதுகாப்பு: உணர் திறன் கருவிகள், கட்டமைப்புகள், தற்சார்பான பராமரிப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது. இதற்கு விமானப்படையின் பராமரிப்புக் கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் யல்லா உமேஷ் தலைமை வகித்தார்.
1976-ல் தொடங்கப்பட்ட இப்பிரிவு, ரேடார், தகவல் தொடர்புக் கருவிகளின் பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பு, ஆயுட்காலப் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக விமானப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டுத் திறனை இது உறுதிப்படுத்தி வருகிறது.
நவீன பாதுகாப்புக் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரித்து, பழுது ஏற்பட்டால் உள்நாட்டிலேயே பழுதுபார்க்கும் திறனை வலுப்படுத்த வேண்டும் என்று ஏர் மார்ஷல் யல்லா உமேஷ் வலியுறுத்தினார்.
கருத்தரங்கில் குவாண்டம் உணர் திறன் கருவிகள், கருவிகளின் ஆயுட்கால மேலாண்மை, நவீன ரேடார் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், என்டிபிசி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் விமானப்படை ரேடார்களை இயக்கும் தொழில்நுட்பம், இக்கருத்தரங்கில் வெற்றிகரமாகச் சோதித்துக் காட்டப்பட்டது. இது தூய்மையான எரிசக்தி, எரிசக்தித் தற்சார்பு ஆகியவற்றை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336474®=3&lang=1
****
TV/PLM/RJ