பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுக் கொள்கை உருவாக்கம் குறித்து ஐஐசிஏ சார்பில் கருத்தரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 6:22PM by PIB Chennai

மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனமான ஐஐசிஏ சார்பில், புதுதில்லியில், பொதுக் கொள்கை, நிறுவன விவகாரங்கள், தொழில்முறை வளர்ச்சி ஆகியவை குறித்த உயர்நிலை ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிறுவனங்களின் பொதுக் கொள்கைப் பிரிவின் பணிகள், அத்துறையில் பணியாற்றுவோருக்குத் தேவையான திறன்கள், தேசிய முன்னுரிமைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப பயிற்சியை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிப்பதே இதன் நோக்கமாகும்.

தொடக்க உரையாற்றிய ஐஐசிஏ தலைமை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஞானேஷ்வர் குமார் சிங், அரசு, தனியார் துறைகளுக்கு இடையே தொடர்ச்சியான ஆக்கப்பூர்வமான உரையாடல் அவசியம் என்றார். கொள்கை உருவாக்கத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு, நல்ல நிர்வாகத்துக்கும் சிறந்த வணிகச் சூழலுக்கும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற மத்திய அரசு செயலாளர்கள் திரு அமர்ஜீத் சின்ஹா, திரு அனுப் கே. புஜாரி, திரு அருண் கோயல் ஆகியோர் இணக்கமான நிர்வாகம், சிறந்த கொள்கைகள், அரசு-தனியார் துறை இடையிலான ஒத்துழைப்பு, தொழில்முறை திறன் வளர்ப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், தகவல் தொடர்பு, மனித உறவுத் திறன்கள், நிறுவனத்தின் வணிக இலக்குகளுடன் கொள்கைப் பணிகளை இணைப்பது முக்கியம் என்று கூறினார்.

கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கல்வி அமைப்புகள், சிந்தனைக் குழுக்கள், தொழில் சங்கங்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336260&reg=3&lang=1

(Release ID : 2336260)

****

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336312) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी