அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நீரிழிவு நோயைத் தடுக்க வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 6:11PM by PIB Chennai

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உலக நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இத்தாலியில் வசிக்கும் இந்திய மாணவர்கள், பெண்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இளைஞர்களிடையே நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். உணவுப் பழக்கத்தில் மாற்றம், முறையான உடற்பயிற்சி, உடல் பருமனைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை நோயைத் தடுப்பதற்கான அடிப்படை வழிகள் என அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிக்கப் புதிய வகை மருந்துகள் வந்தாலும், வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதுமே முக்கியம் என்று அவர் கூறினார். இந்த ஆண்டின் உலக நீரிழிவு தினக் கருப்பொருளான 'நீரிழிவு நோய்க்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை' (Early Action on Diabetes) என்பது நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிதல், உடனடிச் சிகிச்சை அளித்தல், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

நடுத்தர வயதினரிடமும், முதிய வயதினரிடமும் முன்பு அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய், தற்போது இளைஞர்களையும் பாதிப்பது கவலைக்குரியது என அவர் தெரிவித்தார். இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோயானது, பணித்திறன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், சிறுநீரகம், கண்கள், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளையும் பாதிக்கக் கூடும் என்று அவர் கூறினார்.

உடல் பருமன், நீரிழிவு, ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று அவர் கூறினார். குறிப்பாக இந்தியர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும் அபாயம் அதிகம் உள்ளதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் கூறினார்.

சரியான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி, உடல், மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று அவர் தெரிவித்தார்.

நீரிழிவு பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்நோயைக் கையாள்வதில் இந்திய நிபுணர்களுக்கு அதிக அனுபவம் உள்ளது எனவும் இந்த அறிவை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 11 முதல் 15 வரை இத்தாலி அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார். தொடர்ந்து அங்குள்ள இந்தியச் சமூகத்தினருடனும் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336254&reg=3&lang=1

(Release ID : 2336254)

****

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336277) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu