இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 9:44PM by PIB Chennai
புதுதில்லி பாரத் மண்டபத்தில் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை உள்நாட்டு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் முழுமையாகப் பயன்படுத்தி, சர்வதேசச் சந்தைகளில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் ஏற்றுமதி 2026 அக்டோபரில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 90 பில்லியன் டாலரை எட்டியுள்ளது எனவும் இதில் பொருட்கள் ஏற்றுமதி 50 பில்லியன் டாலர் என்றும் சேவைகள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலர் எனவும் அவர் தெரிவித்தார். முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி 570 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும், நடப்பாண்டில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலகளாவிய போர், பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும் இந்தியாவின் சர்வதேச வர்த்தகம் 15 முதல் 16 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்று அவர் கூறினார்.
இந்தக் கண்காட்சியில் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், 3,500-க்கும் மேற்பட்ட அரங்குகள், 11 நாடுகளின் பங்கேற்பு இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' அரங்கில் உள்ளூர் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள், கைத்தறி, உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் உள்நாட்டு வணிகம் அதிகரித்துள்ளதாகவும், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 50 கோடி பேர் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது 4 டிரில்லியன் டாலராக உள்ள இந்தியப் பொருளாதாரம், 2047-க்குள் 30 டிரில்லியன் டாலராக உயர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியுடன் அதன் பாரம்பரியம், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியாவின் பொருட்கள், சேவைகள், கலை, கலாசாரத்தை உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் 45-வது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி புதிய தொடக்கமாக அமையும் என்றும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336069®=3&lang=1
(Release ID : 2336069)
TV/PLM/SH