பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் 2-வது தேசிய பழங்குடியினர் இலக்கியத் திருவிழா 2026 தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 7:57PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளான 'ஜன்ஜாதிய கௌரவ் திவஸ்' கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் சார்பில் இரண்டு நாள் தேசிய பழங்குடியினர் இலக்கியத் திருவிழா புதுடெல்லியில் தொடங்கியது. பழங்குடியின மொழிகள் மற்றும் வாய்மொழி மரபுகளைப் பாதுகாப்பது 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' இலக்கிற்கு அவசியம் என மத்திய அமைச்சர் திரு. ஜுவல் ஓரம் வலியுறுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தின் தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி கே. வாசமல்லி இவ்விழாவில் பங்கேற்றுப் பேசினார். சுமார் 2,000 பேர் மட்டுமே பேசும் அழியும் நிலையிலுள்ள தோடர் மொழியைப் பாதுகாக்க, மாற்றியமைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் மற்றும் சர்வதேச ஒலியியல் எழுத்துக்களைப் பயன்படுத்தி 5,700 சொற்கள் கொண்ட அகராதியை உருவாக்கியுள்ளதாகவும், மலைகளையும் இயற்கையையும் தெய்வமாக வழிபடும் தங்கள் கலாச்சாரப் பெருமைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இவ்விழாவின் முதல் நாளில் பழங்குடியினர் இலக்கியம், கவிஞர்கள் சந்திப்பு மற்றும் நாட்டுப்புறக் கதைகள் குறித்த சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன. எழுத்து வடிவமில்லாத பழங்குடியின மொழிகள் மற்றும் வாய்மொழி மரபுகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்தும்போது சம்பந்தப்பட்ட பழங்குடியின சமூகங்களின் வெளிப்படையான அனுமதியைப் பெறுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், அனைத்து மாநில பழங்குடியினர் நலத்துறை இணையதளங்களையும் மத்திய அமைச்சகத்தின் முதன்மைத் தளத்துடன் இணைத்தல், ஆவணக் காப்பகத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரிய அறிவியல்-பொறியியல் அறிவை ஆய்வு செய்து ஆவணப்படுத்துதல் போன்ற முக்கியப் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335599&reg=3&lang=1

***

TV/NB/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335801) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu