இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 6:58PM by PIB Chennai
தில்லியில் நடைபெற்ற 'இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி' தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
எனது அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் பிரல்ஹாத் ஜோஷி அவர்களே, ஸ்ரீபத் நாயக் அவர்களே, தொழில் துறைத் தலைவர்களே, முதலீட்டாளர்களே, புத்தொழில் நிலை நிறுவனங்கள் உலகைச் சேர்ந்த நண்பர்களே, மூத்த அதிகாரிகளே, வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
'இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாட்டிற்கு' உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த ஆண்டு நடைபெறவுள்ள உச்சி மாநாடு மிகவும் சிறப்பானது, ஏனெனில் இது ஒரு தனித்துவமான சூழலில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முழுவதும் எரிசக்தி தொடர்பான நெருக்கடிகள் குறித்த விவாதங்களே முன்னணியில் இருந்ததை நாம் கண்டோம். நமது வாழ்விலும், நமது வளர்ச்சிப் பயணத்திலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவம் இந்த ஆண்டில் இன்னும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டுடன் இணைந்து, சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் 9-வது பொதுச் சபைக் கூட்டமும் நடைபெறுவது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். பசுமை ஹைட்ரஜன் குறித்த நான்காவது மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளும் இங்கே உள்ளனர். இதன் பொருள், இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த நிகழ்வு மிக பிரம்மாண்டமான அளவில் அமைகிறது என்பதாகும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளாக, உலகப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பெருந்தொற்று முதல் மேற்கு ஆசிய நெருக்கடி வரை, உலகம் பல பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது; இதில் மேற்கு ஆசிய நெருக்கடி இன்னும் தொடர்கிறது. இருப்பினும், மற்ற பல நாடுகளைக் காட்டிலும் நாம் இந்தச் சவால்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளோம் என்பதும், இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக நீடிக்கிறது என்பதும் 140 கோடி இந்தியர்களாகிய நமக்கு மிகுந்த பெருமிதத்தைத் தருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தூய்மையான எரிசக்தித் துறையில் முதலீடு செய்யாமலும், இத்துறையில் புதிய கட்டமைப்புகளை உருவாக்காமலும் இருந்திருந்தால், நாம் எதிர்கொண்டிருக்கக்கூடிய நெருக்கடி, உலகின் பிற பகுதிகள் சந்தித்த நெருக்கடியை விட மிக மோசமானதாக இருந்திருக்கும்.
நண்பர்களே,
இந்த உலகளாவிய நெருக்கடி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்தியுள்ளது: எரிசக்தி பாதுகாப்பு என்பது பொருளாதாரப் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடையது. எரிசக்தி பாதுகாப்பின் எதிர்காலம் தூய்மையான எரிசக்தியிலேயே அடங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தொடர்ந்து புதைபடிவ எரிபொருட்களை அதிகமாகச் சார்ந்திருந்தால், உலகப் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் பல்வேறு தடைகளைச் சந்திக்க நேரிடும். புதைபடிவ எரிபொருள் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் அவை சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன. மறுபுறம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது; இதிலிருந்து ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு நாடும் பயனடைய முடியும்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில் இந்தத் துறையில் இந்தியாவின் பயணம், வாக்குறுதிகள், ஆர்வம் மற்றும் செயல்பாடு நிறைந்ததாக இருந்துள்ளது. இதற்குச் சான்றாக, காலநிலை 26 மாநாட்டில் நாங்கள் அளித்த உறுதிமொழியைக் குறிப்பிடலாம். 2021ம் ஆண்டு நடைபெற்ற அந்த உச்சிமாநாட்டில், 2030ம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை எட்டுவதாக இந்தியா உறுதியளித்தது. நாங்கள் சொன்னோம்: இதை நாங்கள் செய்து காட்டுவோம்! பாரிஸ் உடன்படிக்கையின் போது, இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறனில் பாதியை, புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறுவதை இலக்காகக் கொண்டிருந்தோம். இந்த இலக்கை இந்தியா 2025ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது. அதாவது, திட்டமிட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் இந்த இலக்கை எட்டிவிட்டோம். இன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்தே கிடைக்கின்றன. 500 ஜிகாவாட் என்ற இலக்கை நோக்கியும் இந்தியா உறுதியுடன் முன்னேறி வருகிறது. ஏற்கனவே சுமார் 300 ஜிகாவாட் திறனை நாங்கள் எட்டிவிட்டோம். இன்று, சூரிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அடுத்த பத்து முதல் 11 ஆண்டுகளில், புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து மேலும் 500 ஜிகாவாட் புதிய மின் உற்பத்தித் திறனைச் சேர்க்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த இலக்கு சற்றே சவாலானதுதான், ஆனால் என் நாட்டின் திறன்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, நான் உறுதியாகக் கூறுகிறேன்: இதை நாங்கள் செய்து காட்டுவோம்!
நண்பர்களே,
இந்தியாவின் கண்டுபிடிப்புகளும் அனுபவங்களும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன் தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பசுமை ஆற்றல் குறித்த எங்கள் அணுகுமுறையும் இதுவே. இந்தத் துறையில் இந்தியா அடைந்துள்ள வெற்றிகள், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குப் பயனுள்ளதாக அமையும். இதைச் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறேன்.
நண்பர்களே,
பிப்ரவரி 2024ல், நாங்கள் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடங்கினோம். இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஆற்றல் தகடுகளை பொருத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். கடந்த 24 முதல் 25 மாதங்களுக்குள், 65 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளன. நமது அமைச்சர் திரு. பிரஹலாத் ஜோஷி அவர்கள் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு லட்சம் புதிய வீடுகள் இந்த சூரிய ஆற்றல் இயக்கத்தில் இணைந்து வருகின்றன. இதன் தாக்கத்தை மின்சாரக் கட்டணங்களிலும் காண முடிகிறது. ஒரு ஆய்வின்படி, இந்த 65 லட்சம் குடும்பங்களின் மின்சாரக் கட்டணம் சுமார் 76 சதவீதம் குறைந்துள்ளது. பல லட்சம் குடும்பங்களின் மின்சாரக் கட்டணம் பூஜ்ஜியமாக மாறியுள்ளது. மேலும், பல குடும்பங்கள் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை மீண்டும் மின் தொகுப்பிற்கு விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றன. இத்திட்டம் பல நாடுகளில், குறிப்பாக வளர்ந்து வரும் எனப்படும் உலகப் பகுதிகளில், எரிசக்தி பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்த உதவும்.
நண்பர்களே,
இந்தியா தனது குடிமக்களின் அன்றாட வாழ்வில் சூரிய ஆற்றலை ஒரு அங்கமாக மாற்றி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில், தொழில்துறைகளையும் விவசாய நிலங்களையும் சூரிய ஆற்றலுடன் இணைக்கும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் 44,000-க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தற்போது சூரிய ஆற்றல் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 700 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. இந்தியாவின் விவசாயிகளும் பிரதமரின் விவசாயிகளுக்கான சூரிய மின்சக்தி பம்ப் செட் திட்டத்தின் மூலம் பெரும் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் வாயிலாக, 30 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளனர். சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் நீரேற்றும் பம்புகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விவசாயியும், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாயைச் சேமிக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் நீர்நிலைகள் மீது சூரிய தகடுகள் நிறுவும் திட்டத்தையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மீது சூரிய மின் தகடுகளை நிறுவி மின்சாரம் தயாரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இது நீர்நிலைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்த வழிவகுக்கிறது. இத்தகைய திட்டங்கள், நிலத்தை கையகப்படுத்துவதற்குத் தேவைப்படும் செலவுகளையும் குறைக்கின்றன.
நண்பர்களே,
நமது தூய்மையான ஆற்றல் சூழலமைப்பு நீர், சூரிய, காற்று மற்றும் அணுசக்தியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பசுமை ஹைட்ரஜன் துறையில் ஒரு பெரும் பாய்ச்சலை மேற்கொள்வதற்காக இந்தியா ஒரு இயக்கப் பாதையில் முன்னேறி வருகிறது. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். நமது போக்குவரத்துத் துறையையும் பசுமை ஹைட்ரஜனுடன் இணைத்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்புதான், இந்தியா தனது முதல் பசுமை ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தது.
நண்பர்களே,
மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமே போதாது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அதைத் திறம்பட விநியோகிப்பதும், தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். இந்தியாவில், சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆற்றல் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின் உற்பத்தி குறைவாக உள்ள பகுதிகளும் இந்த ஆற்றலால் பயனடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்; அப்போதுதான் அங்குள்ள வீடுகள், பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளும் தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்தி இயங்க முடியும். இதற்காகத்தான் 'பசுமை ஆற்றல் வழித்தடங்கள்' உருவாக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களின் கீழ், மின் கடத்திக் கோடுகள் மற்றும் துணை மின் நிலையங்களைக் கொண்ட பிரத்யேகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது, சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மின்சாரத்தை, அவை உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது. இந்த முயற்சியில், 'ஒரே நாடு, ஒரே மின் கட்டமைப்பு' திட்டத்தின் பங்களிப்பு அளப்பரியது. கடந்த ஆண்டுகளில், ஐந்து பிராந்திய மின் கட்டமைப்புகளை ஒன்றிணைத்து, ஒரே தேசிய மின் கட்டமைப்பாக மாற்றியுள்ளோம். இன்று, ஒட்டுமொத்த நாடும் ஒரே அதிர்வெண்ணில் இயங்கும் ஒரு மின் கட்டமைப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 'பசுமை ஆற்றல் வழித்தட' அமைப்பை மேலும் வலுப்படுத்த, நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளோம். இதற்காக, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு இலக்கை இந்தியா சமீபத்தில் நிர்ணயித்துள்ளது.
நண்பர்களே,
பசுமை ஆற்றல் துறையில் நாம் அடைந்துள்ள வெற்றிக்கு, நமது வளர்ந்து வரும் உற்பத்தித் திறனும் ஒரு முக்கிய காரணமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சூரிய ஆற்றல் தொடர்பான மிகச்சிறிய உதிரிபாகங்களுக்குக் கூட நாம் இறக்குமதியையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. 10 ஆண்டுளுக்கு முன்பு, நமது சூரிய ஆற்றல் சாதனத்தின் உற்பத்தித் திறன் சுமார் 2 ஜிகாவாட்டாக மட்டுமே இருந்தது. இன்று அது 200 ஜிகாவாட்டைக் கடந்துள்ளது. சூரிய மின்கல உற்பத்தித் திறனும் சுமார் 40 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. தற்போது, பிற உதிரிபாகங்களின் உற்பத்தியையும் நாம் விரிவுபடுத்தி வருகிறோம். சுருக்கமாகச் சொன்னால், பசுமை ஆற்றல் துறையில் இந்தியாவின் லட்சியங்கள், நமது 'தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கம் ஆகிய முன்னெடுப்புகளின் வெற்றிக்கான சான்றுகளாகும்.
நண்பர்களே,
இந்தியா மிகக் குறுகிய காலத்திற்குள் பெரும் சாதனைகளை அடையப் பாடுபடுகிறது. நாம் இத்தோடு நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு அரசு கட்டிடம், ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி, ஒவ்வொரு மருத்துவமனை, மற்றும் முழுமையான தெருவிளக்கு அமைப்பு ஆகியவற்றை நாம் சூரிய ஆற்றலுடன் இணைக்க வேண்டும், மேலும் அதை அதிவேகமாகச் செய்ய வேண்டும். மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடையே ஆரோக்கியமான போட்டி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதன் மூலம், சிறப்பாகச் செயல்படுபவர்களுக்குப் பரிசளிக்கப்படலாம், மற்றவர்கள் அவர்களின் வெற்றிக் கதைகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
நண்பர்களே,
விவசாயத்தில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது குறித்து எனக்கு ஒரு யோசனை உள்ளது. நாம் ஏற்கனவே லட்சக்கணக்கான சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் நீரேற்று இயந்திரங்களை விநியோகித்துள்ளோம்; ஆனால், இப்போது நாம் அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். உணவு வழங்குபவர் என்பவர்கள் ஆற்றல் வழங்குபவராக மாற வேண்டும் என்பதே எனது தொலைநோக்குப் பார்வை. விவசாயிகள் தங்கள் பயன்பாடற்ற நிலங்களில் சூரிய ஆற்றல் தகடுகளை நிறுவ வேண்டும். வயல்களின் எல்லைப் பகுதிகளைக் கூட சும்மா விடக்கூடாது; அங்கேயும் சூரிய ஆற்றல் தகடுகளை நிறுவலாம். இது கூடியவரை அதிக கிராமங்களைச் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நண்பர்களே,
சூரிய ஆற்றல் புரட்சியின் இந்த புதிய கட்டம், வெறும் பயன்பாட்டை மட்டும் குறிப்பதல்ல; இது புத்தாக்கத்தையும் சார்ந்தது. எனவே, நமது புத்தொழில் நிறுவனங்கள், ஐஐடி அமைப்புகள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு நான் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன்: முன்வந்து, வீட்டுத் தேவைகளில் பெரும்பாலானவற்றை சூரிய ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யக்கூடிய மாதிரிகளை உருவாக்குங்கள். சூரிய ஆற்றலை நாள் முழுவதும், அனைத்து பருவங்களிலும் கிடைக்கச் செய்யும் தீர்வுகள் நமக்குத் தேவை. ஒரு குடும்பம் தனது வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட சூரிய ஆற்றல் மின் உற்பத்தி அமைப்பைப் பயன்படுத்தி, சமையல் செய்யக்கூடிய நிலையை நாம் அடைய வேண்டும். நாம் ஒரு 'தூய்மையான சமையல்' இயக்கத்தைத் தொடங்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மீதான சார்புநிலையை இயன்றவரை குறைக்க வேண்டும். மேலும், நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறும் சூழலை உருவாக்க வேண்டும்; அவர்கள் தங்கள் ஸ்கூட்டர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை, தங்கள் சொந்த சூரிய ஆற்றல் அமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டே வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இது நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்க உதவும்.
நண்பர்களே,
பால் பண்ணைத் துறையில் சூரிய ஆற்றலை ஊக்குவிக்கும் தயாரிப்புகளும் நமக்குத் தேவைப்படுகின்றன. கால்நடைத் தீவனம் தயாரிப்பது முதல், பயிர் அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள் வரை, ஒவ்வொரு பணிக்கும் சூரிய ஆற்றலில் இயங்கும் உபகரணங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
அடுத்த தலைமுறைக்கான புத்தாக்கங்கள் இன்றி, இவை எதையும் சாதிக்க முடியாது. இதற்குத் தேவையான வன்பொருள்கள் நம் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சேமிப்புத் தீர்வுகள் நமக்கு அவசியம். புதிய மின்கலச் சேமிப்புத் திறனை நாம் உருவாக்க வேண்டும். இது உங்கள் அனைவருக்கும், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். ஆராய்ச்சித் துறையில் உள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் நீங்கள் உருவாக்கும் தீர்வுகள், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குப் பயன்படும்.
நண்பர்களே,
இந்தியா உலகின் மிக இளமையான நாடுகளில் ஒன்றாகும், மேலும் தூய்மையான எரிசக்தியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இன்றும், ஆயிரக்கணக்கான மக்கள் இத்துறையில் வேலைகளைப் பெற்று வருகின்றனர், மேலும் பசுமை வேலைகளுக்கு மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன. பேனல்கள் மற்றும் பிற வன்பொருட்களைத் தயாரிப்பது முதல் நிறுவுதல், பழுதுபார்த்தல் மற்றும் போக்குவரத்து வரை பல்வேறு துறைகளில் இந்த வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில், சூரிய ஆற்றல் திறன் மேலும் அதிகரிக்கும்போது, இன்னும் எத்தனை வேலைகள் உருவாக்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள். சமையலறை அடுப்புகள் முதல் போக்குவரத்து அமைப்புகள் வரை, அனைத்தும் சூரிய சக்தி மற்றும் பசுமை ஆற்றலால் இயங்கும்போது, முற்றிலும் ஒரு புதிய தொழில்துறை உருவாகும்.
நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியா வழங்கும் தேவை, அளவு மற்றும் பரப்பளவை வேறெங்கும் காண்பது கடினம். அதேபோல், இந்தியா வழங்கும் அரசியல் மற்றும் கொள்கை நிலைத்தன்மையைப் பெறுவதும் அரிது. இதன் பலன்களை நாம் இப்போது கண்டு வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், அதாவது 164 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் மீண்டும் முதலீடு செய்யுங்கள் உச்சிமாநாட்டிலிருந்து இன்று வரையிலான வெறும் இரண்டு ஆண்டுகளில் மட்டும், இந்தத் துறையில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய், அதாவது 63 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் வந்துள்ளன. இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள், இத்துறையில் 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், அதாவது சுமார் 220 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி துறையில் உங்களுக்கெல்லாம் புதிய வாய்ப்புகள் கொண்ட ஒரு புதிய அடிவானம் விரிந்து கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
இந்தியா உலகிற்கு 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற செய்தியை வழங்கியுள்ளது. நமது தூய்மையான எரிசக்தி பயணத்திலும் இதே தத்துவமே பிரதிபலிக்கிறது. 'சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு' உருவானதன் பின்னணியில் இந்தச் சிந்தனைதான் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்குத் தேவையான நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவை, அவற்றை அவசியமாகக் கொண்ட ஒவ்வொரு நாட்டையும் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களது முயற்சியாகும். இதனால்தான், ஆப்பிரிக்காவிற்காக 200 மில்லியன் டாலர் மதிப்பிலான 'ஆப்பிரிக்க சூரிய ஆற்றல் வசதி' குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நமது பருவநிலை இலக்குகளை அடைவதற்கு வரவிருக்கும் பத்தாண்டுகள் மிக முக்கியமானவை. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும், அத்தகைய எதிர்காலத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு நாட்டையும் இந்த இலக்குடன் நாம் இணைக்க வேண்டும். ஒவ்வொரு பிராந்தியமும் இந்த மாற்றத்தில் பங்கேற்பாளராக மாற வேண்டும். அப்போதுதான் நம்மால் தூய்மையான, பசுமையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்த வார்த்தைகளுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அவர் தனது உரையை இந்தியில் நிகழ்த்தினார்.
(Release ID: 2331737)
***
AD/VK/SU