மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

நவம்பர் 9 முதல் 1,000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விலை குறைகிறது - மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,502 கோடிக்கு மேல் சேமிப்பு கிடைக்கும்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 3:51PM by PIB Chennai

புற்றுநோய்க்கான 137 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) விற்பனை லாப வரம்பை மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் 1,031 மருந்துகளின் விலை குறைகிறது. திருத்தப்பட்ட விலைகள் நவம்பர் 9, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ரசாயனம் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுவரை 76 மருந்து நிறுவனங்கள், 121 வகையான மருந்துகளுக்கான 1,225 தயாரிப்புகளின் திருத்தப்பட்ட விலையை அறிவித்துள்ளன. இதில் 600 மருந்துகளின் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பால் மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,502.31 கோடி சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகமாகாத 10 முதல் 15 மருந்துகளுக்கும், அவை அறிமுகமாகும்போது இந்த விலைக் கட்டுப்பாடு பொருந்தும்.

முக்கிய அறிவுறுத்தல்கள்:

மருந்துகளின் திருத்தப்பட்ட விலைப்பட்டியலை மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் தங்களது இணையதளங்களிலும் வளாகங்களிலும் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்.

மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் இதைக் கண்காணிப்பார்கள்.

பொதுமக்கள் பார்மா சஹி தாம் (Pharma Sahi Daam) செயலி, என்பிபிஏ (NPPA) இணையதளமான www.nppa.gov.in ஆகியவை மூலம் மருந்துகளின் விலையைச் சரிபார்க்கலாம்.

அதிகபட்ச விலையைவிடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம்.

புகார் அளிக்க:

மின்னஞ்சல்: monitoring-nppa[at]gov[dot]in

கட்டணமில்லா உதவி எண்: 1800-11-1255

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333949&reg=3

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333983) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam