உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டில் தொழில், சுற்றுலா வளர்ச்சியுடன் எல்லைக் கிராமங்களின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 5:23PM by PIB Chennai

உத்தராகண்டில் தொழில், சுற்றுலா வளர்ச்சியுடன் எல்லைக் கிராமங்களின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

டேராடூனில் நடைபெற்ற உத்தராகண்ட் மாநில தின விழாவில் பேசிய அவர், 2022 முதல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 சதவீதமும், தனிநபர் வருமானம் 40 சதவீதமும் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.3.56 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதில், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். ரூ.1,508 கோடி மதிப்பிலான 63 வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

மாநிலத்தில் பொது சிவில் சட்டம், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் கடுமையான சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் சுற்றுலாத் துறை 380 சதவீதம் வளர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். வெளியில் இருந்து பணம் பெறுதலைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து தொழில்துறைப் பொருளாதாரமாக மாநிலம் மாற்றப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

தில்லி–டேராடூன் பொருளாதார வழித்தடம், சார்தாம் சாலைத் திட்டம், ரயில்வே, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களுடன் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடும், கூட்டுறவு அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 51 எல்லைக் கிராமங்களில் ரூ.270 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முந்தைய அரசுகள் எல்லைப் பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்தவில்லை என்றும், தற்போதைய அரசு எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலம் உருவாகப் பல ஆண்டுகளாக மக்கள் போராடினர் எனவும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2000 நவம்பர் 9-ல் உத்தராகண்ட் மாநிலத்தை உருவாக்கியதை அவர் சுட்டிக் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோரின் தலைமையில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலமாக உத்தராகண்டை உருவாக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333672&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333727) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati