நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 4:41PM by PIB Chennai
நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அரிசி, நெல் இருப்பு விவரம் கட்டாயம்: நாடு முழுவதும் அரிசி, நெல் இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், பெரிய வணிக நிறுவனங்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆகியோர் தங்களின் இருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பாசுமதி, பிரீமியம் பாசுமதி அல்லாத அரிசி, சாதாரண அரிசி, புழுங்கல் அரிசி, உடைந்த அரிசி, நெல் என ஆறு வகைகளில் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யாதவர்கள், இருப்பு வரம்பை மீறுபவர்கள் ஆகியோர் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தேவைக்கேற்ப அரிசி, நெல் இருப்புக்கு உச்சவரம்பு விதிக்கலாம். இந்த உத்தரவு 2027 ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.
தென் மாநிலங்களில் அரிசி கிடைப்பதை அதிகரிக்க தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகிய அமைப்புகளுக்கு கூடுதல் பாரத் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலிவு விலையில் அரிசி கிடைப்பதுடன், சில்லறை விலையும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27-ம் ஆண்டுக்கான திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS-D) கீழ், மின்னணு ஏலம் மூலம் விற்கப்படும் அரிசியின் இலக்கு 25 லட்சம் டன்னிலிருந்து 50 லட்சம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 31 வரை 25 லட்சம் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 11 லட்சம் டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333623®=3&lang=1
***
TV/PLM/SU