PIB Backgrounder
azadi ka amrit mahotsav

முக்கியக் கனிமங்கள் சுத்திகரிப்பை ஊக்குவிப்பதற்கான மூலதனச் செலவு ஆதரவுத் திட்டம்: லித்தியம், நிக்கல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ரூ.2,814 கோடி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 1:56PM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத லித்தியம், நிக்கல் போன்ற முக்கியக் கனிமங்களை உள்நாட்டில் சுத்திகரிப்பதற்கான செயல்திறனை வலுப்படுத்தும் நோக்கில், ரூ.2,814 கோடி மதிப்பிலான மூலதனச் செலவு ஆதரவுத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2026 செப்டம்பர் 04 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள், பேட்டரி சேமிப்பு, மின்னணுவியல், பாதுகாப்புத் துறை, சிறப்பு எஃகு தயாரிப்பு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

தற்போது சர்வதேச அளவில் முக்கிய கனிமங்களின் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் சில குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே உள்ளதால், விநியோகச் சங்கிலியில் புவிசார் அரசியல் சார்ந்த தடைகளும், விலையேற்ற அபாயங்களும் ஏற்படுகின்றன. இந்தியா இதுவரை 24 முக்கியக் கனிமங்களை அடையாளம் கண்டுள்ளது. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட உயர்தர கனிமங்களுக்கு இறக்குமதியையே பெருமளவு சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, இறக்குமதிச் சார்பைக் குறைக்கவும், விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்கவும் இப்புதிய திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டம் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தலா இரண்டு லித்தியம், இரண்டு நிக்கல் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதற்குத் தகுதியான மூலதன முதலீட்டில் 30 சதவீத மானியம் வழங்கப்படும். இதற்காக தலா 30 கிலோ டன் திறன் கொண்ட இரண்டு லித்தியம் ஆலைகளுக்கு ரூ.1,000 கோடியும், தலா 50 கிலோ டன் திறன் கொண்ட இரண்டு நிக்கல் ஆலைகளுக்கு ரூ.1,800 கோடியும் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக மத்திய அரசின் நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்படும். இரண்டு நிலைகளைக் கொண்ட வெளிப்படையான போட்டி ஏல முறை வாயிலாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

திட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கேற்ப மூன்று தவணைகளாக இந்த மானிய நிதி விடுவிக்கப்படும். ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆலைகளைத் தொடங்கி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை முறையாகக் கண்காணித்து வழிநடத்துவதற்காக மத்திய சுரங்கத்துறைச் செயலர் தலைமையிலான நிர்வாகக் குழு, தொழில்நுட்ப நிதி மதிப்பீட்டுக் குழு, திட்ட மேலாண்மை அமைப்பு ஆகிய மூன்று அடுக்கு நிர்வாகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய முக்கியக் கனிமங்கள் இயக்கம் மற்றும் மறுசுழற்சி முயற்சிகளுடன் இப்புதிய மூலதன மானியத் திட்டம் இணைவதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த கனிம மதிப்புச் சங்கிலியில் நிலவிய இடைவெளி முழுமையாக சரிசெய்யப்படுகிறது. உள்நாட்டிலேயே கனிமங்களை உயர்தரப் பொருட்களாக மாற்றுவதுடன், இளைஞர்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளையும் இத்திட்டம் உருவாக்கும். 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை எட்டுவதற்கும், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் இத்திட்டம் முக்கிய காரணியாக விளங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332964&reg=3&lang=1

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333195) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Bengali , Gujarati