இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 2:07PM by PIB Chennai
தங்க, வெள்ளி நகைகளின் தூய்மையை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் நம்பிக்கையுடன் ஆபரணங்களை வாங்க இந்தியத் தரநிலைகள் அமைப்பின் (பிஐஎஸ்) ஹால்மார்க் தர நிர்ணய முறை உதவுகிறது. குறிப்பிட்ட தரநிலைகள், டிஜிட்டல் கண்காணிப்பு, தொடர் ஒழுங்குமுறை ஆய்வுகள் வாயிலாக இக்கட்டமைப்பை இந்தியத் தரநிலைகள் அமைப்பு நிர்வகித்து வருகிறது. 2021-ல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரக்குறியீடு முறை கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து, 2026 அக்டோபர் 15 நிலவரப்படி 65 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்கு ஹால்மார்க் பிரத்யேக அடையாள எண்கள் (HUID) வழங்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் பதிவு செய்த நகை வியாபாரிகளின் எண்ணிக்கை 43,153-லிருந்து 2,36,624 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க் முறை கட்டாயமில்லை (விருப்பத்தின் அடிப்படையில்) எனும் போதிலும், 2025 செப்டம்பர் 1 முதல் பிரத்யேக அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு, இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக இந்தியக் குடும்பங்களில் தங்கம் சேமிப்பாகவும் மதிப்புமிக்க செல்வமாகவும் திகழ்கிறது. தங்கம் இயற்கையிலேயே மென்மையான உலோகம் என்பதால் பிற உலோகங்களுடன் கலந்தே நகைகள் செய்யப்படுகின்றன. இந்நிலையைத் தவறாகப் பயன்படுத்தி கலப்படம் செய்வதையும் தரக்குறைபாடுகளையும் தடுக்கும் வகையில், மத்திய அரசு ஹால்மார்க் முறையைக் கட்டாயமாக்கியுள்ளது. 2000-ம் ஆண்டில் விருப்பத் தேர்வாகத் தொடங்கப்பட்டு, 2021 ஜூன் 23 முதல் 256 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்ட தங்க ஹால்மார்க் நடைமுறை, தற்போது 392 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்கும் போது நுகர்வோர் மூன்று முக்கிய அம்சங்களைக் கவனிக்க வேண்டும். இந்தியத் தரநிலைகள் அமைப்பின் அதிகாரபூர்வ முத்திரை, தூய்மைத் தரக்குறியீடு, எழுத்துகள் & எண்கள் அடங்கிய 6 இலக்க பிரத்யேக அடையாளக் குறியீடு (HUID) ஆகியவை நகைகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக நகைக் கடைகள் தங்களை ஒற்றைச் சாளர இணையதளத்தில் பதிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு மையங்கள் மூலம் நகைகளை ஆய்வு செய்கின்றன. நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் நகைகளின் எடை, தூய்மை ஆகியவை நேரடியாகக் கணினியில் பதிவு செய்யப்பட்டு அடையாள எண்கள் உருவாக்கப்படுகின்றன.
நகைகளின் விவரங்களை இணைய வழியில் மாற்றிக்கொள்ளும் வசதியும், போலி முத்திரைகளைத் தடுக்கும் கண்காணிப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் நகை விற்பனையாளர்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நுகர்வோர் தாங்கள் வாங்கும் தங்க, வெள்ளி நகைகளின் தூய்மை, எடை, தயாரிப்பாளர் போன்ற விவரங்களை 'பிஐஎஸ் கேர்' என்ற கைப்பேசி செயலி வாயிலாக பிரத்யேக அடையாள எண்ணை உள்ளீடு செய்து நேரடியாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும். தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் இச்செயலி இயங்குகிறது.
பிஐஎஸ் ஹால்மார்க் தரக்குறியீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 2026 ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,582 நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நவீனத் தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் நுகர்வோரின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் இந்தியத் தரநிலைகள் அமைப்பின் ஹால்மார்க் தரக்குறியீடு முறை முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332987®=3&lang=1
***
AD/PD/RJ