குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பொது நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம் : குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 4:55PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பொது நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய பொது நிர்வாக அமைப்பின் 72-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய இணையமைச்சரும், இந்திய பொது நிர்வாக அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங், அதன் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திர குமார் பாக்டே, பொதுக்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மண்டல, உள்ளூர் கிளைகளின் பிரதிநிதிகள், பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

'தேசிய ஒற்றுமை தினம்', சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி இந்த நிகழ்வு அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்தினார். நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கியவர் சர்தார் படேல் என்று அவர் குறிப்பிட்டார்.

 

2026-ம் ஆண்டில், இந்த அமைப்பு மேற்கொண்ட முக்கியமான நிறுவன சீர்திருத்தங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், குறிப்பாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 52-வது மேம்பட்ட தொழில்முறைத் திட்டம், கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டம், மத்திய குடிமைப் பணிகள், மத்திய கணக்குகள் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய முன்முயற்சிகள்  நிறுவனத்தின் நிர்வாக, நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மேலும், டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வழிகாட்டுதல்,  பொது நிர்வாகத்திற்கான முதன்மையான நிறுவனமாக மேம்படுத்த பணியாற்றிய தலைமை இயக்குநர், பேராசிரியர்கள், பணியாளர்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

பொது நிர்வாகம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்றைய நிர்வாக நடைமுறைகள்  விரைவானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும், தொழில்நுட்ப வசதி கொண்டதாகவும், தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், முடிவுகளை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

நல்லாட்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு அளவிடப்படக் கூடாது என்றும், அது மக்களின் மகிழ்ச்சி, வாழ்க்கைத்தரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330891®=3&lang=1

(Release ID: 2330891)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330943) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam