இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 3:53PM by PIB Chennai
விவசாயக் குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வேளாண் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் (கிசான்) திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 24-வது தவணைத் தொகையை மத்திய அரசு இன்று (2026 அக்டோபர் 30) குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுவித்தது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.18,690 கோடி நிதி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, வெளிப்படையான முறையில் நேரடிப் பணப் பரிமாற்ற முறை வாயிலாக இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் அயராது பாடுபடும் விவசாயிகளை கௌரவிக்கும் ஒரு மகத்தான நடவடிக்கையாகும்.
2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம், சாகுபடி நிலங்களை வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதரவை வழங்கி வருகிறது. இந்த நிதி உதவி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக, விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், வேளாண் கருவிகள் வாங்குதல், பாசன வசதிகள் உள்ளிட்ட சாகுபடித் தேவைகளுக்கு இந்த நிதி சரியான நேரத்தில் உதவியாக உள்ளது. இதன்மூலம், விவசாய உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு, அவர்கள் பிறரிடம் கடன் வாங்கும் நிலையும் கணிசமாகக் குறைந்து அவர்களின் வாழ்வாதாரம் நிலைபெறுகிறது.
இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள 24 தவணைகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.4.64 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பலன்களைப் பெற விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களை பிஎம்-கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், இத்திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் நீட்டிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. மேலும், 2026-27 மத்திய பட்ஜெட்டிலும் இத்திட்டத்திற்காக ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நிதிப் பரிமாற்ற நடைமுறைகள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம், மிகவும் பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தப்படுகின்றது. பொது சேவை மையங்கள் அல்லது மொபைல் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்த பின்னர், மாநில அரசுகள் தகுதியைச் சரிபார்த்து தகவல்களைப் பதிவேற்றுகின்றன. தொடர்ந்து பொது நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் தேசிய பணப்பரிமாற்ற கழகம் (என் பிசிஐ) வாயிலாக பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல்கள் வெளிப்படைத்தன்மைக்காக கிராம அளவில் பொதுவெளியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவுச்சொல், கைரேகை சரிபார்ப்பு மட்டுமல்லாது, முகம் அடையாளம் காணும் அதிநவீன தொழில்நுட்பமும் இத்திட்டத்தின் மொபைல் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும் தகவல்களை வழங்கவும் கிசான்-இ மித்ரா என்ற செயற்கை நுண்ணறிவு உதவி அமைப்பும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் சேவை வழங்கி வரும் இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இத்தகைய விரிவான தொழில்நுட்பக் கட்டமைப்புகள், சீரான நிதி ஆதரவு ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வேளாண் துறையை மேலும் வலுவடையச் செய்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330414®=48&lang=1
***
SS/PD/SH