இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 2:33PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் சியோலில் இன்று ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத் தலைவர் திரு சுங் சி சன்னை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள புதிய பசுமைக் கப்பல் கட்டும் தளம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
இந்தியா - தொன்கொரியா இடையே கப்பல் கட்டுமானம், விரிவான கடல்சார் தொழில்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், திரு சர்பானந்த சோனோவால் தென்கொரியாவில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுவரும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு இத்திட்டத்திற்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளதுடன் அதை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகையையும் ஏற்படுத்தியுள்ளது. ஹெச்டி ஹூண்டாயின் கப்பல் கட்டும் பிரிவான ஹெச்டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல் பொறியியல் நிறுவனம் இத்திட்டத்தில் முதன்மை முதலீட்டாளராக பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.
இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதில் தங்களுடைய பொதுவான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் வளர்ச்சியை கூட்டு பணிக்குழு மேற்பார்வையிடும். அத்துடன் விரிவான திட்ட அறிக்கை 6 மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கப்பல் கட்டும் தளப் பணிகளை ஒருங்கிணைந்து விரைவுபடுத்துவதற்கான திட்டம் தங்களிடம் உள்ளதாக திரு சர்பானந்த சோனோவால் அப்போது கூறினார். 2026 ஏப்ரல் 20 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தாங்கள் இணைந்து உருவாக்க விரும்பும் திட்டத்திற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். 4 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் அமையும் இந்த புதிய கப்பல் கட்டும் தளம் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று அவர் கூறினார். அதற்கான முழு ஆதரவை தாங்கள் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழில்துறைப் பூங்கா நிறுவனமும், ஹெச்டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல் பொறியியல் நிறுவனமும் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய கப்பல் கட்டும் தளத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியதாக கூறினார்.
மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஹெச்டி ஹூண்டாய் தலைவர் திரு சுங் சி சன்னுடன் பேசியபோது, பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தாம் முன்வைத்த தொலைநோக்குப் பார்வையை விரைவாக செயல்படுத்த சியோல் வந்ததாக கூறினார். ஹெச்டி ஹூண்டாயின் உலகளாவிய எதிர்காலத்தின் முக்கியத் தூணாக இந்தியாக இருக்க வேண்டும் என்பது அந்த தொலைநோக்குப் பார்வையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329433®=3&lang=1
***
SS/IR/LDN/GS