புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையில் சூரியசக்தி பயன்பாடு குறித்த சர்வதேச மாநாடு தில்லியில் தொடக்கம்:

மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌகான், பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 5:40PM by PIB Chennai

வேளாண் துறையில் சூரிய மின்சக்தி பயன்பாடு குறித்த அக்ரிவோல்டாயிக்ஸ் என்ற மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாட்டை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹானும், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியும் இணைந்து இன்று (21.10.2026) புதுதில்லியில் தொடங்கி வைத்தனர். தொடக்க அமர்வில் உரையாற்றிய வேளாண் அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், விவசாயத்துடன் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுவதாக கூறினார். இதன் மூலம் விவசாயிகள்  உணவு உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் மின் உற்பத்தியாளர்களாகவும் மாற முடியும் என்று அவர் தெரிவித்தார். விவசாயத்தையும் சூரிய மின்சக்தியையும் ஒருங்கிணைப்பது உலகளாவிய நலனை மேம்படுத்தி, விவசாயிகளின் பொருளாதார வளத்தை அதிகரிக்கும் என்று திரு சௌகான் எடுத்துரைத்தார்.

விவசாய நிலங்களுக்கு மேலே நிறுவப்படும் பேனல்கள் மூலம் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதோடு, பயிர்கள் வளரவும் வழிவகை செய்வதே வேளாண் சூரியசக்தி தொழில்நுட்பம் என்று திரு சௌஹான் விளக்கினார். நவீன வாழ்க்கைக்கும் விவசாயத்திற்கும் மின்சாரம் இன்றியமையாததாகிவிட்டதாகவும், எனவே மின் உற்பத்தியை விவசாயத்துடன் ஒருங்கிணைப்பது விவசாயிகளின் நலனை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தமது உரையில், பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து தூய்மையான எரிசக்தித் திறனை விரிவுபடுத்துவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் அல்லாத நிறுவப்பட்ட மின்சாரத் திறன் 308.03 ஜிகாவாட்டை எட்டியுள்ளது என்றும், இது நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறனான சுமார் 560 ஜிகாவாட்டில் 55 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 160 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில், 47.5 மில்லியன் ஹெக்டேர், அதாவது சுமார் 30 சதவீதம், வேளாண் சூரிய மின்சக்திக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏற்றது என அவர் கூறினார்.

விவசாயத்தில் சூரிய ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை எடுத்துரைத்த திரு ஜோஷி, பிரதமரின் குசும் திட்டமானது பரவலாக்கப்பட்ட சூரிய மின் நிலையங்கள், தனித்த சூரிய பம்புகள், மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள பம்புகளை சூரிய சக்தி மின்மயமாக்குதல், ஆகியவற்றை ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் குசும் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ், உலகின் மிகவும் லட்சியமிக்க வேளாண் சூரியசக்தித் திட்டங்களில் ஒன்று தொடங்கப்படும் என்று அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326059&reg=3&lang=1

***

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327635) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada