பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை: அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சிக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தலைப்பிலான 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய தொடக்க உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 12:11PM by PIB Chennai

மேன்மை தங்கியவர்களே,

மாண்புமிகு தலைவர்களே,

வணக்கம்!

பிரிக்ஸ் அமைப்பின் விரிவடைந்த குடும்பத்தில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இன்று, இந்த அரங்கம் பல்வேறு கண்டங்களையும், கலாச்சாரங்களையும், வேறுபட்ட வளர்ச்சிப் பயணங்களையும் ஒன்றிணைத்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் வளர்ந்து வரும் வலிமை, ஈர்ப்பு மற்றும் இதுவரை இல்லாத அளவிலான நம்பிக்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் தலைமையின் கீழ், மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய இந்த நான்கு தூண்களையே மையமாகக் கொண்டு நமது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும், நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையை அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான ஒத்துழைப்பாக மாற்ற முடிந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இன்று உலகில் மோதல்களும் பதற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, சாதாரண மக்களின் வாழ்க்கையில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தொற்றுநோய்கள், பருவநிலைப் பேரிடர்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள் ஆகியவை, ஒன்றோடொன்று இணைந்துள்ள இன்றைய உலகில் எந்தவொரு நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன. எனவே, பிரிக்ஸ் அமைப்பிற்குள் மீள்திறனை வலுப்படுத்துவதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம். சவால்களை உரிய நேரத்தில் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும், விரைந்து நடவடிக்கை எடுப்பதும் அதே அளவுக்கு முக்கியமானதாகும்.

இந்த அணுகுமுறையின் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவற்றுக்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதற்கு நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். பேரிடர் மேலாண்மைக்காக முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் சரக்கு விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு நமது விநியோகச் சங்கிலிகளை மேலும் நம்பகமானதாகவும், நெருக்கடிகளைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும்.

நண்பர்களே,

புதுமை என்ற தூணின் கீழ், பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனங்களுக்கான அடைகாப்பு வலையமைப்பு, நமது புத்தொழில் நிறுவனங்களையும் அவற்றுக்கான அடைகாப்பு மையங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும். புதுமையான மற்றும் பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக, பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனங்களுக்கான புதுமை நிதியை உருவாக்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

பிரிக்ஸ் டிஜிட்டல் வேளாண்மை கட்டமைப்பு, விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முயற்சியின் மூலம், செயற்கை நுண்ணறிவு, புவியியல் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் உண்மையான தேவைகளுடன் இணைக்கப்படும்.

தொழில்நுட்பத்தையும் முக்கியமான கனிம வளங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்துவது, நமது பொதுவான முன்னேற்றத்திற்கு தடையாக அமையக்கூடும். எனவே, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

நண்பர்களே,

பிரிக்ஸ் தளத்தின் மூலம் நட்புறவு, கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா முன்னெடுத்துள்ளது.

பிரிக்ஸ் ஒத்துழைப்பு என்பது அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பாக மட்டும் இருக்கக் கூடாது என்பதையே நமது முயற்சியின் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது தொழில்முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் ஆகியோரும் இதில் தீவிரமாகப் பங்கேற்பதை உறுதி செய்ய முயற்சித்துள்ளோம்.

பிரிக்ஸ் கனெக்ட் மூலம், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான தகுதி, பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றை ஊக்குவித்துள்ளோம்.

சிறு நிறுவனங்களை அறிவு, நிதி மற்றும் புதிய சந்தைகளுடன் இணைப்பதற்காக, பிரிக்ஸ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு இணையதளத்தை தொடங்கியுள்ளோம். நமது நகரங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக, பிரிக்ஸ் நகர்ப்புறப் போக்குவரத்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்திய நாகரிகத்தில் இயற்கைக்கு தாயின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று மாற்றானவை அல்ல; மாறாக, இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பவை என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். பிரிக்ஸ் அமைப்பிலும், மனித வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

இதுவே நிலைத்தன்மைக்கான அடித்தளமாகும். எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் ஆற்ற வேண்டிய பொறுப்பும் இதுவாகும். இந்தத் திசையில், பல்வேறு துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

திறன்மிகு மின்சாரத் தொகுப்புகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு தொடர்பாக, பிரிக்ஸ் டிஜிட்டல் சிறப்பு மையத்தை அமைத்துள்ளோம். இதன் மூலம், நமது தூய்மையான எரிசக்தி அமைப்புகளை மேலும் நம்பகமானதாகவும், திறன்மிக்கதாகவும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்ற முடியும்.

வேளாண் சூழலியல் மற்றும் மறுஉயிர்ப்புத் திறன் வேளாண்மைக்கான சிறப்பு மையங்கள், பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுடன் இணைக்கும். சமூகங்களை அடிப்படையாகக் கொண்டு பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைகள், பருவநிலை நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு அறிவை ஒரு முக்கிய அடித்தளமாக மாற்றும்.

நண்பர்களே,

இந்த நான்கு தூண்களின் அடிப்படையில், பிரிக்ஸ் அமைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியை ஊக்குவிக்க நாம் முயற்சித்து வருகிறோம். பிரிக்ஸ் அமைப்பிற்குள் உருவாக்கப்படும் தீர்வுகளின் பலன்கள், பிரிக்ஸ் நாடுகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். உலகின் தென்பகுதி நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அவற்றை மாற்றியமைத்துப் பயன்படுத்தக்கூடியதாகவும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் ஆக்க வேண்டும்.

நண்பர்களே,

எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பின் மீது உலகில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது என என்னால் கூற முடியும்;. ஏனெனில், பிரிக்ஸ் அமைப்பிற்குள்:

அவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கப்படுகிறது.

அவர்களின் அனுபவங்கள் மதிக்கப்படுகின்றன.

அவர்களுக்காக மட்டும் தீர்வுகள் உருவாக்கப்படுவதில்லை; அவர்களுடன் இணைந்தே தீர்வுகள் உருவாக்கப்படுகின்றன.

பிரிக்ஸ் அமைப்பின் வலிமை என்பது நமது பன்முகத்தன்மையிலும், ஒத்துழைப்பிலும் உள்ளது.

நாம் வெவ்வேறு யதார்த்தங்களிலும், வெவ்வேறு சூழல்களிலும் வேரூன்றியிருக்கலாம். ஆனால், ஒத்துழைப்பின் மூலம் நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறுகிறோம்; மனிதகுலத்தின் நலனுக்காக வளம் பெறுகிறோம்.

நமது பன்முகத்தன்மை தொடர்ந்து நமது அடையாளமாக இருக்கட்டும்; நமது ஒத்துழைப்பு நமக்கு உத்வேகமாக அமையட்டும்; நமது முன்னேற்றம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காகப் பயன்படட்டும்.

மிக்க நன்றி. 

***

(Release ID: 2309664)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327169) வருகையாளர் எண்ணிக்கை : 7