பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 3:38PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வாயிலாக உரிய காலத்தில் மேற்கொள்ளப்படும் பதவி உயர்வு நடவடிக்கைகளுக்காகப் ஆயுதப் படைத் தலைமையக சங்கப் பிரதிநிதிகள் குழு தங்களது பாராட்டைத் தெரிவித்துள்ளது. மத்திய பணியாளர், பொதுக்குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை நேரில் சந்தித்த பிரதிநிதிகள் குழுவினர், ஊழியர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் திரு பவன் குமார், ஆயுதப் படைத் தலைமையக சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு பங்கஜ் யாதவ் தலைமையிலான இக்குழுவினர், பிரிவு அலுவலர் பணியிடங்கள், பதவி உயர்வு வாய்ப்புகள், பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினர். 2018 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பிரிவு அலுவலர் பணியிடங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பணியில் சேர்ந்துள்ளதால், தற்போதுள்ள ஆட்தேர்வு ஒதுக்கீட்டைச் சீரமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அப்போது உறுதியளித்தார். கருணை அடிப்படையிலான நியமனங்களில் நிலவும் 5 சதவீத வரம்பு, தகுதி அளவுகோல்கள், அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உரிய நிர்வாக, சட்ட விதிகளுக்குட்பட்டு ஊழியர்களின் கோரிக்கைகள் கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325959®=3
***
SK/PD/SU