பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 9:17PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி அவர்களே, தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் யோகேஷ் சிங் அவர்களே, ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரி முதல்வர் சிம்ரித் கவுர் அவர்களே, அஜய் அவர்களே, மல்லிகா அவர்களே, ரஜத் அவர்களே, ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியுடன் தொடர்புடையவர்களே, பேராசிரியர்களே, பணியாளர்களே, முன்னாள் மாணவர்களே, எனது இளம் நண்பர்களே!

நான் ஆறாவது வீரர். இன்றைய நாள் ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரிக்கு மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். அதே நேரத்தில், நாட்டின் கல்வி உலகிற்கும் இது மிகவும் முக்கியமான நாளாகும். இங்கு ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியுடன் தொடர்புடைய பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். ஸ்ரீ ராம்  வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கல்லூரியின் நிறுவனர் சர் ஸ்ரீ ராம் அவர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். அவரது தொலைநோக்குப் பார்வைக்கு தலைவணங்குகிறேன்.

நண்பர்களே,

ஒரு மனிதர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் அனுபவங்களின் பெருங் கடலாகக் கருதப்படுகிறார். அதேபோல், ஒரு கல்வி நிறுவனம் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, அது சாதனைகள் மற்றும் உத்வேகங்களின் பெருங்கடலாக மாறுகிறது. 100 ஆண்டுகாலப் பயணத்தில், ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி பல தலைமுறைகளை உருவாக்கி, அவர்களை ஒளிமயமான எதிர்காலத்துடன் இணைத்துள்ளது. இங்கு வந்து படித்தவர்கள், கல்லூரியை விட்டு வெளியேறும்போது சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட தனிநபர்களாகச் சென்றுள்ளனர். இந்தக் கல்லூரியின் பயணம் தில்லி தரியாகஞ்சில் ஒரு சிறிய இடத்தில் தொடங்கியது. இன்று அந்தச் சிறிய கல்லூரி ஒரு மிகப்பெரிய மரமாக வளர்ந்துள்ளது. பல தலைமுறைகளுக்கு அந்த மரம் நிழல் அளித்துள்ளது; அதன் குளிர்ச்சியால் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளது. இன்றும்கூட தில்லி பல்கலைக்கழகத்தில் ஒருவர், “எந்தக் கல்லூரி?” என்று கேட்டால், “ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி” என்று சொல்வதே ஒரு பெருமைக்குரிய அடையாளமாக உள்ளது.

நண்பர்களே,

ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் மிகவும் சிறப்பானவர்கள். உங்கள் மொழியில் நான் சொல்வதானால், இங்குள்ள முன்னாள் மாணவர்கள் முன்னோடிகள். அவர்கள் ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் பெயரை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். பல்வேறு துறைகளில் தங்களுக்கென தனி முத்திரையைப் பதித்துள்ளனர். ரஜத் அவர்கள் நீண்ட பட்டியலைக் குறிப்பிட்டார். அவர்களில் சிலருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. நமது அருண் ஜேட்லி அவர்களும் இங்கு படித்தவர். அவருடன் நான் நடத்திய எந்தச் சந்திப்பிலும், ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி தொடர்பான ஏதேனும் ஒரு நிகழ்வை அவர் கூறாமல் இருந்ததே இல்லை என்று கூறலாம். சில நேரங்களில் எனக்கே சலிப்பாகிவிடும். ஏனென்றால், அதே நிகழ்வை அவர் மீண்டும் மீண்டும் கூறுவார். இன்று எனது குழுவில் இருக்கும் சகோதரர் சஞ்சீவ் சன்யாலும் இங்கு படித்தவர்தான். இங்கு இன்னும் பல நண்பர்கள் உள்ளனர். இங்கிருந்து பொருளாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வெளிவந்தார்கள் என்று கூற முடியாது. பல கலைஞர்கள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரும் இங்கிருந்து உருவாகியுள்ளனர். அதாவது, ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் மிகப்பெரிய ஆளுமைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் நிச்சயமாக ஒவ்வொரு துறையிலும் தங்களது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நண்பர்களே,

கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சி குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2013ம் ஆண்டு நான் ஆற்றிய உரையை மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த உரையை மீண்டும் கேட்டுள்ளனர்; மீண்டும் படித்துள்ளனர். புதிய தலைமுறையினரும் அந்த உரையை மீண்டும் பார்த்திருக்கலாம். அந்த உரை ஒரு அலை, ஒரு இயக்கமாக மாறியது என்று நான் கூறலாம். அந்தக் கூட்டத்தின் தாக்கமும், அந்த உரையின் தாக்கமும் இன்றும், 13–14 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது.

நண்பர்களே,

அன்று உங்கள் இடத்தில் உங்கள் மூத்தவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது நான் ஒரு முதலமைச்சராக இருந்தேன். அதே நேரத்தில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் உறுப்பினராகவும் இருந்தேன். அந்தக் காலத்திய மத்திய அரசுக்கு எதிராக நான் நீண்ட தாக்குதல்களை நடத்துவேன் என்றும், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவேன் என்றும் அப்போது பலர் எதிர்பார்த்திருக்கலாம்.

ஆனால் நண்பர்களே,

எதிர்க்கட்சியில் இருந்தபோதும், அன்றைய அரசை விமர்சிப்பவராக இருந்தபோதும், அந்த மேடையை அதற்காக நான் பயன்படுத்தவில்லை. நான் ஒரு தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தேன். நேர்மறையான விஷயங்களைப் பேசினேன். அன்று நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனது நம்பிக்கையாக இருந்தது. அந்த வார்த்தைகளையும், அந்தக் கனவுகளையும் நான் எப்போதும் வாழ்ந்து காட்டியிருக்கிறேன். எப்போதும் அந்தப் பாதையில்தான் நடந்திருக்கிறேன். நாட்டுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்து, தேச சேவை என்ற உணர்வுடன் வாழ்ந்து வருகிறேன். எனது உள்ளார்ந்த உலகம், எனது உணர்வுகளின் பிரபஞ்சம் ஆகியவை 2013-ம் ஆண்டு, அன்று இதே மேடையிலிருந்து வார்த்தைகளின் மாலையாக ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டன. நான் நீண்ட நேரம் பேசினேன். பின்னர் மாணவர்களிடம், “நான் தொடர்ந்து பேசட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உரத்த குரலில், “ஆம், தொடர்ந்து பேசுங்கள்” என்று கூறினர்.

நண்பர்களே,

அன்று நான் ஒரு குவளை தண்ணீரை உதாரணமாகக் கூறினேன். அது நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. தண்ணீர் பாதியாக நிரப்பப்பட்ட ஒரு குவளையைப் பார்ப்பதற்கான மூன்று விதமான கண்ணோட்டங்களை நான் விளக்கினேன். முதலாவது, குவளையில் பாதியளவு தண்ணீர் இருப்பதைப் பார்ப்பவர்கள். இரண்டாவது, குவளை பாதி காலியாக இருப்பதைப் பார்ப்பவர்கள். மூன்றாவது, குவளை முழுமையாக நிரம்பியிருப்பதாகப் பார்ப்பவர்கள். அதாவது, பாதியளவு தண்ணீரும், மீதிப் பாதியளவு காற்றும் இருப்பதாகக் கருதுபவர்கள்.

நண்பர்களே,

அப்போது நாடு நம்பிக்கையின்மையின் சதுப்புநிலையில் சிக்கியிருந்தது. அப்போதும்கூட, நான் அந்தக் குவளையைப் பாதியாகப் பார்க்கவில்லை என்று கூறினேன். அது முழுமையற்றதாக இருப்பதாகவும் நான் பார்க்கவில்லை. அந்தக் குவளை முழுமையாக நிரம்பியிருப்பதாகவே பார்த்தேன். பாதியளவு தண்ணீர், பாதியளவு காற்று. அப்போது நீங்கள் அனைவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், இன்று நீங்கள் இணையத்தில் சென்று 2013ம் ஆண்டு மற்றும் அதைச் சுற்றியிருந்த காலக்கட்டத்தின் செய்திகளைப் படித்துப் பார்த்தால், அப்போது நாட்டின் நிலைமை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். 2013-ஆம் ஆண்டு எனது உரையைச் சுற்றியிருந்த காலக்கட்டத்தின் செய்தித் தலைப்புகளை இணையத்தில் ஒருமுறை பாருங்கள் என்று இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அப்போது செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி செய்தி சேனல்களில் என்ன தலைப்புகள் இடம்பெற்றிருந்தன? அந்தக் காலக்கட்டத்தில் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்திய சில செய்தித் தலைப்புகளை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இப்போது எனது வார்த்தைகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அவற்றை என் கணக்கில் சேர்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே, நான் முன்கூட்டியே எச்சரிக்கிறேன். நான் இப்போது கூறுவது 2013ம் ஆண்டு ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்ற செய்தித் தலைப்புகள்தான்.

•     கட்டுப்பாட்டு எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவை நடந்தன.

•     உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்தது.

•     நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

•     பணவீக்க விகிதம் சுமார் 10 சதவீதமாக இருந்தது.

•     தொழில்துறை மந்தநிலையில் சிக்கியது.

•     ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் நடைபெற்ற லஞ்சம் வெளிச்சத்துக்கு வந்தது.

•     ஹைதராபாத்தில் குண்டுவெடிப்புகள்.

இவைதான் அந்தக் காலகட்டத்தின் செய்தித் தலைப்புகள். இன்றைய மாணவர்களுக்கு இவை அனைத்தும் தெரிந்திருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அன்றைய நாட்டின் நிலைமை எப்படி இருந்தது என்பதை இந்த விஷயங்கள் காட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சி தரையில் இருந்தது; பணவீக்கம் உச்சத்தில் இருந்தது. ஊழல்கள் உச்சத்தை எட்டியிருந்தன. ஊழல்வாதிகள் எந்த அச்சமுமின்றி சுற்றித் திரிந்தனர். பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. எங்கு பார்த்தாலும் கொள்கை முடக்கநிலை குறித்துப் பேசப்பட்டது. உலகம் இந்தியாவை “பலவீனமான ஐந்து நாடுகளில்” ஒன்றாகக் கருதியது. பயங்கரவாதிகள் தடையின்றிச் செயல்பட்டனர். பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது. அதாவது, அப்போது எங்கு பார்த்தாலும் நம்பிக்கையின்மையும் விரக்தியும் மட்டுமே இருந்தன.

நண்பர்களே,

அன்று ஒவ்வொரு துறையிலும் நாடு போராடிக் கொண்டிருந்தது. இன்றைய நிலைமையைப் பாருங்கள். இன்று பயங்கரவாதத்தைப் பரப்புபவர்கள் அடக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஏதேனும் தீய செயலில் ஈடுபட்டால், இந்தியப் படைகள் அவர்களின் சொந்த இடத்துக்குள் சென்று தாக்குகின்றன. ஜம்மு-கஷ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைதி அதிகரித்துள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதமும், நக்சலிசமும் முறியடிக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நிலவிய கொள்கை முடக்கநிலை குறித்து கவலைப்பட்ட உலகம், இன்று  இந்தியாவின் கொள்கை வேகத்தைப் பற்றிப் பேசுகிறது. ஒரு காலத்தில் உலகம் இந்தியாவை பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டது. இன்று உலகம் இந்தியா வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி வருவதைப் பார்க்கிறது. கடந்த ஒரு வாரத்திலேயே இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக பல நேர்மறையான செய்திகள் வந்துள்ளன. காலாண்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. இது நாட்டின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், ஜப்பானைச் சேர்ந்த கடன் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது.

நண்பர்களே,

மேற்கு ஆசியாவில் போர் நடைபெற்று வரும் நிலையிலும், வர்த்தகம் தொடர்பாக பல தடைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்த 7.8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் இந்த அளவிலான வளர்ச்சியை அடைந்திருப்பது இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது.

நண்பர்களே,

இந்தியாவை பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக மாற்றியதாகப் பெயரெடுத்தவர்கள், இந்தப் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அனைவரும் இந்தப் புள்ளிவிவரங்களை தீவிரமாகப் புரிந்துகொள்கிறீர்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மின் உற்பத்தி 9 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகன விற்பனை 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் பொருள், நுகர்வோர் தேவை வலுவாக உள்ளது. வர்த்தக நடவடிக்கைகளும் வலுவாக உள்ளன. எஃகு மற்றும் சிமெண்ட் பயன்பாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் பொருள் கட்டுமானம், வீடமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ந்து வருகின்றன. இதன் பொருள் இந்தியா வளர்ந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இருப்பினும், 2013ம் ஆண்டில் குவளை பாதி காலியாக இருப்பதாகப் பார்த்தவர்களின் சிந்தனை இன்றும் மாறவில்லை. அவர்களைப் பொறுத்தவரை குவளை எப்போதும் பாதி காலியாகத்தான் இருக்கும். நான் குவளையைப் பற்றி பேசும்போது, அதில் ஏதாவது காலியாக இருப்பதைப் பற்றி பேசவில்லை.

நண்பர்களே,

2013-ம் ஆண்டு இங்கே, ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பேசும்போது, மக்களை மையமாகக் கொண்ட நல்லாட்சியைப் பற்றியும் பேசினேன். நீண்ட காலம் அரசுகளை நடத்தியவர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. தீப்பிடித்த பிறகுதான் விழித்துக்கொள்வது; வறட்சி ஏற்பட்ட பிறகுதான் கிணறு தோண்டுவது. இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று அப்போது நான் கூறினேன். 2014ம் ஆண்டு ஆட்சி அமைத்த பிறகு, அதைச் செயல்பாட்டில் செய்து காட்டியுள்ளோம். இதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.

நண்பர்களே,

சமீபத்தில், பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. இன்று நீங்கள் முற்றிலும் மாறுபட்ட நிதித் தொழில்நுட்ப காலக்கட்டத்தில் வாழ்கிறீர்கள். ஆனால், 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் கிராமங்கள் அல்லது சிறு நகரங்களில் இருந்து வந்த மாணவர்கள் சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறப்பதற்குக்கூட மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது நமது மக்கள் தொகை 125 கோடியைத் தாண்டியிருந்தது. ஆனால், 2014 மார்ச் மாதத்திற்குள், நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. வங்கித் துறைக்கு வெளியே இருந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள், பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள். அதனால்தான் பிரதமரின் ஜன்தன் வங்கி திட்டத்தைக் கொண்டு வந்தோம். கடந்த 12 ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 60 கோடி புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று நாட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் வங்கித் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் நிதித் தொழில்நுட்பப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

நண்பர்களே,

கோடிக்கணக்கான மக்களை வங்கித் துறையுடன் இணைப்பதைக்கூட எதிர்த்தவர்களைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், குவளை பாதி நிரம்பியிருப்பதை மட்டுமே விரும்பியவர்கள் அவர்கள்தான். இதன் மூலம் ஏழை மற்றும் சாதாரண மக்கள் அவர்களைச் சுற்றியே சுற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இந்த “பெற்றோர் போன்ற பாதுகாவலர்” கலாச்சாரத்தை அவர்கள் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்தனர். ஆனால் இது மோடி. அந்த “பெற்றோர் போன்ற பாதுகாவலர்” கலாச்சாரத்தை விரும்பியவர்களுக்கு முன்னால் ஒரு பாறையைப் போல நின்று கொண்டிருப்பவர் மோடி.

நண்பர்களே,

“உண்மைக்கு நெருப்பைக் கண்டு அச்சமில்லை” என்ற பழமொழி உள்ளது. எனக்கு தைரியம் உள்ளது. அதனால்தான் அன்று நான் கூறியதை இப்போது மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். எனது செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் வைக்கிறேன். உண்மையின் முழக்கத்துக்கு முன் பொய்களின் எதிரொலி நிலைத்து நிற்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

நண்பர்களே,

2013-ம் ஆண்டு இதே நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாரிப்பை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று நான் கூறியபோது, அப்போது இருந்த பழைய அமைப்பைச் சேர்ந்தவர்களால் அதைப் புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை. அந்த நம்பிக்கையற்ற காலகட்டத்தில் இந்தியாவில் தயாரிப்பது சாத்தியமே இல்லை என்று அவர்கள் நினைத்தனர். அந்தச் சிந்தனையில் வளர்ந்தவர்கள் இன்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை கேலி செய்கிறார்கள்.

ஆனால் நண்பர்களே,

இன்று இந்தியாவில் தயாரிப்பின் மதிப்பை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். இன்று ஒவ்வொருவரின் கையிலும் கைப்பேசி உள்ளது. உலகின் மிகப்பெரிய கைப்பேசி நிறுவனங்கள் இந்தியாவைத் தங்களது உற்பத்தித் தளமாக மாற்றி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசிகள் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைகின்றன. 2014ம் ஆண்டு இந்தியா தனது பெரும்பாலான கைப்பேசிகளை இறக்குமதி செய்தது. இன்று இந்தியா ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கைப்பேசிகளை ஏற்றுமதி செய்கிறது.

நண்பர்களே,

சிறிய, எளிதான இலக்குகளை நிர்ணயிப்பவன் நான் அல்ல. நாட்டுக்காகப் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறேன். அவற்றை அடைவதற்காக எனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறேன். பாதுகாப்புத் துறையைப் பாருங்கள். முன்னதாக இந்தியாவின் ஆயுதப் படைகளுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டன. நான் பொறுப்பேற்றவுடன், பாதுகாப்புத் துறையினரிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன், எதிர்மறைப் பட்டியலைத் தயாரியுங்கள். முதலில் அவர்கள் 500 பொருட்களைக் கொண்ட பட்டியலைத் தயாரித்தனர். இந்தப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கமாட்டோம் என்று கூறினர். பின்னர் அந்தப் பட்டியலில் 1,000 பொருட்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் 3,000 பொருட்கள் சேர்க்கப்பட்டன.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் ஒரு சிறிய உபகரணத்துக்குக்கூட பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆயுதப் படைகளுடன் இணைந்து நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினோம். பொருட்களின் பட்டியல்களைத் தயாரித்தோம். பின்னர் இவை அனைத்தையும் இந்திய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும் என்று கூறினோம். இன்று நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று இந்தியா கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. 2013–14ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ரூ.600 முதல் ரூ.700 கோடி மதிப்பிலேயே இருந்தது. இன்று இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ரூ.40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகைய சாதனைகள் இன்று நாட்டில் வலுவான பாதுகாப்புத் துறை உற்பத்திச் சூழல் உருவாக்கப்பட்டு வருவதால்தான் சாத்தியமாகியுள்ளன.

நண்பர்களே,

•     எனக்கு நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. நாட்டின் திறன் மீது நம்பிக்கை உள்ளது. உங்கள் இளைஞர் சக்தி மீது நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் வளர்ந்த இந்தியாவைப் பற்றி பேசுகிறேன். 140 கோடி இந்தியர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டை வளர்ந்த நாடாகவும், தற்சார்பு கொண்ட நாடாகவும் மாற்றுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

•     வருங்காலத்தில் இந்தியா உற்பத்திக்கான மிகப்பெரிய மையமாக இருக்கும்.

•     வருங்காலத்தில் இந்துஸ்தான் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான மையமாக இருக்கும்.

•     இந்தியா வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் வல்லரசாக இருக்கும்.

•     எனது இளம் நண்பர்களே,

•     இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையம் இருக்கும்.

மேலும், இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாளையும் நீங்கள் காண்பீர்கள். அப்போது உலகமே வியப்புடன் இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

இவை வெறும் வார்த்தைகள் அல்ல. இவை நமது உறுதிமொழிகள். இந்த உறுதிமொழிகளை நிஜமாக்குவதற்காக நாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

தற்போது உங்கள் வாழ்க்கை ஸ்ரீ ராம் வணிகவியல்  கல்லூரி வாழ்க்கை முறையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கல்லூரி கூட்டுறவு கடையில் அருந்தும் தேநீர், குளிர்ந்த காபியுடன் நடைபெறும் விவாதங்கள், தேர்வுகளுக்கு முன் கடைசி நேரத்தில் தயாரிக்கும் குறிப்புகள், அச்சுப்பிரதிகளை எடுக்க ஓடுவது, குறுக்கு வழி மற்றும் வணிக மாநாட்டுக்காக நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பு என, இங்கு கழித்த ஒவ்வொரு தருணத்தையும் உங்கள் வாழ்வின் நினைவாக மாற்றியுள்ளீர்கள். ஆனால் இந்த வளாகத்திற்கு வெளியே ஒரு புதிய உலகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அங்கு நீங்கள் இரண்டு வகையான மனிதர்களைச் சந்திப்பீர்கள். முதலாவது வகையினர், சமூகத்தின் சக்தியை நாட்டின் சக்தியாக நேர்மறையான முறையில் மாற்றுபவர்கள். இரண்டாவது வகையினர், ஏதேனும் ஒரு பணி தொடங்கும்போதெல்லாம் “கோபக்கார மனிதர்களாக” மாறுபவர்கள். எல்லாவற்றையும் எதிர்ப்பதே அவர்களுக்குப் பிடித்தமான வேலை. அவர்களின் நிரந்தரமான கேள்வி: “இதற்கு என்ன தேவை? இதற்கு என்ன தேவை?” இதுதான் அத்தகைய ஒவ்வொரு கோபக்கார மனிதர்களின் நிரந்தரமான வசனம். உலகின் மிக உயரமான சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, இந்த மனிதர்கள் இடுப்பை இறுக்கிக்கொண்டு, “இதற்கு என்ன தேவை?” என்று கேட்டனர். அதிவேக ரயில் திட்டத்தைத் தொடங்கியபோதும், அவர்கள் மீண்டும், “இதற்கு என்ன தேவை?” என்று கேட்டனர். நாம் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை முறையைக் கொண்டு வந்தபோது, இதே மக்கள், “ஏன் இந்தப் பணப் பரிவர்த்தனை முறை? இதற்கு என்ன தேவை?” என்று கேட்டனர். நாம் மின்னணு சில்லுகள் தயாரிப்பைப் பற்றிப் பேசியபோதும், “இதற்கு என்ன தேவை?” என்று கேட்டனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நாம் கட்டியபோதும், “இதற்கு என்ன தேவை?” என்று கேட்டனர். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த நமது வீர ராணுவத் தளபதிகளின் நினைவாக நினைவுச் சின்னம் அமைத்தபோதும், “இதற்கு என்ன தேவை?” என்று மீண்டும் கேட்டு வந்தனர். ஆனால், இதுபோன்ற அனைத்து மனிதர்களுக்கும்  இந்தியா பதில் அளித்துவிட்டது. நாட்டுக்கு எது தேவையோ, அதைச் செய்வதிலிருந்து இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே,

இன்று இந்தியா மாறுபட்ட மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறது. முன்பு பல தசாப்தங்கள் எடுத்த பணிகள், இன்று சில ஆண்டுகளிலேயே நடைபெற்று வருகின்றன. முழுமையான புள்ளிவிவரங்களுடன் இன்னொரு உதாரணத்தைக் கூறுகிறேன். இந்தியாவின் முதல் மின்சார ரயில் 1925ம் ஆண்டு இயக்கப்பட்டது. உங்கள் கல்லூரி 1926ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் ரயில் அதற்கு முந்தைய ஆண்டே, 1925ம் ஆண்டு இயக்கப்பட்டது. அதன்பிறகு 2014ம் ஆண்டு வரை, அதாவது 90 ஆண்டுகளில், 30 சதவீதத்துக்கும் குறைவான ரயில் பாதைகளே மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 12 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 100 சதவீத ரயில் பாதைகளையும் மின்மயமாக்கியுள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவின் கொள்கை முடிவுகளில் ஏற்பட்டுள்ள இந்த வேகம் உலகின் மற்ற நாடுகளாலும் பார்க்கப்பட்டு புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால்தான் அவை இந்தியாவுடனான தங்களது கூட்டாண்மைகளை அதிகரித்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில், கிட்டத்தட்ட 40 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தோல் பொருட்கள், ஜவுளி, பழங்கள் மற்றும் காய்கறிகள், நமது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், இறால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புதிய சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய சந்தைகள் திறக்கப்படும்போது, இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்படும்போது என்ன பொருள் என்பதை உங்களைவிட நன்றாக வேறு யாரால் புரிந்துகொள்ள முடியும்? இது இந்திய இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளின் வானத்தை உருவாக்கி வருகிறது.

நண்பர்களே,

2013-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்று பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாடு மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளது. ஆனால், இதைப் பார்க்கும்போது சிலரின் அமைதியின்மையும், விரக்தியும் அதிகரித்து வருகின்றன. ஆகஸ்ட் 15ம் தேதி நான் ஆற்றிய உரையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அத்தகையவர்களுக்கு செங்கோட்டையில் இருந்து நான் ஹோமியோபதி மருந்தின் ஒரு சிறிய மாத்திரையைக் கொடுத்தேன். ஹோமியோபதி மருந்தின் தன்மை என்னவென்றால், மருந்தைத் தொடங்கியதும் ஆரம்பத்தில் நோய் இன்னும் தீவிரமடைந்தது போல் தோன்றும் என்று கூறுவார்கள்.  அதுதான் ஹோமியோபதியின் தன்மை. எனவே, செங்கோட்டையில் இருந்து நான் ஒரு ஹோமியோபதி மாத்திரையைக் கொடுத்தேன். “மனதளவில் நக்சல்” என்ற மாத்திரை. இந்த “மனதளவில் நக்சல்” சிகிச்சை குறித்து நான் கூறியபடி, ஆரம்பத்தில் சில காலம் நோய் தீவிரமடைந்தது போல் தோன்றும். அதன் பின்னர்தான் குணமடையும் செயல்முறை தொடங்கும். அதேபோல், நான் “மனதளவு நக்சல்” என்ற மாத்திரையைக் கொடுத்தவுடன், அனைத்து மன நக்சல்களும் வெளியில் வரத் தொடங்கினர். இந்த நோயை ஊக்குவித்து வருபவர்கள் யார் என்பதையும், அவர்களின் உண்மையான முகம் என்ன என்பதையும் இப்போது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே,

நான் பல விஷயங்களைக் கூறியுள்ளேன். சிலர், “இதில் என்ன பெரிய விஷயம்? இது 140 கோடி மக்களைக் கொண்ட நாடு. இது எளிதானது. மோடி புதிதாக என்ன செய்துவிட்டார்?” என்று நினைக்கலாம். ஆனால், அது உண்மையிலேயே அவ்வளவு எளிதானதா? மீண்டும் ஒருமுறை உங்களை பழைய காலத்துக்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தை நினைவில் கொள்ளுங்கள். 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் பேரிடர் ஏற்பட்டபோது, ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ச்சியடைந்தது. என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

 2008ம் ஆண்டு வங்கித் துறை நெருக்கடி ஏற்பட்டபோது, அன்றைய அரசு அந்த நெருக்கடியின் பின்னால் ஒளிந்துகொள்ள முயன்றது. 2014ம் ஆண்டு வரை அந்தப் பிரச்சினையைத் தொடுவதற்குக்கூட அவர்கள் துணியவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கித் துறையும் சரிவின் விளிம்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2008ம் ஆண்டிலேயே மும்பையில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, அன்றைய அரசு வெளிப்புற அழுத்தத்திற்கு உள்ளானது. ஆனால், பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்கக் கூட துணிச்சலைக் காட்டவில்லை.

நண்பர்களே,

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் பல பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. மிகப்பெரிய புயல்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆனால், அவற்றை நாடு உறுதியுடன் எதிர்கொண்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய நெருக்கடிகள் வந்துள்ளன. முதலில் கொரோனா பெருந்தொற்று வந்தது. அது உலகம் முழுவதையும் முடக்கியது. அதன்பிறகு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அதற்குப் பிறகு வர்த்தகத்தையும் விநியோகச் சங்கிலிகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் காலக்கட்டம் தொடங்கியது. பின்னர் மேற்கு ஆசியாவில் நெருக்கடி ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும், “இனி இந்தியா தாக்குப்பிடிக்காது” என்று கூறப்பட்டது. எனது “சிறப்பு ரசிகர்கள்” என்று நான் அழைப்பவர்கள், “இப்போது மோடி சிக்கிக்கொண்டுவிட்டார், இப்போது மோடி வீழ்ந்துவிடுவார், இப்போது அவர் நசுக்கப்படுவார்” என்று மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், எனது நாட்டின் மக்களின் ஆசீர்வாதத்துக்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. அந்த சக்தியின் காரணமாக, இந்தியாவின் வீழ்ச்சியை விரும்பியவர்களின் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறாமல் போய்விட்டது.

நண்பர்களே,

இப்போது 21-ம் நூற்றாண்டில் புதிய வாய்ப்புகளின் உலகம் நம் முன்னால் உள்ளது. நீங்கள் லட்சியத்துடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், லட்சியத்தை ஒரு பாடநூலில் இருந்து கற்றுக்கொடுக்க முடியாது. பெரிய கனவுகளைக் காண உங்களைத் தூண்டும் சூழலிலிருந்துதான் லட்சியம் உருவாகிறது. இன்று நமது இளம் நண்பர்கள் கூறுகிறார்கள்: “நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், ஒரு புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்குவேன்.” “நான் ஒரு நிறுவனத்தை உருவாக்கினால், அதை மிகப்பெரிய நிறுவனமாக வளர்ப்பேன்.” “நான் விண்வெளி, ஆளில்லா விமானங்கள் போன்ற துறைகளில் நுழைந்து பெரிய சாதனைகளைப் படைப்பேன்.” “நவீன செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவேன்.” “வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வேன்.” 13 ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் மூத்தவர்கள் இத்தகைய கனவுகளைக்கூட காண முடியவில்லை.  ஆனால், இன்று நீங்கள் இத்தகைய கனவுகளைக் காண்கிறீர்கள். ஏனென்றால், இன்றைய இந்தியாவில் அந்தக் கனவுகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இப்போது பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கான நேரம். சமீபத்தில் செங்கோட்டையில் இருந்து நான் சில விஷயங்களைக் கூறினேன். அவற்றை உங்கள் மத்தியில் மீண்டும் கூற விரும்புகிறேன். ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். உலகளாவிய ஆலோசனை நிறுவனங்கள் இந்தியாவிடம் ஏன் இருக்கக்கூடாது? நமது கணக்குத் தணிக்கை நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஏன் உலகின் முன்னணி நிறுவனங்களாக மாறக்கூடாது? இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை இந்தியர்கள் வழிநடத்துகிறார்கள் என்று நாம் பெருமையாகக் கூறுகிறோம். இந்தியர்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள் என்றால், இந்தியர்களால் உருவாக்கப்படும் நிறுவனங்கள் ஏன் உலகையே வழிநடத்தக்கூடாது?

நண்பர்களே,

இவை அனைத்தும் சாத்தியமே. இதற்காக உங்களிடம் தொடர்புகளும் உள்ளன; அறிவும் உள்ளது.

நண்பர்களே,

நமது உத்வேகமும், உங்கள் உத்வேகமும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் இலச்சினையிலும் உள்ளது. அதில் இரண்டு அழகான அடையாளங்கள் உள்ளன. ஒன்று உதயமாகும் சூரியன். மற்றொன்று கடலில் முன்னோக்கிச் செல்லும் கப்பல். திசையைக் காட்டும் சூரியனும், அந்தத் திசையை நோக்கி முன்னேறும் கப்பலும். நாமும் இதுபோன்ற புதிய பாதைகளில் பயணிக்க வேண்டும். அங்கு சூரியன் நம்முடையதாக இருக்க வேண்டும். கடல் நம்முடையதாக இருக்க வேண்டும். படகு நம்முடையதாக இருக்க வேண்டும். மாலுமி நம்மவராக இருக்க வேண்டும். அலைகளின் மீது வெற்றியை எழுதும் துணிச்சல் நம்முடையதாக இருக்க வேண்டும். பறப்பும் நம்முடையதாக இருக்க வேண்டும். வானமும் நம்முடையதாக இருக்க வேண்டும். பலத்த காற்றை எதிர்கொள்ளும் மனஉறுதியும் நம்முடையதாக இருக்க வேண்டும். கனவு நம்முடையதாக இருக்க வேண்டும். உறுதிமொழி நம்முடையதாக இருக்க வேண்டும். தற்சார்பு இந்தியாவின் கொடியும் நம்முடையதாக இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பாதையில் வேகமாக உயர்ந்து செல்லும் ஒவ்வொரு அடியும் நம்முடையதாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை, இந்தச் சிறப்புமிக்க நிகழ்வில் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்தே மாதரம்.

***

(Release ID: 2307050)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2326084) வருகையாளர் எண்ணிக்கை : 6