நித்தி ஆயோக்
மாநிலங்கள் நிலையான வளர்ச்சியைத் திட்டமிட உதவிடும் வகையில் தரவு மைய மதிப்பீட்டு கட்டமைப்பு; நித்தி ஆயோக் அறிமுகம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 3:55PM by PIB Chennai
நித்தி ஆயோக்கின் 'ஃபிரான்டியர் தொழில்நுட்ப மையம்', தரவு மையங்களின் நிலையான வளர்ச்சிக்கான திட்டமிடல் நடவடிக்கைகளில் மாநிலங்களுக்கு உதவிடும் வகையில், 2026 அக்டோபர் 14 அன்று தரவு மைய மதிப்பீட்டு கட்டமைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் அபய் கரண்டிகர், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு அனுராக் ஜெயின், அதன் சிறப்புப் பிரதிநிதி திருமதி தேப்ஜானி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மத்திய மின்சார அமைச்சகம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளும், தொழில் துறை, ஊடகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
பல்வேறு அமைச்சகங்கள், தொழித்துறையினர் ஆகியோரின் ஆலோசனைகளுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு, தரவு மைய முதலீடுகளைத் திட்டமிடுவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், அவற்றை எளிதாக்குவதற்கும் மாநில அரசுகளுக்கு ஒரு நடைமுறைக்கு உகந்த செயல்முறையை வழங்குகிறது. இது, உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கானத் தயார்நிலையை மதிப்பிடவும், முக்கியமான வளங்களைப் பாதுகாக்கவும், நீண்டகால பொருளாதார, உத்திசார் மதிப்பினை அதிகப்படுத்தவும் மாநிலங்களுக்கு உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், உயர் செயல்திறன் கொண்ட கணினிச் செயல்பாடுகள், தரவு சார்ந்த டிஜிட்டல் பயன்பாடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதன் விளைவாக, இந்தியாவின் தரவு மையத் திறன் 2020-ல், 375 மெகாவாட்டிலிருந்து தற்போது 1.5 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323840®=3&lang=1
***
SK/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324409)
வருகையாளர் எண்ணிக்கை : 11