பிரதமர் அலுவலகம்
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 AUG 2026 11:28AM by PIB Chennai
எனதருமை நாட்டு மக்களே,
இன்று நாம் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இன்று, ஒவ்வொருவரின் இதயத்துடிப்பிலும் 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலிக்கிறது. இன்று, இல்லம்தோறும் தேசியக்கொடி என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. நாடு புதிய உறுதிமொழிகளுடன் உற்சாகத்துடனும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் முன்னேறி வருகிறது. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாவீரர்களை நாடு இன்று மரியாதையுடன் நினைவுகூர்கிறது. விடாமுயற்சி, தியாகம், அர்ப்பணிப்பு உணர்வுடன், சுதந்திரம் அடைய வேண்டும் என்ற ஒரே இலக்கிற்காக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர். இந்த உன்னதமான தியாக மரபிற்கு ஊக்கமளித்த மதிப்பிற்குரிய மகாத்மா காந்தி, அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாபெரும் புரட்சியாளர்கள் ஆகியோருக்கு இன்று நான் மரியாதையுடன் வணக்கம் செலுத்துகிறேன். இன்று இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல் முறையாக, ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் 'வந்தே மாதரம்' எதிரொலிக்கிறது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இதைவிடச் சிறப்பான தருணம் வேறு என்ன இருக்க முடியும்?
எனதருமை நாட்டு மக்களே,
சமீப நாட்களில், நாட்டின் பல பகுதிகள் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளைச் சந்தித்துள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் துயரத்தையும் வலியையும் நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம், உணர்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
கனவுகள், உறுதிமொழிகள், திறன்களின் வலிமையுடன் முன்னேறும்போதுதான் ஒரு நாடு மகத்தானதாகி, தனது இலக்குகளை அடைகிறது.
எனதருமை நாட்டு மக்களே,
இனி நாம் சிறிய கனவுகளுடன் முன்னேற முடியாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துகின்றன. அவை நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன. நமது தீர்மானங்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும். நமது உறுதிப்பாடு வலுவாக இருக்கும்போது, சிரமங்களுக்கு மத்தியிலும், ஏன் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட, அதிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் கண்டறியும் திறன் தானாகவே உருவாகிறது.
எனதருமை நாட்டு மக்களே,
நமது தீர்மானங்கள் உயர்ந்தவையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், நமது கனவுகளும் உறுதியான தீர்மானங்களும் உயர்ந்த நிலையில் இருக்கும்போது, நமது திறன்களின் எல்லையும் விரிவடைகிறது. நமது முயற்சிகளின் வீச்சும் அதிகரிக்கிறது. அப்போதுதான் நம்மால் நமது கனவுகளை நனவாக்க முடியும்.
எனதருமை நாட்டு மக்களே,
இன்று இந்தியாவும் ஒரு மிகப்பெரிய கனவைக் கண்டுள்ளது. அது உறுதியான தீர்மானத்தின் பின்னணியில் அமைந்த, புதிய உயரங்களை எட்டுவதற்கான ஒரு கனவு. அந்தக் கனவு இதுதான். 2047-ல் நாம் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்கியிருப்போம். 140 கோடி மக்களின் முயற்சிகளாலும் கடின உழைப்பின் மூலமும் நாம் இந்த இலக்கை அடைய வேண்டும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடானது வளர்ச்சியடைந்த நாடாக மாறும்போது, அது நமது வலிமையின் அடையாளமாகத் திகழும். நம்மைப் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உலகிற்கு ஏற்படும்.
எனதருமை நாட்டு மக்களே,
நான் இதை ஏதோ காரணமின்றிச் சொல்லவில்லை. கடந்த 12 ஆண்டுகளில், நாட்டின் கோடிக்கணக்கான மக்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், பழங்குடியின சமூகங்கள், கிராமம் அல்லது நகரங்களில் வசிப்போர், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் அல்லது ஆண்கள் என யாராக இருந்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்தப் பகுதியிலிருந்து வந்திருந்தாலும், அனைவரும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் நாட்டைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரித்து கௌரவிக்கிறேன். இந்த முயற்சிகளின் விளைவாகவே, 25 கோடி மக்கள் மிகக் குறுகிய காலத்தில் வறுமையை வென்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக நாம் கருதப்பட்டோம். ஆனால் மக்களின் முயற்சிகளால், 12 ஆண்டுகளுக்குள் நாம் ஒரு முக்கிய பொருளாதார சக்தியாகவும், மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாகவும் மாறியுள்ளோம்.
நண்பர்களே,
நாடு பல கனவுகளுடன் சுதந்திரம் அடைந்தது. ஆனால் நம்மால் வேகத்தை தக்க வைக்க முடியவில்லை. நமக்குத் தேவையான வேகத்தை எட்ட முடியவில்லை. "எல்லாம் நடக்கும், காரியங்கள் தானாகவே நகரும், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்ற மனப்பான்மையிலேயே நாம் சிக்கியிருந்தோம். 2014-ம் ஆண்டிற்குள், உலகம் முழுவதுமே நம்மை பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது. அத்தகைய சூழலில், கடந்த 12 ஆண்டுகளில் பாரதம் ஒரு புதிய உத்வேகத்தைக் கண்டுள்ளது. நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்; நாட்டு மக்களின் உறுதிப்பாடு தெளிவாக உள்ளது. 140 கோடி மக்களின் மன உறுதியையும் திறனையும் இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
எனதருமை நாட்டு மக்களே,
கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. கதர், கிராமத் தொழில்கள் துறையின் உற்பத்தி கிட்டத்தட்ட ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. மின்னணு சாதனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்காக அதிகரித்துள்ளது. நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்காக அதிகரித்துள்ளது. அலைபேசி உற்பத்தி 35 மடங்காக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, நவீன காலத்திற்கு ஏற்ப, டிஜிட்டல் தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை ஆகியவற்றிலும் நாம் முத்திரை பதித்துள்ளோம். இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 மடங்காக அதிகரித்துள்ளன. சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாங்கள் அதே தீவிரத்துடன் பணியாற்றியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும், முன்பை விட சராசரியாக 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை நாங்கள் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் எரிவாயு இணைப்புகள் சராசரியாக ஆறு மடங்கு வேகத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கான கழிப்பறைகள் அமைக்கும் பணி ஆண்டுக்கு நான்கு மடங்கு வேகத்தில் அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் வேகம் ஆண்டுக்கு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நிர்வாகத்திலும் நாடு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான தேவையற்ற விதிகளும் நடைமுறைகளும் நீக்கப்பட்டுள்ளன. காலாவதியான நூற்றுக்கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய நூற்றாண்டின் சட்டங்களைக் கொண்டு 21-ம் நூற்றாண்டின் பயணத்தை மேற்கொள்ள முடியாது. நவீன உள்கட்டமைப்பிற்காக மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தி, பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தியுள்ளோம். பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம், அதன் பிரம்மாண்டமான அளவு, இந்த வளர்ச்சி மற்றும் சாதனைகள் ஆகியவற்றைச் சுதந்திரத்திற்குப் பிந்தைய கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முதன்முறையாகக் கண்டுள்ளது. இத்தகைய சாதனைகள் நம் கண்முன்னே இருக்கும்போதும், விரைவான முன்னேற்றம் தென்படும்போதும், ஒவ்வொரு கணமும் நம் மக்களின் திறன் வலுவடைந்து வரும்போதும், 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் நமது தீர்மானம் ஒருபோதும் நிறைவேறாமல் போகாது. நாம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் ஒரு தேசம் என்பதற்கு இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் சான்றாகத் திகழ்கின்றன.
எனதருமை நாட்டு மக்களே,
அதற்கு நமக்குத் தன்னம்பிக்கை தேவை. சுயமரியாதை உணர்வு தேவை. அதே வேளையில், தற்சார்பு இந்தியாவாக மாறுவது மிக முக்கியம். அதனால்தான், இந்தியா இனி பிற நாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது என்பதே சமீப காலங்களில் நமது உறுதியான நிலைப்பாடாக உள்ளது. நாம் தற்சார்பு கொண்டவர்களாக மாற வேண்டும். உலகில் மலிவான, விரைவாகக் கிடைக்கக்கூடிய பல பொருட்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைச் சார்ந்திருப்பது நமது சொந்தத் திறன்களை வளர்க்கவோ அல்லது நமது திறன்களின் வலிமையைச் சோதிக்கவோ உதவாது. எனவே, நாம் நமது சொந்தத் திறன்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது நலன்களை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் தற்சார்பு இந்தியா என்ற உறுதியான நோக்கத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்தியாவில் தயாரிப்போம், உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் போன்ற முன்முயற்சிகளுடன் இந்தியர்களின் மனங்கள் ஒன்றிணைந்து வருகின்றன.
எனதருமை நாட்டு மக்களே,
செமிகண்டக்டர்கள் (குறைக்கடத்திகள்) குறித்த ஒரு உதாரணத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் சுதந்திரம் அடைந்த பிறகு, உலகம் ஏற்கெனவே செமிகண்டக்டர்கள் குறித்து விவாதித்து வந்தது. நம் நாட்டிலும் அது குறித்த விவாதங்கள் இருந்தன. ஆனால் நம்மால் எந்தவொரு பெரிய செமிகண்டக்டர் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் இன்றைய நிலை என்ன? இன்றைய டிஜிட்டல் உலகம், தொழில்நுட்பம் சார்ந்த சகாப்தத்தில், 'சிப்' எனப்படும் செமிகண்டக்டர்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம். மின்னணுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லது போக்குவரத்து அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் சிப்கள் இன்றியமையாதவை. சிப்கள் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த அமைப்பும் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலையை உலகம் எட்டியுள்ளது. அதனால்தான், தற்சார்பு நிலையை அடையும் நோக்கில் இந்தியா தனது சொந்த செமிகண்டக்டர் உற்பத்தித் திறனை நிறுவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதி தொடங்கியுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், வரும் ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்குள், இன்னும் ஏழு அல்லது எட்டு செமிகண்டக்டர் ஆலைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான ஒரு சிறந்த பாதையை நமக்கு வழங்குகிறது.
எனதருமை நாட்டு மக்களே,
முக்கிய கனிமங்கள் குறித்தும் இதேபோன்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையும் முக்கிய கனிமங்களையே சார்ந்திருக்கிறது. இந்தத் துறையிலும் தன்னிறைவு பெற இந்தியா பணியாற்றி வருகிறது. முக்கியமான கனிமங்களுக்கான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். 'தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், 'முக்கிய கனிமங்களுக்கான வழித்தடம்' பற்றியும் நாங்கள் அறிவித்தோம். பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. அத்துடன், முக்கிய கனிமங்கள் துறையில் உலகின் பல நாடுகள் இப்போது இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன.
எனதருமை நாட்டு மக்களே,
நாம் குறைக்கடத்திகள் (செமி கண்டக்டர்) முக்கிய கனிமங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில், உலகம் எதிர்காலத் தொழில்நுட்பங்களை நோக்கி நகரும்போது மின்சக்தியின் முக்கியத்துவமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சக்தியின்றி புதிய உலகத்தை இயக்குவது கடினம். எனவே, சிப்கள், செயற்கை நுண்ணறிவு அல்லது தரவு மையங்கள் என எதுவாக இருந்தாலும், நமக்கு மிக அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும். எரிசக்திப் பாதுகாப்பு என்பது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. எனவே, இத்திசையில் நாம் ஏற்கெனவே பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய வழிகளில் ஒன்று அணுசக்தி ஆகும். நாடாளுமன்றத்தில் 'சாந்தி' சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், ஒரு புதிய இலக்கை நோக்கிய பாதையை நாங்கள் அமைத்துள்ளோம். 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணு மின்சக்தி உற்பத்தியை எட்டும் இலக்கை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தப் பத்து ஆண்டுகளுக்குள், ஐந்து புதிய அணு உலைகளைத் தொடங்குவதற்கான இலக்கையும் நிர்ணயித்துள்ளோம். இந்த ஆண்டு, 'ஃபாஸ்ட் பிரீடர்' எனப்படும் அதிவேக ஈனுலை அணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதன் மூலம் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் விளைவாக, அணுசக்தி எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கி ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம்.
எனதருமை நாட்டு மக்களே,
சில நேரங்களில், வளங்களின் பற்றாக்குறை ஒரு நாட்டைப் பின்னுக்கு இழுப்பதில்லை. மாறாக, அதன் சிந்தனையில் உள்ள வரம்புகளே அதற்குக் காரணமாக அமைகின்றன. நமது சிந்தனை குறுகி, அந்த வரம்புகளுக்குள்ளேயே தேங்கிப்போகும்போது, நமது சொந்த ஆற்றலைக்கூட நம்மால் அடையாளம் காண முடியாமல் போகிறது. இன்று நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது நமது தவறான சிந்தனையின் விளைவே ஆகும். அத்தகைய சிந்தனையால், நமது மொத்தக் கடலோரப் பகுதியில் 99 சதவீதத்தை அனுமதிக்கப்படாத பகுதியாக அறிவித்திருந்தோம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கடலில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று நாமே முடிவு செய்திருந்தோம். இது சிந்தனை வறுமையின் வெளிப்பாடு. நிலைமை இப்படித் தொடரக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஒரு காலத்தில் அனுமதிக்கப்படாத பகுதியாகக் கருதப்பட்ட அந்த 99 சதவீதப் பகுதியை இப்போது செயல்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளோம். இப்போது கடலை ஆய்வு செய்வதையும் புதிய வளங்களைக் கண்டறிவதையும் நோக்கி நகர்கிறோம். இத்திசையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு, இதே திசையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக சமுத்ர மந்தன் திட்டத்தை அறிவித்தோம். சமீபத்தில், இச்செயல்முறையை விரைவுபடுத்தும் வகையில் இப்பணிக்காக ₹ 85,000 கோடியை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்தோம்.
எனதருமை நாட்டு மக்களே,
எரிசக்திப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மாற்று எரிசக்தி மூலங்களிலும் நமது முழு எரிசக்தியையும் வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கூறினேன். எனவே, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்தியா இன்று இத்திசையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. 2014-க்கு முன்பு, அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் 70 நகரங்களில் மட்டுமே குழாய் வழி எரிவாயு விநியோகக் கட்டமைப்பு இருந்தது. கடந்த 12 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 70-லிருந்து 700 நகரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான வேகம். இதுதான் உண்மையான விரிவாக்கம். 2014-க்கு முன்பு, குழாய் வழி எரிவாயு வசதி சுமார் 20 முதல் 22 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது. ஆனால் இன்று, ஏறக்குறைய 1.75 கோடி குடும்பங்களுக்கு இச்சேவையை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் சூரிய சக்தி உற்பத்தித் திறன் வெறும் 2 ஜிகாவாட்டாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, நாம் 160 ஜிகாவாட் திறனை எட்டியுள்ளோம்.
எனதருமை நாட்டு மக்களே,
இன்னொரு தகவலையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாடு முழுவதும் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், சாமானியக் குடும்பங்களுக்கு இதன் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதிலும் நாங்கள் சமமான கவனம் செலுத்தியுள்ளோம். நாங்கள் பிரதமரின் சூரிய வீடு மின்சக்தி திட்டத்தைத் தொடங்கினோம். மிகக் குறுகிய காலத்திலேயே 50 லட்சம் வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவும் மைல்கல்லை எட்டியுள்ளதிலும், இப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மின்சாரக் கட்டணம் பூஜ்ஜியமாகியுள்ளது. அதே வேளையில், தாங்கள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருமானம் ஈட்டுகின்றன. இத்திட்டத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு ₹80,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த ஆதரவின் மூலமாகவே நாங்கள் இப்பணியை முன்னெடுத்துச் செல்கிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
நமது ரயில்வே அமைப்பை மின்மயமாக்கும் பணி நம் நாட்டில் 1925-லேயே தொடங்கியது என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மின்மயமாக்கல் பணிகள் 1925-ல் தொடங்கப்பட்டாலும், அடுத்த 90 ஆண்டுகளில் ரயில்வே கட்டமைப்பில் 30 சதவீதம் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தது. அதாவது 90 ஆண்டுகளில் 30 சதவீதம் மட்டுமே. நமது செயல்பாட்டு வேகத்தையும், இலக்கை அடைவதற்கான நமது உறுதியையும் பாருங்கள். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் நாங்கள் 100 சதவீதப் பணிகளையும் நிறைவு செய்துள்ளோம். 90 ஆண்டுகளில் 30 சதவீதம், 10 ஆண்டுகளில் 70 சதவீதம். உண்மையான செயல்பாடு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இதன் விளைவாக, முன்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்த டீசலை நாம் மிச்சப்படுத்தியுள்ளோம். நமது ரயில்கள் மின்சாரத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே,
நாம் இத்துடன் நின்றுவிடவில்லை. உலகின் பிற பகுதிகளை விடப் பின்தங்கி இருக்க நாம் விரும்பவில்லை. சமீபத்தில் நீங்கள் ஒரு செய்தியைக் கேட்டிருக்கலாம். எரிபொருள் சார்ந்த இந்த புதிய துறையிலும் இந்தியா காலடி எடுத்து வைத்துள்ளது. நாடு தனது முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வகையான ரயில்களிலேயே இது மிக நீளமான, அதிக ஆற்றல் கொண்ட ரயில் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்கள் துறையிலும் இந்தியா உலக அளவில் தனது முத்திரையைப் பதித்துள்ளது.
எனதருமை நாட்டு மக்களே,
கடந்த 10-12 ஆண்டுகளாக, 2047-ம் ஆண்டிற்கான இலக்கை அடைவதை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு மைல்கல்லாக நாங்கள் கடந்து வருகிறோம். இந்தப் பயணத்தில் இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. கடந்த 10-12 ஆண்டுகளில் நாங்கள் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளோம். கொவிட்-19 போன்ற ஒரு பெருந்தொற்று உலகம் முழுவதையும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியது. அனைத்து அமைப்புகளும் பெரும் குழப்பத்திற்குள்ளாகின. கொவிட் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வந்த நிலையில், போரின் கோர முகத்தைக் காண நேரிட்டது. ஒருபுறம் உக்ரைன் மோதல்கள், மறுபுறம் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் என நிலைமை இருந்தது. எங்கும் பதற்றமான சூழலே நிலவியது. எதிர்காலம் குறித்துப் பலவிதமான கணிப்புகளைச் சொன்னவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டை அச்சுறுத்துவதிலும், மக்களைப் பயத்திலும் கவலையிலும் வைத்திருப்பதிலும் சிலர் ஒருவித திருப்தியை அடைவது போல் தோன்றியது. தடுப்பூசிகள் கிடைக்காது என்றும், கொவிட் பாதிப்பிலிருந்து மக்கள் பிழைக்க மாட்டார்கள் என்றும், எதுவும் சரியாக நடக்காது என்றும் அவர்கள் கூறினார்கள். மேற்கு ஆசியாவில் நெருக்கடி நிலை உருவானபோது, பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கிடைக்காது என்றும், சமையல் எரிவாயு, டீசல், உரங்கள் கிடைக்காது என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. உலகம் முழுவதும் இத்தகைய வதந்திகளைப் பரப்பி, இந்திய மக்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி, மக்களைக் கவலையில் ஆழ்த்துவதில் சிலர் இன்பம் கண்டனர்.
ஆனால், கடந்த 10-12 ஆண்டுகளாகத் தீர்க்கமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் பலனை நாடு இப்போது கண்டு வருகிறது. இவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்பட்ட போதிலும், மக்களே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஒவ்வொரு அடியையும் உறுதியாக எடுத்து வைத்தது. இத்தகைய நெருக்கடி ஏற்படும் என்று நாம் முன்பே கற்பனை செய்திருக்கவில்லை. ஆனால் அது ஏற்பட்டபோது, நாம் மேற்கொண்ட அந்தத் தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. இன்று நம்மிடம் சமையல் எரிவாயு, பெட்ரோல், யூரியா ஆகியவை தாராளமாக உள்ளன. நாம் நமது சொந்தத் திறன்களின் வலிமையைக் கொண்டு உறுதியுடன் முன்னேறி வருகிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
இந்த உலகளாவிய நெருக்கடிகள் அனைவரையும் பாதித்துள்ளன. நாமும் அதிலிருந்து விலக்கல்ல. யூரியா மூட்டை ஒன்றின் உலகளாவிய விலை 3,000 ரூபாயை எட்டியுள்ளது. இருப்பினும், அந்தச் சுமையை நம் நாட்டு விவசாயிகள் மீது நாங்கள் சுமத்தவில்லை. அரசே அந்தச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது. உலக சந்தையில் 3,000 ரூபாய்க்கு வாங்கப்படும் யூரியா மூட்டையை, எங்கள் விவசாயிகளுக்கு வெறும் 300 ரூபாய்க்கே வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, டிஏபி உரத்தின் உலகச் சந்தை விலை 5,000 ரூபாயாக உயர்ந்திருந்தாலும், விவசாயிகள் எந்த சிரமத்தையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக அதைத் தொடர்ந்து 1,350 ரூபாய்க்கே வழங்கி வருகிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
நான் தற்சார்பு பற்றிப் பேசியபோது, குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து சிந்தித்த சிலர், 'உலகமயமாக்கலின் கதி என்னவாகும்?' என்று கேள்வி எழுப்பினர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில், உலகம் உலகமயமாக்கல் பற்றிய பேச்சையே நிறுத்திவிட்டதைப் போலத் தோன்றுகிறது. அந்த முழக்கங்கள் இப்போது கேட்பதில்லை. ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்தச் சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இருப்பினும் வருந்தத்தக்க வகையில், இந்த நெருக்கடி காலத்தில் சிலர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வளங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தன்னிடம் உள்ள வளங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதிலேயே உலகம் தற்போது முனைப்புடன் உள்ளது. பெட்ரோல், டீசல், உரங்கள், மருந்துகள், தொழில்நுட்பச் சிப்கள் போன்ற வளங்கள் ஆயுதங்களாக மாற்றப்படுகின்றன. ஏன், நிலப்பரப்பு கூட ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த பத்து ஆண்டுகளாக சுயசார்பு எனும் மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு சரியான திசையில் நாம் பயணிக்காமல் இருந்திருந்தால், இத்தகைய சவால்களை நாம் எவ்வளவு வலுவாக எதிர்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நமது ஆயத்த நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனதருமை நாட்டு மக்களே,
மறுபுறம், இன்று இந்தியாவின் நற்பெயரும் முக்கியத்துவமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று இந்தியா உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மதிக்கப்படும் நாடாகத் திகழ்கிறது. இந்தியாவிடம் நிலையான அரசியல் உத்தி, நிலையான அரசு, துடிப்பான ஜனநாயகம், வலுவான நீதித்துறை, நம் அனைவரையும் வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவை உள்ளன. இப்போது உலகம் நமது வலிமையை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, 2014-க்குப் பிறகு, நாங்கள் சுமார் 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம். எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதைப் பாருங்கள். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். எனவே, நமது குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று நான் குறிப்பாகக் கூற விரும்புகிறேன். நாம் உலகை சென்றடைய வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு தயாரிப்பும் உலக சந்தையைச் சென்றடைய வேண்டும். ஜவுளி, இயந்திரங்கள் அல்லது மருந்துகள் என எதுவாக இருந்தாலும், எந்த வாய்ப்பையும் நாம் நழுவவிடக்கூடாது. அதே சமயம், உலகளாவிய தரநிலைகளையும் நாம் எட்ட வேண்டும். தற்போது உலகளவில் கிடைக்கக்கூடிய தயாரிப்புகளை விடச் சிறந்த தரமான, குறைந்த விலையிலான தயாரிப்புகளை நாம் வழங்க வேண்டும். பஞ்சாபின் லூதியானா முதல் தமிழ்நாட்டின் திருப்பூர் வரை பரவியுள்ள நமது ஜவுளித் துறைக்கு, உலக சந்தைகளைச் சென்றடையும் ஆற்றல் உள்ளது. அதுமட்டுமின்றி, கேரளம் முதல் குஜராத் வரையிலும், தமிழ்நாடு முதல் வங்காளம் வரையிலும் அமைந்துள்ள நமது நீண்ட கடற்கரைப் பகுதியையும், அங்குள்ள மீனவ சகோதர-சகோதரிகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் காரணமாக, இப்போது நமது இறால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் பெருமளவு அதிகரித்துள்ளன. நமது கடல்சார் உணவுப் பொருட்கள் உலகை சென்றடைவதற்கான பெரும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தச் சூழலை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்லும்போது இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
உங்கள் முன் நான் முன்வைத்த இந்த அறிமுகத்தின் பின்னணியில் உள்ள 2047-ம் ஆண்டிற்கான இலக்கு, உறுதியான அடித்தளங்களின் மீது அமைந்துள்ளது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கானது, கடந்த 10-12 ஆண்டுகளில் நமது நாட்டு மக்கள் வெளிப்படுத்திய வலிமையின் ஒரு பகுதியாகும்.
எனவே, என் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
21-ம் நூற்றாண்டில் ஒரு கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. அடுத்த கால் நூற்றாண்டு நமக்கு மிக முக்கியமானது. இப்போது நாம் நிற்க முடியாது, நமது வேகம் குறையக்கூடாது. நமது திசை தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதை நாம் அடைய வேண்டும். இதற்காக நமது பணிக் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். பணிக் கலாச்சாரத்தை மாற்றும்போது நமது சிந்தனையையும் மாற்ற வேண்டும். நமது பணியின் வேகத்தையும் மாற்ற வேண்டும். கடந்த 50 முதல் 70 ஆண்டுகளில் செய்யப்படாத பணிகளை, வரவிருக்கும் 5 முதல் 7 ஆண்டுகளில் நாம் செய்து முடிக்க வேண்டும். இந்த கனவை நனவாக்க முடியும் என்பதில் எனது நாட்டின் இளைஞர் சக்தி, தாய்மார்கள், சகோதரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, சீர்திருத்தங்களின் வேகத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசும்போது, அது நமக்கு ஒரு கட்டாயமோ அல்லது வெறும் சொல்லாடலோ அல்ல. இது ஆழ்ந்த நம்பிக்கையிலிருந்து உதித்த ஒரு உறுதிப்பாடு. நாம் சீர்திருத்தத் தொடர் பயணத்தை தொடங்கியுள்ளோம். வரும் நாட்களில் அடுத்த கட்ட சீர்திருத்தங்களை நோக்கி நகரவுள்ளோம். எனவே, அரசு, சமூகம், தொழில் துறை, உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என அனைவரும் தங்கள் பாரம்பரிய அமைப்புகள், சிந்தனைகள், இலக்குகளைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,,
தெளிவான உணர்வுடன் நாம் முன்னேற வேண்டும். 'சப்த சிந்து' (ஏழு நதிகள்) என்ற கருத்தாக்கத்தின் மூலம் இந்தியாவின் ஆற்றலை நாம் அறிந்திருந்த, புரிந்துகொண்டிருந்த, உள்வாங்கியிருந்த அந்த காலக்கட்டத்தை இன்று நான் நினைவுகூர விரும்புகிறேன். இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய நமக்கு ஒரு புதிய நீரோட்டம் தேவைப்படுகிறது. இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, நாட்டின் முன் இந்த ஏழு ஆற்றல் நீரோட்டங்களை (சப்த தாரா) நான் முன்வைக்கிறேன். கடந்த 50 முதல் 70 ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை, வரவிருக்கும் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த 'சப்த தாரா'வின் வலிமையாலும் ஆற்றலைக் கொண்டும் சாதிப்போம். நாட்டிற்குப் புதிய உயரங்களையும், புதிய உத்வேகத்தையும், புதிய இலக்குகளை அடையும் திறனையும் நாம் அளிப்போம். இதனுடன் இணைந்து, தேசத்தைக் கட்டமைப்பதில் நாட்டின் இளைஞர் சக்தியின் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படும். அவர்களின் வலிமை இந்த முயற்சியில் ஒருங்கிணைக்கப்படும். வரும் நாட்களில், நான் 'சப்த தாரா' (ஏழு முக்கியத் தூண்கள்) பற்றிப் பேசும்போது, அதில் முதலாவது தூணாக உற்பத்தித் திறன் உள்ளது.
எனதருமை நாட்டு மக்களே,
நாம் உற்பத்தித் துறையை வெகுவாக மேம்படுத்த வேண்டும். உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், சிறிய உதிரிபாகங்கள் முதல் பெரிய அளவிலான தயாரிப்புகள் வரை அனைத்தையும் நாம் உற்பத்தி செய்ய வேண்டும். முழுமையான மதிப்புச் சங்கிலியும் நம் வசமே இருக்க வேண்டும். உதிரிபாகங்கள், முழுமையான உற்பத்தி, முழுமையான தயாரிப்புகள் என அனைத்திலும் நாம் முன்னேற வேண்டும். வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை, உலகளாவிய விநியோகக் கட்டமைப்பில் இந்தியா ஒரு நம்பகமான மையமாக உருவெடுக்க வேண்டும். இதற்காக, குறிப்பாக உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள எனது சகோதர சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று அம்சங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது. இதற்காகச் செலவு, தரம், உற்பத்தி அளவு ஆகியவற்றில் நாம் உலகளாவிய தரநிலைகளை எட்ட வேண்டும். நமது தொழிற்சாலைகள் போட்டித்தன்மை வாய்ந்தவையாகவும், தயாரிப்புகள் பயனர்களுக்கு ஏற்றவையாகவும், பேக்கேஜிங் உலகெங்கிலும் உள்ள மக்களைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும். குறைபாடற்ற துல்லியமான உற்பத்தி என்பதே நமது அடையாளமாக மாற வேண்டும். ஒவ்வொரு உற்பத்தியாளர், தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்திடமும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உலகச் சந்தையில் நமது அடையாளமானது நம்பகத்தன்மை, தரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். தரத்தில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. எனவே, 'தரம், தரம், தரம்' என்பதே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதுவே நமது உலகளாவிய பிராண்ட் மதிப்பாக மாறும்.
எனதருமை நாட்டு மக்களே,
இந்த சப்த தாராவின் (ஏழு முக்கிய தூண்கள்) இரண்டாவது தூண் விவசாயம், உணவு உற்பத்தியாகும். நாம் உணவு பதப்படுத்துதல் துறையிலும் முன்னேற வேண்டும். நமது விவசாயிகளுக்கு இப்போது உலகளாவிய சந்தைகளுக்கான அணுகல் கிடைத்துள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, நமக்கு மிகப் பெரிய சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் அந்தச் சந்தைகளைச் சென்றடைய வேண்டும். அந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் விவசாய நிலத்திலிருந்து ஏற்றுமதிச் சந்தை வரை பயணிக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், பழங்கள் அல்லது மலர்கள் என நமக்கு வழங்க ஏராளமானவை உள்ளன. இவை உலகளாவிய பிராண்டுகளாக மாற வேண்டும். ரசாயனமற்ற விவசாயத்திற்கு நமது விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் உலகம் முழுவதும் இத்தகைய பொருட்களுக்கான தேவை அதிகரிக்கவே போகிறது. நமது விவசாயப் பொருட்கள் அனைத்து வகையிலும் உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்தி செய்தால், நாம் உலகம் முழுவதும் உள்ள சந்தைகளை எளிதாகச் சென்றடைய முடியும். எனது சப்த தாராவின் (ஏழு முக்கியத் தூண்கள்) மூன்றாவது தூண் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகும்.
எனதருமை நாட்டு மக்களே,
இன்று செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோட்டிக்ஸ், தரவு மையங்கள் ஆகியவற்றின் காலம். முற்றிலும் புதியதொரு துறை உருவாகியுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு கணமும் நமக்குச் சவால் விடுகின்றன. எனவே, நாம் நமது நாட்டை வெறும் உலகளாவிய சந்தையாக மட்டும் மாற்றக்கூடாது. நாம் புத்தாக்கத்தின் மையமாக மாற வேண்டும். யுபிஐ, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை மூலம் நமது திறனை நாம் ஏற்கெனவே நிரூபித்துள்ளோம். நமது வலிமையை உலகிற்கு உணர்த்தியுள்ளோம். இப்போது பாரதம் தனது டிஜிட்டல் பொதுத் தொழில்நுட்பங்களை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் பாரதம் முன்னணியில் இருக்க வேண்டும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட 6ஜி தொழில்நுட்பம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். இத்திசையில் நமது முயற்சிகளை நாம் துரிதப்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் நமது அர்ப்பணிப்பு குறையக்கூடாது.
சப்த தாராவின் (ஏழு முக்கிய தூண்கள்) நான்காவது தூண் விரைவு சக்தி ஆகும். விரைவு சக்தியின் கீழ், நாடு முழுவதும் தடையற்ற, விரைவான போக்குவரத்து இணைப்பு வசதியை ஏற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதிவேக ரயில் மூலம் நமது நகரங்களை இணைக்க வேண்டும். நமக்கு நவீன நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிகள், விமான நிலையங்கள், பலவகை போக்குவரத்துடன் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகியவை தேவை. நமது துறைமுகங்களை வெறும் சரக்குகள் ஏற்றி இறக்கப்படும் இடங்களாகவோ அல்லது கப்பல்கள் வந்து நங்கூரமிடும் இடங்களாகவோ மட்டும் பார்க்கக்கூடாது. துறைமுகத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நோக்கி நமது துறைமுகங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 'சப்த தாரா எனப்படும் ஏழு முக்கியத் தூண்களின் ஐந்தாவது தூண் பாதுகாப்பு வலிமை ஆகும். ஒவ்வொரு வகையிலும் இந்த பாதுகாப்பு வலிமையின் முக்கியத்துவம் அளப்பரியது.
எனதருமை நாட்டு மக்களே,
பாதுகாப்புத் துறையில் தற்சார்புடன் இருப்பதற்கு மாற்று வழியே இல்லை என்பதை இந்தியாவும் உலகமும் இப்போது உணர்ந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்கள் சொந்த நலன்களையே அதிகம் சிந்தித்து வரும் வேளையில், இந்தியா வெறும் உலகளாவிய சந்தையாக மட்டும் நீடிக்க முடியாது. பாதுகாப்புத் துறையில் நாம் தற்சார்பு கொண்டவர்களாக மாற வேண்டும். அடுத்த தலைமுறை பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும், உலகளாவிய விநியோகஸ்தராக உருவெடுப்பதையும் நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அத்துடன் ஹைப்பர்சோனிக் எனப்படும் ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் செல்லும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நாம் தலைமைத்துவம் பெற வேண்டும்.
நண்பர்களே,
இன்று இணையப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கவலைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. இதுவும் ஒரு பாதுகாப்புத் துறையாகும். இதில் நாட்டின், உலகின் நன்மைக்காக நமது இளைஞர்களின் திறன்களை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். நமது ஏழு முக்கியத் தூண்களின் ஆறாவது அம்சம் பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் ஆகும். இவை பசுமை வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, பசுமைப் போக்குவரத்து, பசுமை உற்பத்தி ஆகிய துறைகளில் நாம் உலகளாவிய அளவில் சாதனைகளைப் படைக்க வேண்டும். உலகம் புவி வெப்பமடைதல் குறித்து தொடர்ந்து விவாதித்து வரும் வேளையில், நாம் இச்சவால்களுக்கான தீர்வுகளைத் தேடுவதிலும் பதில்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பசுமை போக்குவரத்தில் அபாரமான ஆற்றலுடன் இந்தியா இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. நீலப் பொருளாதாரத்திலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. நமக்கு மிக நீண்ட கடற்கரை உள்ளது. மீன்வளம், கடற்கரைச் சுற்றுலா, கடல்சார் தொழில்நுட்பம் போன்ற பலவற்றில் நீலப் பொருளாதாரத்தின் கீழ் நாம் முன்னேறிச் செல்வதற்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளன.
எனதருமை நாட்டு மக்களே,
வலிமையின் ஏழு தூண்கள் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறிவரும் நிலையில், உலக அளவில் தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்த ஏழாவது தூணாக, இந்தியாவின் மென்சக்தி திகழ்கிறது. இந்திய மென்சக்தியின் வலிமை அளப்பரியது. இன்று, யோகா, ஒட்டுமொத்த உலகையும் இந்தியாவுடன் இணைத்துள்ளது. யோகா, உலகிற்கு ஒரு ஆற்றல் சக்தியாகவும், இந்தியாவின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஒரு முக்கிய காரணியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் நம்பிக்கை, ஆயுர்வேதம் மற்றும் முழுமையான சுகாதாரப் பராமரிப்புமுறை சார்ந்த மையங்கள் உள்ளன. இவற்றுடன், இந்தியாவில் குணமடைதல் இயக்கத்தையும் இணைத்து, நமது திறன்களை நாம் உலகிற்கு எடுத்துச் செல்லலாம். கைவினைப் பொருட்கள், கலாச்சாரம், திரைப்படங்கள், படைப்பாற்றல் உலகம், விஎஃப்எக்ஸ், அனிமேஷன், கேமிங் அல்லது டிஜிட்டல் உள்ளடக்கம் என எதுவாக இருந்தாலும், உலகளாவிய படைப்பாற்றல் பொருளாதாரத்தில் இந்தியா தனது சிறப்பான இடத்தை வெளிப்படுத்தலாம். இதனை நாம் ஒரு உலகளாவிய ஆற்றலாக வளர்த்தெடுக்க வேண்டும். இன்று, வேவ்ஸ் உச்சிமாநாட்டிற்கு இந்தியா பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்தியாவின் உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை உலகம் மெதுவாக ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் மென்சக்தியையம், படைப்பாற்றல் சார்ந்த சூழலியலையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும்.
எனதருமை நாட்டு மக்களே,
இந்தியாவில் அபரிமிதமான வன வளங்கள் உள்ளன. நம் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்கள் உள்ளன. நம்மிடையே ஏராளமான திறன்கள் இருந்த போதும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் நாம் பின்தங்கியுள்ளோம். நமது மென்சக்தி மூலம் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது. நமது திறன்களை நாம் உலகிற்குப் பறைசாற்ற வேண்டும்; இந்த முயற்சியை நாம் வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும். இன்று, விளையாட்டுத் துறையும் இந்தியாவை நோக்கி மக்களை ஈர்க்கும் ஒரு முக்கிய காரணியாக மாறி வருகிறது. முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஏன் இந்தியாவில் நடத்தக்கூடாது? இசை நிகழ்ச்சிகள் சார்ந்த பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதுடன், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள கலைஞர்கள், ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்திய மண்ணில் இசை நிகழ்ச்சிகளை நடத்த விரும்புகின்றனர். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக்கொள்வதற்கான கட்டமைப்புகளையும் வசதிகளையும் நாம் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
இந்த வலிமையின் ஏழு தூண்கள், தனிப்பட்டத் துறைகளில் முன்னேற்றம் அடைவது சம்பந்தமானது மட்டுமல்ல. நாட்டிற்காக நாம் நிர்ணயித்துள்ள இலக்குகள், லட்சியங்களின் அளவைத் தாண்டிச் செயல்பட, ஒரு முழுமையான அணுகுமுறையுடன் நாம் பணியாற்ற வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
இவற்றில் சில விஷயங்களை பற்றி நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன், எனினும் அவற்றையும் கடந்து நான் சிந்திக்கிறேன். இந்த நாட்டை அதிரச் செய்ய விரும்புகிறேன். நாட்டின் வலிமையைத் தட்டி எழுப்ப விரும்புகிறேன். ஒரு நாடு என்பது அரசை மட்டுமே கொண்டிருப்பதில்லை; பல்வேறு குடிமக்களால்தான் ஒரு தேசம் உருவாக்கப்படுகிறது. இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி நாம் ஏன் பயணிக்கக் கூடாது? ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அடுத்த பத்தாண்டுகளுக்குள், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் 50 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று நாம் ஏன் இலக்கு நிர்ணயிக்கக் கூடாது? இன்று நமது வங்கித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது. உலகின் முன்னணி வங்கிகளின் வரிசையில் ஒரு இந்திய வங்கியின் கொடியும் ஏன் பறக்கக்கூடாது? உலகின் சிறந்த ஐந்து வங்கிகளுக்குள் ஒரு இந்திய வங்கியும் இடம்பெற வேண்டும். இந்தியாவின் மருந்துத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், உலகின் மிகப்பெரிய ஐந்து மருந்து நிறுவனங்களின் பட்டியலில் ஒன்று அல்லது இரண்டு இந்திய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்பதே தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. அந்தத் துறையிலும் இந்தியா தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும். சட்ட நிறுவனங்களும் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன. உலகளாவிய தலைமைத்துவம் இப்போது நம் கைகளில் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா? நம்மிடம் திறமை உள்ளது. நம்மிடம் ஆற்றல் உள்ளது. நீண்ட வரலாறும் நம்மிடம் உள்ளது. மொழிகளின் மீதான புலமையும் உள்ளது. நாம் சர்வதேச நிலையைச் சென்றடைய வேண்டும். உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் ஒரு இந்திய ஆலோசனை நிறுவனமோ, கணக்கியல் நிறுவனமோ ஏன் இடம்பெறக்கூடாது? நமது தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக அளவில் முன்னிலை வகிக்க வேண்டும். அதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். உலகையே ஈர்க்கக்கூடிய பிராண்டுகள் நம்மிடம் இருக்க வேண்டும். நமது பிராண்டுகள் நம் நாட்டின் அடையாளமாகத் திகழ்வதுடன், உலக நாடுகளின் விருப்பத் தலமாக அவை இந்தியாவை மாற்ற வேண்டும். அந்த இலக்கை நோக்கியே நாம் செயல்பட வேண்டும். இதற்காக, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்திய அரசு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து, நமது சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். 2047-ம் ஆண்டிற்கான இலக்கை அடையும் வகையில் நமது கட்டமைப்புகளையும் நடைமுறைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். கடந்த காலத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளையே நாம் தொடர்ந்து பின்பற்ற முடியாது. மாறாக, எதிர்காலத்தின் கனவுகள் மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ப புதிய கொள்கைகளையும் விதிமுறைகளையும் நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தால், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்கான பாதையில் அயராது உழைப்பதில் நாங்கள் சற்றும் தளர மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தொழில்துறை என அனைவரும் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும். சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும், நான் ஏற்கனவே கூறியது போல, கட்டாயத்தின் பேரிலோ நிர்பந்தத்தினாலோ இல்லாமல், ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். நமது இலக்குகளை அடைவதற்காகவே இவற்றைச் செயல்படுத்துகிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
'வளர்ச்சியடைந்த இந்தியா’ குறித்தும், நாட்டை விரைவான வேகத்தில் முன்னேற்றுவது குறித்தும் நான் பேசும்போது, இந்த முயற்சிகளின் மூலம் அதிக அளவில் யார் பயனடைகிறார்கள்? இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் மிகப்பெரிய சக்தி எது? அப்படி ஒன்று இருக்கிறது என்றால், அது என் நாட்டின் இளைஞர்கள், நாட்டின் இளைஞர் சக்திதான். 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' நோக்கிய பயணத்தில் இளைஞர்கள் மிக முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, 'வளர்ச்சியடைந்த இந்தியாவால்' மிகப்பெரிய அளவில் பயனடையப் போவதும் என் நாட்டின் இளைஞர்கள்தான். எனவே, நமது இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் பங்கேற்புடன் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து நாம் முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
கடந்த 10-12 ஆண்டுகளில் இத்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தற்போது 2.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நாட்டின் இளைஞர்கள் தங்களுக்காகப் பணியாற்றுவதுடன், ஏராளமானோருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனர். ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான புத்தாக்க நிதியை அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இளைஞர்களிடம் நான் கூற விரும்புவது இதுதான்: உங்கள் கனவுகளுடன் முன்வாருங்கள்; வளங்களுக்கு எவ்விதப் பற்றாக்குறையும் ஏற்படாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். உங்கள் உள்ளங்களையும் சிந்தனைகளையும் வலுப்படுத்த, ரூ. 1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகியிருப்பதுடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் மலிவு விலையில் தரவு கிடைப்பது, நமது இளைஞர்களுக்குப் புதிய ஆற்றலை அளித்துள்ளது. உலகில் மிகக் குறைந்த விலையில் தரவு கிடைக்கும் இடம் ஏதேனும் உண்டென்றால், அது இந்த இந்திய மண்ணாகத்தான் இருக்கும். இது நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய ஆற்றலை வழங்கியுள்ளது. திறன் இந்தியா திட்டத்தை நாங்கள் ஒரு தேசியத் திட்டமாக மாற்றியிருக்கிறோம். விண்வெளித் துறையில் தனியாரின் பங்கேற்புக்கு வித்திட்டுள்ளோம். தேசிய ட்ரோன் கொள்கையையும், கேலோ இந்தியா கொள்கையையும் வடிவமைத்திருக்கிறோம். கடந்த 35 ஆண்டுகளாகப் புதிய கல்விக் கொள்கை எதுவும் உருவாக்கப்படவில்லை; நாங்கள் ஒரு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்திருக்கிறோம்; இதன் மூலம் நடுத்தர குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
நண்பர்களே,
2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்திற்கான புள்ளிவிவரங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். 2004 முதல் 2014 வரை நம் நாட்டில் 350-க்கும் குறைவான பல்கலைக்கழகங்களே இருந்தன. ஆனால், கடந்து 10-12 ஆண்டுகளில், சுமார் 650 புதிய பல்கலைக்கழகங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. நாம் 1,000 என்ற எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 2014-க்கு முன் சுமார் 400 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. இன்று கிட்டத்தட்ட 850 மருத்துவ இடங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இப்போது இந்தியாவிற்கு வருகின்றன. நமது இளைஞர்கள் இந்தியாவிலேயே பயின்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெறும் வகையிலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டின் இளம் தலைமுறையினர், சிறுவயதிலிருந்தே தொழில்நுட்பத்தின்பால் ஈர்க்கப்படுவதை உறுதிசெய்வதை நோக்கிப் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் வகையில், 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்களை இளம் சிறார்களின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளோம். நாங்கள் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்; குறிப்பாக, புத்தொழில் நிறுவனத் துறையை ஊக்குவிக்கிறோம். சராசரியாக 28 வயதிலான இளைஞர்களின் தலைமையிலான இந்தியத் தனியார் புத்தொழில் நிறுவனங்கள், தங்கள் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் உண்மையிலேயே பாராட்டத்தக்க சாதனையைப் படைத்துள்ளனர்.
நண்பர்களே,
இன்று, 2.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. சமீபத்தில் நாங்கள் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு ஒன்றை நடத்தினோம். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மிக வேகமாக நடைபெறுகிறது. செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் நம் நாட்டு இளைஞர்கள் உலகிற்குத் தலைமை தாங்கும் திறனைப் பெறும் வகையில், அடுத்த ஓராண்டிற்குள் ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.
நண்பர்களே,
உயிரிப் பொருளாதாரம் என்பது ஒரு புதிய துறையாகும். 2014-க்கு முன், இந்தத் துறையின் மதிப்பு வெறும் ரூ. 60,000 கோடியாக இருந்தது. என் நாட்டு இளைஞர்களே, நீங்கள் சாதித்திருப்பதைப் பாருங்கள். சரியான கொள்கைகளும் தெளிவான இலக்குகளும் இருக்கும்போது, என் நாட்டு இளைஞர்களால் எத்தகைய சாதனைகளையும் படைக்க முடியும் என்பதை நீங்கள் காணலாம். உயிரிப் பொருளாதாரத் துறையில் நாட்டின் இளைஞர் சக்தி தனது திறனை நிரூபித்துள்ளது. 2014-க்கு முன்பு ரூ. 60,000 கோடியாக இருந்த இத்துறையின் விற்பனை அளவு, இன்று ரூ. 20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2009–10-ல் வெறும் 1.5 லட்சம் மின்சார வாகனங்களே விற்பனை செய்யப்பட்டன. ஆனால் 2025–26-ல் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எனதருமை நாட்டு மக்களே,
விமானப் போக்குவரத்துத் துறையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது நமது இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. புதிய விமான நிலையங்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்பு மற்றும் முழுமையான சீரமைப்புப் பணிகளும், நாட்டில் ஏராளமான திறன்மிக்க தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களை உருவாக்கும் முயற்சியில் நாம் வெற்றியடைந்துள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை விமானமான 'சி 295', ஏற்கனவே தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இதில் ட்ரோன்களும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. ஸ்வாமித்வா திட்டம், ட்ரோன்கள் மூலம் கிராமங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 3.25 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளன. இதன் விளைவாக, சுமார் ரூ. 140 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்கள், வங்கிகளிடமிருந்து கடன் பெற்று, தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
எனதருமை நாட்டு மக்களே,
பயிற்சி வகுப்புகளால் ஏற்படும் அழுத்தம், நமது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு பெரும் சுமையாக மாறியுள்ளது. தங்கள் குழந்தையைப் பயிற்சி வகுப்புக்கு அனுப்பவில்லை என்றால், சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தாங்கள் செயல்படவில்லை என்று ஒவ்வொரு பெற்றோரும் கருதுகின்றனர். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் செலவிடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், அவர்களின் பிள்ளைகள் வீட்டிற்கு அருகிலேயே பயிலவும், அவர்களுக்குத் தகுந்த ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யவும், குடும்பத்தின் மீது பொருளாதாரச் சுமை விழுவதைத் தவிர்க்கவும் நாங்கள் விரும்புகிறோம். எனவே, பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சியை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். நம்மிடம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளது. நம்மிடம் சிறந்த திறமையாளர்களும் ஆசிரியர்களும் உள்ளனர். இந்த வளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சியை வழங்குவதற்கான ஒரு பரந்த வலையமைப்பை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.
எனதருமை நாட்டு மக்களே,
"நன்றாக விளையாடுபவர்கள், சிறந்து விளங்குவார்கள்" என்று நான் எப்போதுமே கூறி வருகிறேன். விளையாடுவது, வளர்வது குறித்துப் பேசும்போது, விளையாட்டு உலகில் இன்று இந்தியா தனது முத்திரையைப் பதித்து வருகிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். விளையாட்டுப் போட்டிகளின் வெற்றி மேடைகளில் இப்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிப்பதுடன், மூவண்ணக் கொடி பெருமையுடன் பறக்கிறது. 'டாப்ஸ்' திட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழகங்கள் அளவிலான போட்டிகள், குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி, விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டுக்கான ஊட்டச்சத்து போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் விளையாட்டு வீரர்களாக மாற முடியாவிட்டாலும், விளையாட்டு சார்ந்த ஆதரவு அமைப்பில் அவர்களுக்குப் பரந்த அளவிலான புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. விளையாட்டுத் துறையில் இந்தியாவின் செயல்பாடு சீராக மேம்பட்டு வருகிறது. மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வலுவான போட்டியாளர்களாக நாம் முன்னேறி வருகிறோம். 2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளையும் இந்தியா நடத்தவுள்ளது.
எனதருமை குடிமக்களே,
உலகம் முழுவதும் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 40 வகையான விளையாட்டுகளும், ஏறக்குறைய 325 முதல் 350 வரையிலான போட்டி நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. இந்த 325 போட்டி நிகழ்வுகளில் மூன்றில் இரண்டு பங்கு போட்டிகளில் இந்தியா பங்கேற்பதே இல்லை என்பதை அறிந்து நீங்கள் வருத்தமடையலாம். நாம் அவற்றில் பங்கேற்பதில்லை; தகுதி பெறுவதுமில்லை. நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன், ஒரு அழைப்பு விடுக்கிறேன், உங்கள் ஆதரவையும் கோருகிறேன்: 2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் 2036-ல், இன்று இந்தியா போட்டியிடாத அல்லது தகுதி பெறாத, அதேபோல இந்தியா இதுவரை கலந்து கொள்ளாத அந்தப் போட்டிகளில், நான்கில் மூன்று பங்கு இடங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்தத் துறைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, திறமையாளர்களைக் கண்டறியும் ஒரு சிறப்பு முன்முயற்சியைத் தொடங்கவும் நாங்கள் விரும்புகிறோம். 2036-ம் ஆண்டு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டுமானால், தற்போது 5, 10 அல்லது 15 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகள் மீது நாம் இப்போதே கவனம் செலுத்த வேண்டும். நமது பெண் குழந்தைகளின் செயல்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் உள்ள விளையாட்டுத் திறனைக் கண்டறிய, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பள்ளிகளில் திறமையாளர்களைத் தேடும் ஒரு இயக்கம் நடத்தப்படும். அவர்களின் திறன்கள் மதிப்பிடப்படுவதுடன், நாட்டிற்காகப் போட்டியிடக்கூடிய சிறந்த விளையாட்டு வீரர்களாக அவர்கள் உருவெடுப்பதற்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும்.
எனது அன்பிற்குரிய இளம் நண்பர்களே,
போதைப்பொருள் பயன்பாடு, நாட்டிற்கும் அதன் இளைஞர்களுக்கும் ஒரு பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது. போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாக அமைய வேண்டும். நமது ஒளிமயமான எதிர்காலத்திற்காக, நம் இளைய தலைமுறை, வலிமையுடன் திகழ வேண்டும். மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர் சக்தியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, எனது இளம் இந்தியா (மை பாரத்) அமைப்பின் தன்னார்வலர்கள், நாடு முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்கள், சமூக மற்றும் கலாச்சார அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 100 வார காலத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 100 வாரங்களுக்கு விழிப்புணர்வு இயக்கம் ஒன்று நடைபெறும். நீங்களும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறி, இதில் இணைந்து, போதைப்பொருள் இல்லாத இந்தியாவின் கனவை நனவாக்க முன்வர வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
பல தசாப்தங்களாக நீடித்து வரும் சவால்களை இந்த 21-ம் நூற்றாண்டில், நாம் வேரோடு ஒழிப்பது அவசியமாகிறது. நக்சல் மற்றும் மாவோயிச தாக்குதல்கள், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்துள்ளன. எண்ணற்ற தாய்மார்களின் குலக்கொழுந்தாகத் திகழ்ந்த இளைஞர்களின் வாழ்க்கையைச் சிதைத்ததுடன், ஒவ்வொரு பெற்றோரின் கனவுகளையும் இந்தத் தாக்குதல்கள் தகர்த்துள்ளன. நான்கு தசாப்தங்களாக, இந்தியாவின் பெரும் பகுதியையும் அதன் மக்கள் தொகையில் கணிசமான ஒரு பிரிவினரையும் நக்சலிசம் தனது பிடியில் வைத்திருந்தது. அது அரசியலமைப்பைக் கிழித்தெறிந்ததுடன், நாட்டின் சாதாரண குடிமக்களைப் பாதுகாக்கும் பணியில் 3,500-க்கும் மேற்பட்ட நமது காவல்துறையினரும், பாதுகாப்புப் படை வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். சாதாரண குடிமக்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக, போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையிலான நமது காவல்துறைப் பணியாளர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. நக்சலிசம், இந்த மண்ணை ரத்தக் களரியாக மாற்றியிருந்தது. 2014-ல் உங்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எங்களுக்கு நீங்கள் அளித்தபோது, ஒட்டு மொத்த நாட்டையும் நக்சல் பாதிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியெடுத்தோம். இன்று, நக்சல்-மாவோயிச வன்முறைக்குத் தனது இறுதி மூச்சை வெளிவிடுவதற்கான வலிமை கூட இல்லை என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் அதனை முழுமையாக ஒழித்துக்கட்டும் திசையில் முன்னேறி வருகிறோம். ஒரு காலத்தில் நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்திய, ரத்தத்தால் கறைபடிந்த அந்தப் பகுதிகளில், இன்று வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமான தேசியக் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. அந்தப் பகுதிகள், நக்சல் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
எனதருமை நாட்டு மக்களே,
ஆனால், இந்தச் சவாலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது குறித்து நாம் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக, மாவோயிசக் கொள்கையைப் பின்பற்றியவர்கள் நாட்டின் அதிகார மையங்களில் தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்திருந்தனர். அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுக்களில் இடம்பெற்றதன் மூலம்கூட, இந்தக் கொள்கை, அரசின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனதருமை நாட்டு மக்களே,
காடுகளில் இருந்த ஆயுதமேந்திய நக்சலைட்டுகளை ஒழித்து, அந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டை விடுவிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இருப்பினும், ஆயுதமேந்திய நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், மனதளவில் நக்சலைட்டுகளாக இருப்பவர்களின் செயல்பாடு இன்னும் தொடர்கிறது. அவர்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். வன்முறை மற்றும் அராஜகத்தை முன்னெடுப்பதற்கான வழிகளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்தைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். இதுபோன்று, மனதளவில் நக்சலைட்டுகளாக இருப்பவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும். அதேவேளையில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் முக்கியப் பணியை நோக்கி நாட்டின் இளைஞர்களை நாம் வழிநடத்த வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவது நம் அனைவரின் கடமை. சவால்கள் நாட்டின் எல்லைக்கு உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ வந்தாலும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் போரின் தன்மை மாறி வருகிறது; மோதல்கள் எல்லைகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்பதற்கு இனி எந்த உத்தரவாதமும் இல்லை. நவீன காலப் போர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், வங்கித் துறை அல்லது தரவு மையங்களைக் குறிவைக்கக்கூடும். அதாவது, உள்கட்டமைப்புகளும் தொழிற்சாலைகளும் அழிக்கப்படும் ஒரு புதிய வகையான போர்முறை இது. சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சுதர்சன் சக்ரா இயக்கத்தை அறிவித்தோம். அதற்கான பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்று நமது பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 50 மடங்கு அதிகரித்துள்ளது. நமது ஆயுதங்கள் சுமார் 100 நாடுகளைச் சென்றடைகின்றன. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், நாம் பாதுகாப்பு உபகரணங்களில் கவனம் செலுத்துவதுடன் நமது ஆயுதப் படைகளின் திறனையும் மேம்படுத்த வேண்டும். அதே வேளையில், குடிமக்களும் தயாராக இருக்க வேண்டும். கடந்த நூற்றாண்டின் போர்களின் அடிப்படையில் நம் நாட்டில் உருவாக்கப்பட்ட குடிமைப் பாதுகாப்பு அமைப்புமுறைகள் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமற்றதாகிவிட்டன. எனவே, வரும் நாட்களில் ஒரு துடிப்பான குடிமைப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவோம் என்று செங்கோட்டையிலிருந்து இன்று நான் அறிவிக்கிறேன். நவீன அமைப்புமுறைகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். நவீன கால நெருக்கடிகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க என்னென்ன ஏற்பாடுகளைச் செய்ய முடியும்? நவீன காலச் சவால்களை எதிர்கொள்ள, குடிமைப் பாதுகாப்புக்கான ஒரு மிகப்பெரிய தன்னார்வலர் படையை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.
எனதருமை நாட்டு மக்களே,
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் பங்களிப்பு நம் அனைவருக்கும் பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. போர் விமானங்களை இயக்குவதிலும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையிலும் நமது மகள்களே முன்னணியில் உள்ளனர். விளையாட்டுத் துறையிலும் அவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். ஸ்டெம் சார்ந்த கல்வியில் சேர்வதிலும் நமது மகள்களே முன்னணியில் உள்ளனர். ஆயுதப்படைகளில் கூட, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்து வெளியேறும் நமது மகள்கள், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் அதிகாரத்துடனும் நாட்டின் ராணுவத்தை வழிநடத்தும் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். எனது மகள்களின் உண்மையான வலிமையைக் காணும் வகையில், சமீபத்தில் சனந்தில் உள்ள ஒரு குறைக்கடத்தி உற்பத்தி நிலையத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் பணியாற்றி வருவதைக் காண முடிந்தது. கடவுச்சீட்டு என்றால் என்னவென்றே தெரியாத கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் அவர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்ற அந்தப் பெண்கள், இன்று சிப் தயாரிப்புத் துறையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கண்ட அந்தத் தன்னம்பிக்கை என்னை மிகவும் ஈர்த்தது. 3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் நிர்ணயித்திருந்த இலக்கை ஏற்கனவே கடந்துவிட்டோம். இப்போது, 6 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் நோக்கத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். புதிதாக 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளின் மேம்பாடு, பெண்களின் சக்தியால் ஊரகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
எனதருமை நாட்டு மக்களே,
இன்று, பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் ஏராளமான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு, நாட்டை வழிநடத்துவதுடன், பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, மிகச் சிறந்த தலைமைத்துவத்தையும் வழங்குகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே, நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்தினால், கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கனவு அரசியல் சூழலில் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்துள்ளது. இன்று, செங்கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியின் நிழலில் நின்றுகொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன், அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வாருங்கள், மகளிர் சக்தியை மதித்துப் போற்றுவோம். அவர்களின் கண்ணியத்தைக் காக்கவும், இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கும் வகையில் சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையில் நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு 33% பிரதிநிதித்துவம் விரைவில் கிடைப்பதை உறுதி செய்யவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இது காலத்தின் கட்டாயம். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, அவர்களது கண்ணியத்தைக் காக்கும் இந்த முயற்சியில் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான பெருமையையும் புகழையும் நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், என் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உரிய உரிமைகளை மட்டும் பெற்றுத் தாருங்கள்.
எனதருமை நாட்டு மக்களே,
நாட்டின் கடைக்கோடி மனிதரையும் வளர்ச்சி சென்றடையும்போதுதான், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு பூர்த்தியடையும். 2014-க்கு முன், வெறும் 25 கோடி மக்களுக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பு வசதி இருந்தது; வெறும் 25 கோடி பேருக்கு மட்டுமே.
நண்பர்களே,
கடந்த 5-7 தசாப்தங்களில் வெறும் 25 கோடி பேருக்கு மட்டுமே கிடைத்திருந்த சமூகப் பாதுகாப்பு வசதியை, நாங்கள் ஒரே தசாப்தத்திற்குள் 100 கோடி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெறுகின்றனர். இதனால் கோடிக்கணக்கான குடும்பங்கள் அதிகம் பயனடைந்துள்ளன. மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காகச் செலவிடப்பட்டிருக்க வேண்டிய 2 லட்சம் கோடி ரூபாய், ஆயுஷ்மான் அட்டையின் மூலம், அக்குடும்பங்களுக்குச் சேமிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அக்குடும்பங்களுக்கு இத்தகைய மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது!
எனதருமை நாட்டு மக்களே,
இன்று, ஒரு பணியில் உங்கள் உதவியை நான் நாடுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இதில் இளைஞர்கள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் நேரத்தின் ஓரிரு மணிநேரம் கூட தேசத்தை வெகுவாக வலுப்படுத்தக்கூடும். ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தில் நாட்டிற்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் ஒரு பெரும் சக்தியாக மாறவிருக்கிறீர்கள். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் அதற்கேற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். இப்போதைய காலக்கட்டத்தில் நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு மற்றும் எண்களிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கை என்பது வெறும் புள்ளிவிவரங்கள் சார்ந்தது மட்டுமல்ல. இதிலிருந்து பெறப்படும் விவரங்களைக் கொண்டே கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன. நாட்டின் முன்னேற்றத்திற்கான செயல்திட்டம் தயாரிக்கப்படுகிறது. எனவே, துல்லியமான தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியம். கணக்கெடுப்பதற்கு அரசுப் பிரதிநிதிகள் வரும்போது சில சமயங்களில் அவர்கள் மிகுந்த அவசரத்தில் இருப்பதால், ஒரே சொல்லை வெவ்வேறு விதமாக எழுதும் நிலை ஏற்படுகிறது. இதனால் துல்லியமான முடிவுகளைப் பெறுவதில் சிக்கல்கள் எழுகின்றன. தற்போது தொழில்நுட்ப வசதி உள்ளதால், உங்கள் செல்பேசியைப் பயன்படுத்தி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை நீங்களே சமர்ப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் வீடுகளுக்கு வரும் பிரதிநிதியிடம் விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து, எழுத்துப்பிழைகள் அல்லது தகவல் பிழைகள் ஏதுமின்றி டிஜிட்டல் முறையில் பதிவை நிறைவு செய்தால், அந்தத் தரவுகளின் துல்லியம் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். அதனால்தான், நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து, அந்த முழுமையான படிவத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுமாறு நான் வலியுறுத்துகிறேன். முதலில் காகிதத்தில் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்த பிறகு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னணு முறையில் அதைப் பதிவேற்றம் செய்யுங்கள். ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்; நாடு இந்த மாபெரும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினால், நாட்டின் நேரமும் ஆற்றலும் ஆக்கபூர்வமான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதனால்தான், இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் எனது நாட்டு இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
செங்கோட்டையிலிருந்து நான் ‘ஐந்து உறுதிமொழிகள்’ பற்றிப் பேசினேன். இந்த ஐந்து உறுதிமொழிகளும் நாட்டிற்கு அளப்பரிய வலிமையை அளித்துள்ளன. சுயமரியாதை உணர்வுடனும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைக் கடந்து செல்லும் திறனுடனும் முன்னேறிச் செல்ல நாட்டை இவை வலுப்படுத்தியுள்ளன. அடிமை மனப்பான்மையை நாம் ஒவ்வொரு கணமும் வேரறுக்க வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கர், பண்டித நேரு, சர்தார் படேல், பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, பகவான் பிர்சா முண்டா மற்றும் ஜோதிபா பூலே ஆகியோர் கனவு கண்ட இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நாம் முன்னேறிச் செல்வோம். இந்த உறுதியை நாம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவோம்: நம்முடைய சொந்த நலன்களை விட நாட்டின் நலனே முதன்மையானது, கடமையுணர்வே நம் அடையாளத்தை வரையறுப்பதாக அமைய வேண்டும். என் நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் சொல்வது இதுதான்—இதுவே நமக்கான காலம், இதுவே நமக்கான தருணம், இதுவே நமது உறுதிப்பாடு. கனவுகளை உறுதிப்பாடாகவும், உறுதிப்பாட்டைத் திறனாகவும், திறனை வெற்றியாகவும் மாற்றுவோம். ஒவ்வொரு முயற்சியையும் வளர்ச்சிக்கான நடவடிக்கையாக அமைப்போம், ஒன்றிணைந்து பயணிப்போம்; நமது இதயங்களை இணைப்போம்; நமது இலக்குடன் இணைந்திருப்போம்; ஒரு விளக்கு ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றும்; நாம் அனைவரும் இணைந்து ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம். இதே உணர்வுடன், இந்தத் திருநாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
மிக்க நன்றி!
(Release ID: 2299775)
***
AD/PLM/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2322781)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Nepali
,
हिन्दी
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
English
,
Urdu
,
Punjabi
,
Odia