சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி நாகாலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 5:11PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி), நாகாலாந்து ஆகிய இரு கல்வி நிறுவனங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆதரவுடன் செயல்படும் துரிதப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை நெட்வொர்க் திட்டத்தின் மூலமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தை மைய நிறுவனமாகவும், புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி நாகாலாந்து ஆகியவை துணை நிறுவனங்களாகவும் பங்கேற்கின்றன.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. பிரகாஷ் பாபு, நாடு முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் புதுவை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூட்டுறவுகளை விரிவுபடுத்துவதில் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். அவர் கூறுகையில், “சிக்கலான அறிவியல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு ஆராய்ச்சி அவசியமாகும். இதுபோன்ற ஒப்பந்தங்கள், நிறுவனங்கள் தங்கள் நிபுணத்துவம், உள்கட்டமைப்பு மற்றும் யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள உதவுவதோடு, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன" என்று குறிப்பிட்டார்.

என்.ஐ.டி நாகாலாந்தின் இயக்குநர் இளையபெருமாள், என்.ஐ.டி நாகாலாந்து மற்றும் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான நீண்ட கால கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகள் குறித்துப் பேசினார். இந்த திட்டத்தில் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து பங்கேற்கும் ஒரே நிறுவனம் என்.ஐ.டி நாகாலாந்து மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முன்னணி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி இணைப்புகளை வலுப்படுத்துவதற்கு இது வழங்கும் வாய்ப்புகளையும் வலியுறுத்தினார். இரு நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடவும், கூட்டுத் திட்டங்களை உருவாக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என வலியுறுத்தினார்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316046) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English