சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், தில்லி தேசிய தலைநகர் பகுதிக்கான உத்தரப் பிரதேச அரசின் காற்று மாசுபாடு தடுப்பு நடவடிக்கைத் திட்டத்தை ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 4:34PM by PIB Chennai
தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, மத்திய சுற்றுச்சூழல், துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இன்று (18.09.2026) லக்னோவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு கீர்த்திவர்தன் சிங், உத்தரப் பிரதேச சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் அருண் குமார், மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு தயாசங்கர் சிங் ஆகியோரும் உடனிருந்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்றார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக மத்திய அமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு காற்று மாசுபாட்டின் அளவைக் கணிசமாகக் குறைப்பதை உறுதி செய்வதற்காக, விரைவான செயலாக்கம், முகமைகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு, கடுமையான அமலாக்கம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார். உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்திய அமைச்சர், குளிர்காலத்திற்கு முந்தைய கால அவகாசத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தில்லியில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைவதற்கு, திறமையான ஒருங்கிணைப்பும் முறையான அமலாக்கமும் முக்கியம் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312061®=3&lang=1
***
(Release ID: 2312061)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314175)
வருகையாளர் எண்ணிக்கை : 11