சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற, 'சுற்றுச்சூழல் குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சர்வதேச மாநாட்டின் நிறைவு அமர்வில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்
நிலையான எதிர்காலத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தி மாநாடு நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2026 7:02PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புது தில்லியில் நடைபெற்ற , 'சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்' குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் நிறைவு அமர்வில் இன்று (20.09.2026) உரையாற்றினார். இந்த அமர்வில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மின் துறை அமைச்சர் திரு மனோகர் லால், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது சிறப்புரையில், சுற்றுச்சூழல் ஆளுகையை வலுப்படுத்துவதில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பங்கைப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், விரைவான வளர்ச்சியை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும், நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் கிட்டத்தட்ட 55 சதவீதம் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து பெறப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா தனது 50 சதவீத புதைபடிவமற்ற திறன் இலக்கை, திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டது என்றும் அவர் கூறினார். நிலையான நகர்ப்புற மேம்பாடு, நீர் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து, பசுமைப் போக்குவரத்து, மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளையும் திரு மனோகர் லால் எடுத்துரைத்தார்.
தமது உரையில், நீதிபதி பி.வி. நாகரத்னா, சுற்றுச்சூழல் ஆளுகையானது, தற்போதைய தேவைகளையும் எதிர்கால நலன்களையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தமது நிறைவுரையில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடல்கள், சுற்றுச்சூழல் சவால்களை அடையாளம் காண்பதைத் தாண்டி, அவற்றுக்குப் பதிலளிக்கும் திறன் கொண்ட நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளன என்று கூறினார்.
நிலையான எதிர்காலத்திற்காக, சுற்றுச்சூழல் கொள்கைகளையும் உறுதிமொழிகளையும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளாகவும், நீடித்த சர்வதேச ஒத்துழைப்பாகவும் மாற்றுவதற்கான ஒருமித்த வலியுறுத்தலுடன் மாநாடு நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312747®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312778)
வருகையாளர் எண்ணிக்கை : 7