PIB Backgrounder
மத்திய அரசுப் பணிகளுக்கான தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா - இதுவரை மொத்தம் 12.75 லட்சத்திற்கும் அதிகமான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2026 2:32PM by PIB Chennai
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில், தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ற இலக்குடன் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது, நாடு தழுவிய அளவிலான ஒரு முக்கிய ஆள்சேர்ப்பு இயக்கமாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில், மொத்தம் 12.75 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 20-வது கட்டமாக, செப்டம்பர் 2026-ல் நடைபெற்ற இந்த முகாமில் 51,000-க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆள்சேர்ப்பு, திறன் மேம்பாடு, தொழில் வழிகாட்டுதல், தொழில்முனைவோர் ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், இளைஞர்களைப் பல்வேறு வேலைவாய்ப்புக்களுக்கான நடவடிக்கைகளுடன் இணைக்கும் பாலமாக இது திகழ்கிறது. வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கும், வழங்குபவர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துதல், திறனுக்கேற்ற வேலைவாய்ப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம், திறன் வாய்ந்த பணியாளர் தொகுப்பை வலுப்படுத்தவும், இளைஞர்கள் பொதுச் சேவை, தேசிய வளர்ச்சியில் பங்கேற்கவும் இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் உதவுகின்றன.
தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவின் 20-வது கட்டம் 2026 செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றியதுடன், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகச் சேர்ந்த இளைஞர்களுக்கு 51,000-க்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
20-வது தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதையும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதையும் நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முயற்சியாகும்.
2022 அக்டோபர் 22 அன்று தொடங்கப்பட்ட இந்த முன்முயற்ச்சி, தொடக்கத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 10 லட்சம் பேரை அரசுப் பணிகளில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. முதல் வேலைவாய்ப்புத் திருவிழாவின் போது, நாடு முழுவதும் 50 இடங்களில், 75,000-க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முதல் 19 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த முகாம்கள் மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சும் வகையில், 12 லட்சத்திற்கும் அதிகமான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள், ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதார அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்துள்ளனர்.
இந்த முயற்சி பொதுத்துறையில் பணியாளர்கள் நியமனத்தை விரைவுபடுத்தியுள்ள அதேவேளையில், இளைஞர்கள், பொதுச் சேவையில் தங்களத்து பணி வாழ்வைத் தொடங்கி, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312367®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2312537)
வருகையாளர் எண்ணிக்கை : 12