PIB Backgrounder
21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்துதல்: முன்னோடி பள்ளிகளாக உருவெடுத்து வரும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2026 12:17PM by PIB Chennai
தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் 2022 செப்டம்பர் 7 அன்று பிஎம் ஸ்ரீ (பிரதமரின் வளர்ந்து வரும் இந்தியாவிற்கான பள்ளிகள்) திட்டம் தொடங்கப்பட்டது. 2022-23 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்தில் ரூ.27,360 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள், கற்பித்தல் முறைகள், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு, மாணவ, மாணவியரை 21-ம் நூற்றாண்டுக்கான திறன்களைப் பெற்றவர்களாக மேம்படுத்தி வருகிறது. 2026 ஜூலை நிலவரப்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, என்சிஇஆர்டி பள்ளிகள் உட்பட 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 14,500 பள்ளிகள் என்ற இலக்கில் 90 சதவீதம் அதாவது, 13,092 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 14.71 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 24.69 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இச்சூழலில், தரமான, சமத்துவக் கல்வியை உறுதி செய்வதில் பிஎம் ஸ்ரீ திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பங்காக ரூ.18,128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த திட்ட நிதி ஒதுக்கீடு 2023-24-ல் ரூ.2,520 கோடியிலிருந்து 2026-27-ல் ரூ.5,224 கோடியாக, அதாவது சுமார் 107 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நேரடியாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர்.

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தங்களின் மண்டலங்களில் உள்ள பிற பள்ளிகளுக்கு வழிகாட்டியாகவும் மாதிரி பள்ளிகளாகவும் செயல்படுகின்றன. வெறும் பாடப்புத்தக அறிவோடு நின்றுவிடாமல் முழுமையான ஆளுமை வளர்ச்சி, மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல், விளையாட்டின் மூலம் கற்கும் முறை, பசுமைப் பள்ளி நடைமுறைகள் ஆகியவற்றை இவை ஊக்குவிக்கின்றன. சிபிஎஸ்இ அல்லது மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 5+3+3+4 என்ற புதிய கல்வி அமைப்பின்படி பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் புத்தகச் சுமையற்ற நாட்கள், உள்ளூர் கைவினைக்கலைஞர்களுடனான பயிற்சி, பாரம்பரியக் கலைகளை அறிந்துகொள்ளுதல் போன்ற செயல்வழிக் கற்றல் முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

பன்மொழி கற்றல், சமத்துவக் கல்வியை உறுதி செய்வதற்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. ஆரம்பக் கல்வியில் தாய்மொழி வழிக் கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. 2025-26 புள்ளிவிவரங்களின்படி, பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத ஆசிரியர்கள், 1,994 உருது ஆசிரியர்கள், 9,152 பிராந்திய மொழி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகள், நவீன டிஜிட்டல் வகுப்பறைகள், இணையதள வசதி, தீக்ஷா டிஜிட்டல் தளம் ஆகியவற்றின் மூலம் அறிவியல், கணிதத் தொழில்நுட்பத் திறன்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. விளையாட்டு, கலை, தலைமைப் பண்பு, வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்தத் திறன் மேம்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்கள், பள்ளித் தலைமைப் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்காக மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம் விரிவான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒரு நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் வரையிலும், ஆசிரியர் ஒருவருக்கு ரூ.2,500 வரையிலும் பயிற்சி நிதி வழங்கப்படுகிறது. தலைமை ஆசிரியர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி, கல்வி மேலாண்மைத் திட்டமிடல் பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு மாணவர் முன்னேற்ற அட்டை தயாரிப்பு, பாதுகாப்பு, மனநல ஆலோசனை, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு ஆகிய பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதும் 725 மாவட்டங்கள், 8,340 வட்டங்களில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் பரந்து விரிந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட 13,092 பள்ளிகளில் 1,305 தொடக்கப் பள்ளிகள், 3,102 நடுநிலைப் பள்ளிகள், 3,141 உயர்நிலைப் பள்ளிகள், 5,544 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். இவற்றில் 80 கஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளிகள், 913 கேந்திரிய பள்ளிகள், 620 நவோதயா பள்ளிகள், 4 என்சிஇஆர்டி பள்ளிகளும் அடங்கும். மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், குறைந்தபட்ச தகுதி வரம்புகளை ஆய்வு செய்தல், போட்டி முறைத் தேர்வு ஆகிய 3 கட்ட நடைமுறைகள் மூலமாக இந்தப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 70 சதவீத மதிப்பெண்களும், ஊரகப் பகுதிகளில் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்ற பள்ளிகள் கடுமையான ஆய்வுகளுக்குப் பின் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றன.
பள்ளிக் கட்டிடக் கட்டமைப்பை மட்டும் மேம்படுத்துவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் முழுமையான மாற்றத்தை பிஎம் ஸ்ரீ பள்ளிகள் முன்னெடுத்து வருகின்றன. இதன்மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலச் சவால்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கைமிக்க இளம் தலைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308156®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308242)
வருகையாளர் எண்ணிக்கை : 9