PIB Backgrounder
தேசிய தூய்மையான காற்றுத் திட்டம்: 108 நகரங்களில் காற்று மாசு அளவு குறைந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2026 8:26PM by PIB Chennai
உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் நீல வானத்திற்கான தூய்மையான காற்றுக்கான சர்வதேச தினம், காற்று மாசுபாட்டைத் தடுக்க துரிதமான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. இந்தியாவில் 130 நகரங்களில் தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18 நிலவரத்துடன் ஒப்பிடுகையில், 2025-26 நிதியாண்டில் 108 நகரங்களில் பிஎம் 10 அளவு குறைந்துள்ளது. இதில் 72 நகரங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 26 நகரங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகவும் குறைவாக பதிவாகியுள்ளது. வலுப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, தூய்மையான போக்குவரத்து, நகரங்களுக்கு ஏற்ற செயல்திட்டங்கள், அறிவியல் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தூய்மையான காற்றுக்கான இந்தியாவின் முயற்சிகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன.

மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொருளாதார நலன் ஆகியவற்றுக்கு தூய்மையான காற்று இன்றியமையாததாகும். நகரமயமாக்கல், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது உலகளாவிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. காற்று மாசுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐ நா பொதுச்சபை 2019-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதியை நீல வானத்திற்கான தூய்மையான காற்றுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது. இந்தியாவில் இந்த நாள் தூய்மை வாயு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காற்றின் தரக் கண்காணிப்பு, மாசு வெளியேற்றக் கட்டுப்பாடு, நகரங்களுக்கான பிரத்யேக செயல்திட்டங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

காற்றில் உடல்நலம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிக அளவில் சேரும்போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. போக்குவரத்து, தொழில்கள், கட்டுமானப் பணிகள், குப்பைகள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாசுக்கள் உருவாகின்றன. காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் முக்கிய காற்று மாசுக்களாகும். பிஎம்10, பிஎம்2.5 என இவை வகைப்படுத்தப்படுகின்றன. பிஎம்2.5 துகள்கள் மிகச்சிறியவை என்பதால் சுவாசப் பாதையின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் நுண்துகள் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
தேசிய சுற்றுப்புற காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், 2026 மார்ச் நிலவரப்படி, 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் 603 நகரங்களை உள்ளடக்கிய 1,646 கண்காணிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான சுற்றுப்புற காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்புகள் நிகழ்நேர காற்றுத் தரத் தகவல்களை வழங்குகின்றன. 292-க்கும் அதிகமான நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய ‘சமீர்’ செயலி, இணையதளம் உதவுகின்றன. தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான இணையதளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், 130 நகரங்கள் நகரம், மாநில அளவிலான தூய்மையான காற்றுக்கான செயல்திட்டங்களைத் தயாரித்துள்ளன. 2019-20 முதல் 2025-26 வரை காற்றுத் தர செயல்திறன் அடிப்படையிலான மானியமாக 130 நகரங்களுக்கு ரூ.16,423.55 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.11,575.54 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நகரங்கள் தெரிவித்துள்ளன. 2025-26 நிதியாண்டில் 108 நகரங்களில் பிஎம் 10 அளவு குறைந்துள்ளது. 14 நகரங்கள் தேசிய சுற்றுப்புற காற்றுத் தரநிலைகளை எட்டியுள்ளன.
வாகன மாசுபாட்டைக் குறைக்க 2020 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் பிஎஸ்-6 தர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுவதுடன், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகிறது. தொழிற்சாலை மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் தரநிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுமானம், சாலைத் தூசி, கழிவுகள் எரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்படுவதுடன், பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்கும் ஆலைகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ல் பஞ்சாபில் வைக்கோல் எரிப்பு நிகழ்வுகள் 93 சதவீதமும், ஹரியானாவில் 91 சதவீதமும் குறைந்துள்ளன.
பசுமைப் பரப்பை அதிகரிக்க பசுமை இந்தியா இயக்கம், நகர்ப்புற வனத் திட்டம், ஆரவல்லி பசுமைத் தடுப்புத் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2025 டிசம்பர் வரை ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ இயக்கத்தின் கீழ் 262.4 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காற்றுத் தர மேலாண்மை ஆணையம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்றின் தரம் மோசமடையும் போது படிப்படியான நடவடிக்கைகள் மூலம் மாசுபாட்டின் தீவிரத்துக்கு ஏற்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் நிகழ்நேர தரவுகள், காற்றுத் தர முன்னறிவிப்புகள், அறிவியல் மாதிரிகள், தூய்மையான போக்குவரத்து, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை, தொழிற்சாலை மாசுக் கட்டுப்பாடு, நகர்ப்புற பசுமைப் பரப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளுடன், பொதுமக்களிடையே தூய்மையான காற்று தொடர்பான விழிப்புணர்வு, மக்களின் பங்கேற்பு ஆகியவை நாம் அனைவரும் தூய்மையான காற்றை சுவாசிக்க வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307658®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307966)
வருகையாளர் எண்ணிக்கை : 11