பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 AUG 2026 11:19AM by PIB Chennai

மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களே, சவிதா கோவிந்த் அவர்களே மற்றும் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைத்துப் பெரியோர்களையும் வணங்குகிறேன். இங்குள்ள அனைவரின் பெயரையும் என்னால் தனித்தனியாகக் குறிப்பிட முடியாமல் போகலாம்; ஆனாலும், இது ஒரு குடும்ப விழாவைப் போல எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.

எனது அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கோவிந்த் அவர்களுடன் எனக்கு நீண்ட கால தொடர்பு உள்ளது. அவரை நெருக்கமாக அறியும் வாய்ப்பும், குடியரசுத்தலைவராக அவரது வழிகாட்டுதலைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன. இவை எல்லாவற்றையும் விட, என் மீது அவர் காட்டும் தனிப்பட்ட அன்பும் பாசமும் என் வாழ்வின் பெரும் பொக்கிஷமாகும்.

அவரது வாழ்க்கையைப் பற்றி நான் புரிந்துகொண்டதிலிருந்தும், அவரது திறமைகளை நான் பார்த்ததிலிருந்தும் என்னால் ஒன்றை முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும்; திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களின் சுயசரிதை, இந்திய ஜனநாயகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழும். அவரது வாழ்க்கை பயணம், சமூகம் மற்றும் நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டு என நிறைய விஷயங்களை என்னால் பேச முடியும். ஆனால், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு சிறு 'முன்னோட்டம்' மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதன் முழுமையான பலனைப் பெற, நீங்கள் இந்தப் புத்தகத்தை முழுவதும் படிக்க வேண்டும்.

நண்பர்களே,

கோவிந்த் அவர்களின் வாழ்க்கை பயணத்தை அவரது சொந்த வார்த்தைகளிலேயே அறிந்துகொள்வதும், அவரது அனுபவங்களைப் படிப்பதும் புதிய தலைமுறையினருக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். இந்த சுயசரிதைக்காக ராம்நாத் கோவிந்த் அவர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

கோவிந்த் அவர்கள் தனது நூலுக்கு மிகவும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியுள்ளார் — “இந்தியக் குடியரசு வென்றது: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்” (Triumph of the Indian Republic: My Life, My Struggles). இதன் பொருள் என்னவென்றால், வாழ்க்கையும் அதன் போராட்டங்களும் தனிப்பட்டவை, ஆனால் அந்தப் போராட்டங்களிலிருந்து கிடைத்த வெற்றிகள் இந்தியக் குடியரசுக்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் சொந்தமானவை.

நண்பர்களே,

மனித இயல்பு எப்படியிருக்கும் என்றால், வெற்றிக்கான பெருமையை தங்களே தட்டிக்கொள்வார்கள், ஆனால் சிரமங்களுக்குச் சமூகத்தைக் குறை கூறுவார்கள். ஆனால், மனம் பெருந்தன்மையுடன் இருக்கும்போது, இந்தியப் பண்பாடுகள் நிறைந்து இருக்கும்போது, ஒரு மனிதன் சமூகத்தில் குறைகளைக் கண்டுபிடிப்பதில் தன் நேரத்தை வீணடிப்பதில்லை. அவர் நேர்மறையான பக்கத்தில் கவனம் செலுத்துகிறார், மேலும் தனது வெற்றியில் சமூகத்தையும் ஒரு சமமான பங்காளியாகக் கருதுகிறார். கோவிந்த் அவர்களின் சுயசரிதையும் அதன் தலைப்பும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

அவரது வாழ்க்கையைப் பாருங்கள் — கான்பூர் தேஹாத் பகுதியில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர். கோடை வெயில் காலத்தில் ஒரு நாள் தனது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அவர் தனது நூலில் விவரித்து எழுதியுள்ளார். அவரது தாயார், தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல், வீட்டுப் பொருட்களைக் காப்பாற்ற முயன்றார். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த தாயைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பொருளும் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கான ஒரு கருவியாகும். அந்த முயற்சியில் அவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். கற்பனை செய்து பாருங்கள். மிகச் சிறிய வயதில் தாயை இப்படி இழப்பது எவ்வளவு வேதனையானதாக இருந்திருக்கும்! என் தாயார் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து என்னை ஆசீர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையிலும் கூட, நான் இப்போதும் அவரது இழப்பை உணர்கிறேன்.

நண்பர்களே,

இந்த வலியும் வேதனையும் நிறைந்த சம்பவம் யாரையும் உடைத்திருக்கக் கூடும், ஆனால் இது கோவிந்த் அவர்களின் இன்னும் பலமானவராக்கியது. ஒரு அயலாராக இருந்த தாய் இவரை வளர்க்க உதவினார். இதன் மூலம் சமூக ஒற்றுமையின் வலிமையை அவர் புரிந்துகொண்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இவரது தந்தையின் பங்கு இன்னும் பெரிதானது. தந்தை குடும்பத்தை நிர்வகித்த விதம், குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொடுத்த விதம் — இதனால்தான் கோவிந்த் அவர்கள் தனது தந்தையைத் தனது நாயகனாகக் கருதுகிறார்.

நண்பர்களே,

குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட இத்தகைய போராட்டங்களுக்கு நடுவே, கோவிந்த் அவர்கள் கல்வியைத் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வழியாக்கினார். கடுமையாக உழைத்தார், வளங்களின் பற்றாக்குறையைத் தன் பலவீனமாக மாறவிடவில்லை. மேலும், அக்காலத்தில் மக்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத உயரத்தை அவர் அடைந்தார். அதாவது, இவ்வளவு பெரிய இந்தியாவின் குடியரசுத்தலைவரானார்.

நண்பர்களே,

இவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்த பிறகும், கோவிந்த் அவர்களின் அடக்கமான பண்பும் எளிமையும் அப்படியே மாறாமல் இருந்தன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, பிரதமராக நான் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு  சென்று அவரைச் சந்திக்கும் போது, அவர் நெறிமுறைகளையும் தாண்டி சில செயல்களைச் செய்வார். பிரதமரை வழியனுப்புவதற்காக காரின் கதவு வரையே அவர் வருவார். இதைச் செய்ய வேண்டாம் என்று நான் அவரிடம் கேட்டுக் கொள்வதுண்டு, ஆனாலும் அவர் இறுதி வரை தனது பணிவை கைவிட்டதே இல்லை.

குடியரசுத்தலைவரான பிறகு, அவர் தனது சொந்த ஊரான பரோங்கிற்குச் சென்றபோது, தனது ஆசிரியர்களின் கால்களில் விழுந்து மரியாதை செலுத்தினார். ஊத்து மண்ணை வணங்கி, எளிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த நெகிழ்ச்சியான காட்சியை ஒட்டுமொத்த நாடே கண்டது. அவரது இந்த நற்பண்பு, ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் வகையிலான நமது இந்திய கலாச்சாரத்தின் பிம்பத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

நண்பர்களே,

நூற்றாண்டுகளாக நீடித்த அடிமைத்தனத்தால் நமது நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல இழப்புகளைச் சந்தித்தது. நமது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாகப் போராடினர். மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர், ஜோதிபா பூலே, சகோதரி சாவித்ரிபாய் பூலே என எத்தனையோ மாபெரும் தலைவர்கள் ஒரு புதிய இந்தியாவைக் கனவு கண்டார்கள்; எளிய மக்களும், நலிந்த மக்களும் கூட உச்சத்தை அடையக்கூடிய ஒரு இந்தியாவை அவர்கள் கற்பனை செய்தனர்.

 

கோவிந்த் அவர்கள் போன்ற ஆளுமைகள், தங்கள் உழைப்பினாலும் திறமையினாலும் தங்களது சொந்த வாழ்க்கையை மாற்றியது மட்டுமின்றி, பல நூற்றாண்டுகள் பழமையான அந்தக்கனவையும் தொலைநோக்குப் பார்வையையும் நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இந்தத் திசையிலான நமது முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எதிர்காலத்தில், கோவிந்த் அவர்கள் போலத் துன்பங்களைக் கண்டு தோற்றுப்போகாத, சிரமங்களைக் கண்டு சோர்வடையாத, கடின உழைப்பால் ஒவ்வொரு இலக்கையும் எளிதாக்கும் தைரியம் கொண்ட பல இளைஞர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். இந்த மாற்றம் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை நிறைவேற்றும். இங்கிருந்துதான் தன்னிறைவு பெற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவிற்கான பாதை உருவாகும்.

நண்பர்களே,

அத்தகைய இளைஞர் சக்தியை உருவாக்குவதில், கோவிந்த்ஜியின் சுயசரிதை ஒரு முக்கியமான உத்வேகத்தின் மூலமாக திகழ முடியும்.

நண்பர்களே,

தனது சுயசரிதையில், மொரார்ஜி தேசாயுடன் தனக்கிருந்த அனுபவங்களையும் கோவிந்த் அவர்கள் விரிவாக விவரித்துள்ளார். நாட்டுக்குத் தொண்டாற்றும் உத்வேகம் அவரிடம் இருந்தது; மொரார்ஜி பாயுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அவர் பெற்ற கற்றலும் வழியும் கோவிந்த் அவர்கள் அரசியலையும் சமூக சேவையையும் தன் பாதையாகத் தேர்ந்தெடுக்க வைத்தன. அவர் தனது கடமைகளில் முழு அர்ப்பணிப்புடன் இருந்தார். சேவையையே தனது இலக்காகக் கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி இதற்கு சாட்சியாகும். ஆளுநராகவும் கூட அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். குடியரசுத்தலைவராக இருந்தபோதும் அதே அர்ப்பணிப்பைக் கண்டோம்.

குடியரசுத்தலைவர் என்ற உச்ச பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட அவர் ஓய்வெடுக்கவில்லை. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்தும் அவர் இப்போதும் பணியாற்றி வருகிறார். நாட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த விவகாரத்திற்கான தீர்வு இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். கோவிந்த் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையிடமிருந்து நாட்டின் மக்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

சமூக வாழ்வில் தீவிரமாக இயங்கிக்கொண்டே, சுயசரிதை எழுதுவதற்காக நேரத்தை ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். கோவிந்த் அவர்களே, இந்தப் பணியை நம் அத்தனை பேருக்காகவும் செய்துள்ளார்; ஏழை மற்றும் நலிந்த பின்னணியில் உள்ள மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையின் நிழலை அதில் காணக்கூடிய பல விஷயங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளன.

எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் ஒரு எளிய குடும்பம் எவ்வாறு வாழ்க்கையின் தூய்மைக்கும் நேர்மைக்கும் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதை அவர் காட்டியுள்ளார். அந்த லட்சியங்கள் எவ்வாறு பிற்காலத்தில் நமது வாழ்க்கையின் அடிப்படையாக மாறுகின்றன, கடினமான காலங்கள் நமக்கு வழங்கும் நற்பண்புகள் எவ்வாறு வாழ்நாள் முழுவதும் நமக்கு வழிகாட்டுகின்றன, மேலும் இந்தத் தூய்மை எவ்வாறு நாட்டு சேவைக்கான வலிமையை நமக்குத் தருகிறது என்பதை விளக்கியுள்ளார். பல்வேறு பொறுப்புகளில் தனது கடமைகளை நிறைவேற்றும் போதும், கோவிந்த் அவர்களே சமூகத்திற்கு தொடர்ந்து இந்த உத்வேகத்தை அளித்துள்ளார்.

நண்பர்களே,

கோவிந்த் அவர்களின் சுயசரிதை அவரது வாழ்க்கையின் நினைவுகளை மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் முக்கியமான நினைவுகளையும் பாதுகாக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது சுயசரிதைக்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்.  இது ரீல்ஸ்களின் காலம், சமூக வலைதள செல்வாக்கு செலுத்துபவர்கள் உங்களை இங்கும் அங்கும் ஈர்க்கிறார்கள். இந்த ஷார்ட்கட் (குறுக்குவழிகள்) காலத்தில், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும். பாலத்தைப் பயன்படுத்துவதற்கு மாறாகச் சிலர் தண்டவாளத்தைக் கடந்து செல்வார்கள். அங்கே எழுதப்பட்டிருக்கும்: "ஷார்ட்கட் உங்களை குறுக்கிவிடும்". நீங்கள் குறுக்குவழிகளில் செல்ல விரும்பினாலும் கூட, நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன் — நீங்கள் யாரைப் போற்றுகிறீர்களோ அவர்களின் சுயசரிதைகளைப் படியுங்கள்.

சுயசரிதைகள் வரலாற்று நிகழ்வுகளை ஒரு புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. அவை வரலாற்றுடன் நெருக்கமானவை. அதனால்தான் கோவிந்த்ஜியின் இந்த முயற்சி வருங்கால சந்ததியினருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மேலும் வாழ்த்துகள். மிக்க நன்றி.

(பொறுப்புத்துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.)

(Release ID: 2298046)

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2307870) வருகையாளர் எண்ணிக்கை : 11