குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தினமலர் நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

உண்மை, தேசபக்தி, பொதுச் சேவை ஆகியவற்றின் மூலம் தினமலர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது: குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 7:05PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (05.09.2026) சென்னையில் தினமலர் நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியீட்டார்.

தினமலர் நாளிதழ் கடந்த 75 ஆண்டுகளாக உண்மை, தேசபக்தி, பொதுச் சேவை ஆகிய மாண்புகளைக் கடைப்பிடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்றும், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த நாளிதழ் தேசத்திற்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

உண்மைத் தகவல்களுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் 1951-ல் தினமலர் நிறுவப்பட்டது என்று கூறிய அவர் அதன் நிறுவனர் திரு டி வி ராமசுப்பையரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். ஒரு தனிநபரின் மனதில் உதித்த ஒரு எண்ணம், அடுத்தடுத்த தலைமுறையினரின் அர்ப்பணிப்பையும் கூட்டு முயற்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில், இப்போது ஒரு பெரிய அமைப்பாக வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாளிதழ், அழுத்தங்களுக்கு எதிராக உறுதியாக நின்று, தேசபக்தி, பொதுச் சேவை போன்ற உயர்ந்த மாண்புகளை அச்சமின்றி தொடர்ந்து நிலைநிறுத்தும் போது மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெறவும் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த 75 ஆண்டுகளாக தினமலர் ஆற்றி வரும் பணி, வாசகர்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

அடுத்த தலைமுறையினரை சிறப்பாக மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.  பள்ளி மாணவர்களுக்குப் பொது அறிவு, மொழித் திறன்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்த அறிவை வழங்கும் 'பட்டம்' வெளியீட்டின் மூலம் தினமலர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

தினமலர் நாளிதழ், மேலும் பல ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்து, உண்மையின் அளவுகோலாகத் திகழ வேண்டும் என்றும், அதன் வளர்ச்சியும் வெற்றியும் தொடர வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அஞ்சல் துறையின் சென்னை மண்டல இயக்குநர் மேஜர் மனோஜ், தினமலர் குழுமத்தின் ஆசிரியர் டாக்டர் ஆர் ராமசுப்பு, பதிப்பாளர்களான திரு எல் ஆதிமூலம், டாக்டர் எல் ராமசுப்பு, திருமதி ஜெயஸ்ரீ, திரு ஆர் ஆர் கோபால்ஜி, பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307008&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307033) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati