குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சென்னையில் ‘இந்தியா வால்வ்ஸ் 2026’ மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு - இந்திய இதய வால்வு பதிவேட்டைத் தொடங்கி வைத்தார்
இந்திய இதய வால்வு பதிவேடு, இதய நோயாளிகளுக்கு மேம்பட்ட இதய சிகிச்சையை உறுதிப்படுத்தும்: குடியரசு துணைத்தலைவர்
மருத்துவ முன்னேற்றங்களின் பயன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்
வளர்ச்சியடைந்த இந்தியா, ஆரோக்கியமான இந்தியாவாகவும் திகழ வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 4:42PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இதய வால்வு, இதய அமைப்பு சார்ந்த நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாடான ‘இந்தியா வால்வ்ஸ் 2026’-ல் பங்கேற்று, இந்திய வால்வு பதிவேட்டை (India Valve Registry)-ஐ இன்று (05.09.2026) சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார். மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம், கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால் ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவ வசதி என்பது மனித உரிமை எனவும் மருத்துவ அறிவியலில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றத்தின் பயன்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதய வால்வுகள், ரத்த நாள மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்த திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இதய வால்வு, இதய அமைப்பு சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவது சவாலாக உள்ள போதிலும், மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்கள் இந்நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
இந்தச் சூழலில் இந்திய இதய வால்வு பதிவேடு தொடங்கப்பட்டிருப்பது முக்கியமான முன்னேற்றம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதய வால்வு சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையையும், அதனை தொடர்ந்து காலப்போக்கில் ஏற்படும் சிகிச்சை விளைவுகள் குறித்த தகவல்களையும் முறையாகப் பதிவு செய்வதன் மூலம், தனிப்பட்ட மருத்துவ அனுபவங்களை, ஒருங்கிணைந்த மருத்துவ அறிவாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு நாடுகள் மேம்பட்ட இதய வால்வு சிகிச்சைகள், பிற இதய ரத்த நாள சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான தேசிய பதிவேடுகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் இதுபோன்ற கூட்டு முயற்சியை அவர் பெரிதும் வரவேற்றார். இன்றைய சூழலில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், தரவுகள் இல்லாமல் நாம் அதிகம் சாதிக்க முடியாது என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கே உரிய மருத்துவ தரவுகளை, ஆராய்ச்சி முடிவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை திரு சி. பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். உலகளாவிய மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் மதிப்புமிக்கவை என்றாலும், இந்தியா தனது நோயாளிகள், மருத்துவ அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ தரவுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பதிவேடுகள் சிகிச்சை விளைவுகளை நன்கு புரிந்துகொள்ளவும், சவால்களைக் கண்டறியவும், மருத்துவ அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்தவும் மருத்துவ சமூகத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களை சுட்டிக்காட்டினார். தற்போது 44 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் அட்டைதாரர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவ நிபுணத்துவத்துக்கும், புத்தாக்கத்திற்கும் முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதை குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார். கொவிட் பெருந்தொற்றின்போது இந்தியாவின் சாதனைகளைக் குறிப்பிட்ட அவர், இந்தியா தனது மக்களுக்காக தடுப்பூசிகளை உருவாக்கியதுடன், சுமார் 100 நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கியதாகக் கூறினார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
நமது மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் ஆகியோர் உலகம் முழுவதும் மதிப்பைப் பெற்றுள்ளனர் எனவும் மேம்பட்ட மருத்துவச் சிகிச்சையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தேசிய இலக்கை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், வளர்ச்சியடைந்த இந்தியா, ஆரோக்கியமான இந்தியாவாகவும் திகழ வேண்டும் என்றார்.
இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதையும் குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சூழலில், இந்திய இதய வால்வு பதிவேடு, தரவுகள் அடிப்படையிலான மருத்துவ ஆராய்ச்சி மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்களிப்பை வழங்க முடியும் என்று கூறினார்.
இந்தப் பதிவேடு இளம் இதயநோய் மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பதிவேடு நோயாளிகளின் தனியுரிமைத் தகவல்களை காப்பதில் கவனம் செலுத்தும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா வால்வ்ஸ் - 2026, இந்திய வால்வு பதிவேடு, ஆகியவற்றுடன் தொடர்புடைய மருத்துவ நிபுணர்கள், ஏற்பாட்டுக் குழுவினர் அனைவருக்கும் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு கே. ஜி. அருண்ராஜ், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் மருத்துவரும், இந்தியா வால்வ்ஸ் - 2026 மாநாட்டின் இயக்குநருமான டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு; புதுதில்லி ஃபோர்டில் எஸ்கார்ட்ஸ் இதய நிறுவனத்தின் இதய அறிவியல் துறைத் தலைவரான டாக்டர் அசோக் சேத், உள்ளிட்ட முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியா வால்வ்ஸ் 2026, இந்திய இதய வால்வு பதிவேடு:
இந்தியா வால்வ்ஸ் 2026 என்பது இதய வால்வு சார்ந்த இதய நோய்கள் குறித்த தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாடாகும். முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்களை ஒருங்கிணைத்து அறிவியல் பரிமாற்றம், பயிற்சி, கூட்டு ஆராய்ச்சிக்கு இந்த மாநாடு வாய்ப்பளிக்கிறது.
இந்திய இதய வால்வு பதிவேடு என்பது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ மையங்களை ஒருங்கிணைத்து, இதய வால்வு சிகிச்சைகள் தொடர்பான தரவுகளை முறையாகவும் பாதுகாப்பாகவும், நோயாளிகளின் அடையாளம் வெளிப்படாத வகையிலும் சேகரிப்பதற்கான கூட்டு முயற்சியாகும். இது இந்தியாவுக்கே உரிய மருத்துவ ஆதாரங்களை வலுப்படுத்தி, நோயாளிகளுக்கான சிகிச்சைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306940®=3&lang=1
***
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2306983)
வருகையாளர் எண்ணிக்கை : 24