PIB Backgrounder
அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம்: உரிய நேரத்தில் கடன் ஆதரவு மூலம் வணிகங்களை வலுப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 10:27AM by PIB Chennai
இசிஎல்ஜிஎஸ் 5.0 எனப்படும் 5-ம் கட்ட அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம், பல்வேறு இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குத் தேவையான கடன் உத்தரவாத ஆதரவை வழங்கி வருகிறது. தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது அரசு ஆதரவுடனான உத்தரவாதங்கள் வாயிலாகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தகுதியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பயணிகள் விமான நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முந்தைய கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, தற்போது இது மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான அணுகுமுறை, ஜன் சமர்த் வலைதளம் மூலமான டிஜிட்டல் நடைமுறை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு ஆகியவை இதன் பரவலை விரிவுபடுத்தியுள்ளன. பணப்புழக்கத்தை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பைப் பாதுகாத்தல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், ஐந்தாம் கட்ட அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.
நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்:
மாறிவரும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கும், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், தடையற்ற வணிகச் செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும் இந்தியா உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2026 மே 5 அன்று அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது தகுதியுள்ள வணிகக் கடன் பெறுநர்களுக்குக் கூடுதல் செயல்பாட்டு மூலதனத்தை வழங்குவதற்காக, அரசு ஆதரவுடனான கடன் உத்தரவாதங்களை வழங்குகிறது. ரூ.2.55 லட்சம் கோடி வரையிலான கூடுதல் கடன் விநியோகத்தை எளிதாக்குவதையும், தடையற்ற உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவளிப்பதையும் இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
இசிஎல்ஜிஎஸ் 5.0 திட்டமானது, 2027 மார்ச் 31 வரை அல்லது ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான உத்தரவாதங்கள் வழங்கப்படும் வரை, இவற்றில் எது முந்தையதோ அதுவரை செயல்பாட்டில் இருக்கும்.
அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள், அட்டவணைப்படுத்தப்பட்ட நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தகுதியுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் அனைத்துத் துறைகளிலும் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இத்திட்டம், ஒழுங்குபடுத்தப்பட்ட சலுகை வட்டி விகிதங்களில் எளிதாகக் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
திட்டத்தின் முன்னேற்றம்:
இசிஎல்ஜிஎஸ் 5.0 திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2026 ஆகஸ்ட் 20 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 6,73,979 உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை ரூ.2,50,024 கோடியை எட்டியுள்ளது.
தகுதியுள்ள கடன் பெறுநர்கள் ஜன் சமர்த் இணையதளமான https://www.jansamarth.in/home என்ற முகவரி மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306876®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2306958)
வருகையாளர் எண்ணிக்கை : 17