PIB Backgrounder
புவிவெப்ப ஆற்றல்
இந்தியாவின் தூய்மை எரிசக்திப் பயணத்தில் புதிய அத்தியாயம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2026 2:43PM by PIB Chennai

பூமியின் உட்பகுதியில் நிலவும் அதிக வெப்பம், புவிவெப்ப ஆற்றல் எனப்படும் தூய்மையான எரிசக்திக்கான வலுவான ஆதாரமாக விளங்குகிறது. இந்தியாவில் காணப்படும் வளமான புவிவெப்ப வளங்களைக் கருத்தில் கொண்டு, 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய மின்சார ஆதாரமாக இவ்வகை ஆற்றல் பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. 2070-க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், புவிவெப்ப ஆற்றலை நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முக்கிய அங்கமாக மாற்றும் நோக்கில் தேசிய புவிவெப்ப ஆற்றல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பரில் இந்தக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இதனை செயல்படுத்துகிறது.

இந்தக் கொள்கையின் அடிப்படையில், 2026 ஜூலையில் லடாக்கின் பூகா பள்ளத்தாக்கில் நாட்டில் முதல் முறையாக 2 புவிவெப்பக் கிணறுகளை ஓஎன்ஜிசி எரிசக்தி மையம் அமைத்தது. கடல் மட்டத்திலிருந்து 14,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பூகா பள்ளத்தாக்கு, வெந்நீர் ஊற்றுகள், நிலத்தடி வெப்ப வளங்கள் காரணமாக, இந்தியாவின் முக்கிய புவிவெப்ப ஆற்றல் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தலா 1,000 மீட்டர் ஆழம் கொண்ட இந்த 2 கிணறுகள் வள ஆதார மதிப்பீட்டுக்கு உதவுவதுடன், நாட்டின் முதல் 1 மெகாவாட் திறன் கொண்ட புவிவெப்ப மின்சார செயல்விளக்கத் திட்டத்துக்கும் வழிவகுக்கின்றன.

இந்தியாவின் பல்வேறு புவியியல் அமைப்புகள் புவிவெப்ப ஆற்றல் மேம்பாட்டுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் 381 வெந்நீர் ஊற்றுகளை வரைபடமிட்டு, புவிவெப்ப ஆற்றல் கொண்ட 10 மண்டலங்களை அடையாளம் கண்டுள்ளது. நாட்டின் கோட்பாடு ரீதியிலான புவிவெப்ப வளத்திறன் சுமார் 10.6 ஜிகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 தளங்கள் மின்சார உற்பத்தி, நேரடி வெப்பப் பயன்பாட்டுக்கு வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதுடன், வெப்பமூட்டுதல், குளிரூட்டுதல், வேளாண்மை, நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு உள்ளிட்ட துறைகளிலும் நேரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கைவிடப்பட்ட எண்ணெய், எரிவாயுக் கிணறுகளையும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் புவிவெப்ப ஆற்றல் சார்ந்த முயற்சிகளுக்குப் பயன்படுத்தலாம். 2025 ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 5 ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில் நிலையான, உள்நாட்டு எரிசக்தி ஆதாரமாக புவிவெப்ப ஆற்றல் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்தியாவின் புவிவெப்ப வளங்களை முறையாக ஆய்வு செய்து பயன்படுத்துவதற்கான கொள்கை, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன. 2070-க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கட்டமைப்பில் புவிவெப்ப ஆற்றல் முக்கிய இடத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306688®=3&lang=1
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306771)
வருகையாளர் எண்ணிக்கை : 13