PIB Backgrounder
விழிப்புணர்விலிருந்து மக்கள் இயக்கமாக மாறும் கங்கை நதி பாதுகாப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 5:14PM by PIB Chennai
இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கங்கை நதி பல நூற்றாண்டுகளாகப் பின்னிப் பிணைந்துள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட தீவிர நகரமயமாக்கல், அதிகரித்த நீர் மாசு சார்ந்த சவால்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கங்கை நதியைத் தூய்மைப்படுத்தவும், அதன் சூழலமைப்பை மீட்டெடுக்கவும், 2014-ம் ஆண்டு நமாமி கங்கை திட்டம் தொடங்கப்பட்டது. கங்கையையும், அதன் துணை நதிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நதிக்கரை மேம்பாடு, காடு வளர்ப்பு, அறிவியல் பூர்வமான கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. நதி பாதுகாப்பைத் திட்டமாக மட்டும் செயல்படுத்தாமல், பொதுமக்களின் தீவிர பங்களிப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் ஜன் கங்கை என்ற மக்கள் பங்கேற்பு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் பங்கேற்பை உறுதிசெய்து, நதி பாதுகாப்பை மக்கள் தங்களுடைய கடமையாக உணர இது வழிவகுக்கிறது.
நமாமி கங்கை திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ச்சியாகப் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மார்ச் 16 முதல் 31 வரை கடைபிடிக்கப்படும் கங்கை தூய்மை இருவார விழா, கங்கை பாயும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், தில்லி தலைநகர் பகுதிகளிலும், துணை நதிகள் பாயும் நகரங்களிலும் தீவிரமாக நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து நதிக்கரைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். தில்லியில் யமுனை நதிக்கரையில் வாரந்தோறும் தொடர்ச்சியாக நடைபெறும் தூய்மைப் பணிகள் நதிகள் தூய்மைப்படுத்தப்படுவதை மக்களின் அன்றாடப் பழக்கமாக மாற்றியுள்ளன. நதிக்கரைகளில் மண் அரிப்பைத் தடுத்து சுற்றுச்சூழல் சமநிலையை உறுதி செய்ய மரக்கன்றுகள் நடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ், தனிநபர்களின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டுடன் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு நதிக்கரையோரப் பகுதிகள் பசுமையாக்கப்படுகின்றன.
வருங்காலத் தலைமுறையினரிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நதிகள் பாதுகாப்பு இயக்கத்தில் பெருமளவில் இணைக்கப்பட்டு வருகின்றனர். கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கருத்தரங்குகள் மூலம் நதிகளின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. கங்கை தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் கங்கை உற்சவம், தூய்மையே சேவை இயக்கம், சர்வதேச யோகா தினம் ஆகியவை நதிகளுடனான மக்களின் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையின் மகளிர் குழுவினர் கங்கை நதியில் மேற்கொண்ட படகுப் பயணம் நதிகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வில் புதிய மைல்கல்லாக அமைந்தது.
தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு அப்பால், மக்களின் கூட்டுப் பொறுப்புணர்வும், தொடர் ஈடுபாடும் மட்டுமே நதிகளை தொடர்ந்து பாதுகாக்க முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. மக்கள் பங்களிப்பு என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் நதிகளைப் பாதுகாத்து, வளமான சூழலை உருவாக்கி, நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு இந்த மக்கள் இயக்கம் உறுதியான அடித்தளமாக விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305540®=3&lang=1
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305676)
வருகையாளர் எண்ணிக்கை : 10