PIB Backgrounder
azadi ka amrit mahotsav

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்த செலவில் விரிவான பாதுகாப்பை வழங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 29 AUG 2026 6:53PM by PIB Chennai

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் வறட்சி, வெள்ளம், புயல், ஆலங்கட்டி மழை, பூச்சித் தாக்குதல்கள், நோய்கள், விதைப்பு மேற்கொள்ள இயலாத சூழல், உள்ளூர் அளவிலான பேரிடர்கள், நீர் தேங்குவதால் ஏற்படும் சேதம், பருவம் தவறிப் பெய்யும் மழை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து விவசாயிகளுக்கு விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டில் ரூ.12,200 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல், வருமானத்தை நிலைப்படுத்துதல், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களைச் சாகுபடி செய்வதை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 2016-ம் ஆண்டின் காரீஃப் பருவத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 2025-26-ம் ஆண்டு ரபி பருவம் வரை 92.46 கோடிக்கும் அதிகமான விவசாய விண்ணப்பங்களுக்குக் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 26.33 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு ரூ.2.06 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த விளைச்சல் மதிப்பீட்டு முறை, வானிலை தகவல் கட்டமைப்பு மற்றும் தரவு மேலாண்மை போன்ற நவீன முன்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம், இழப்பீட்டுத் தொகையை விரைவாகவும், வெளிப்படையாகவும், துல்லியமாகவும் வழங்குவது சாத்தியமாகியுள்ளது.

இயற்கைப் பேரிடர்கள், மோசமான வானிலை மற்றும் பூச்சித் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதில் இக்காப்பீடு அரணாகத் திகழ்கிறது. சரியான தருணத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது வருவாய் இழப்புகளை ஈடுகட்டவும், கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், அடுத்த பயிர்ப் பருவத்தில் தடையின்றி முதலீடு செய்யவும் விவசாயிகளுக்குப் பேருதவியாக அமைகிறது. இது வேளாண் துறையின் மீள்திறனை வலுப்படுத்துவதோடு, நிச்சயமற்ற சூழலிலும் உணவு உற்பத்தியைத் தொடர்ந்து முன்னெடுக்க வழிவகுக்கிறது.

அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளைப் பயிர்க் காப்பீட்டு வரம்பிற்குள் கொண்டுவரும் நோக்கில், 2016 பிப்ரவரி 18 அன்று பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. விதைப்புக்கு முந்தைய இடர்பாடுகள் (விதைப்பு மேற்கொள்ள இயலாத நிலை அல்லது தோல்வி போன்றவை), பருவத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் பரவலான பாதிப்புகள், தனிப்பட்ட விளைநிலங்களில் ஆலங்கட்டி மழை, நீர் தேங்குதல், நிலச்சரிவு போன்ற உள்ளூர் பேரிடர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் வரை அனைத்தையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

விவசாயிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்திற்கான பிரீமியம் (காப்பீட்டுக் கட்டணம்) மிகக் குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2026–27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.12,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304549&reg=3&lang=1

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304578) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati