PIB Backgrounder
இந்தியாவின் சர்க்கரைத் தொழில்துறை - சமீபத்திய விலை உயர்வைப் புரிந்துகொள்ளுதல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2026 2:09PM by PIB Chennai
இந்தியாவின் சர்க்கரைத் தொழில்துறை ஒரு பார்வை:
* இந்தியாவின் சர்க்கரைத் தொழில் ஒரு முக்கிய வேளாண், கிராமப்புற வாழ்வாதாரச் சூழலமைப்பாகும். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கரும்பு உற்பத்தியாளராக உள்ளது. கரும்புத் துறை, ஏறக்குறைய 5 கோடி விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலைகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
* வேளாண்மை அமைச்சகம் வெளியிட்ட உற்பத்தி குறித்த மூன்றாவது முன்மதிப்பீட்டின்படி, இந்தியாவின் கரும்பு உற்பத்தி 2025-26-ம் ஆண்டில் 500 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. 2015-16-ம் ஆண்டில் 348.44 மில்லியன் டன்களாக இருந்த உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், இது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 43.5 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது.
* கரும்பு சாகுபடி செய்யப்படும் பரப்பளவும் 2015-16-ம் ஆண்டில் 49.27 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2025-26-ம் ஆண்டில் 58.87 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது .
* உத்தரப் பிரதேசமும் மகாராஷ்டிராவும் இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலங்கள் ஆகும். 2016-17-ம் ஆண்டில் 0.47 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சர்க்கரை ஏற்றுமதி , 2025-26-ம் ஆண்டில் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
* 2026-27-ம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கான நியாயமான, லாபகரமான விலையை அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.365 என நிர்ணயித்துள்ளது . இது 2016-17 -ம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கான நியாயமான மற்றும் லாபகரமான விலையை விட ரூ.135 அதிகமாகும்.
* இந்திய சர்க்கரையின் முக்கிய ஏற்றுமதி இடங்களாக இலங்கை, மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியவை உள்ளன .
* போதுமான சர்க்கரை கையிருப்பு உள்ளது. மேலும் 2025-26-ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனால் கலவையை மேம்படுத்துவதில் சர்க்கரைத் தொழில்துறையின் பங்கு:
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதன் நோக்கம், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதே ஆகும். இந்த நடவடிக்கை, நீடித்த மாற்று எரிபொருட்களுக்கான அரசின் நடவடிக்கை ஆகும். மேலும், இந்த முன்முயற்சி விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இருப்பினும், எத்தனால் கலப்பதால் உள்நாட்டு நுகர்வுக்கான சர்க்கரையில் பற்றாக்குறை ஏற்படாது.
எத்தனால் உற்பத்திக்காகத் திருப்பிவிடப்படும் கரும்பின் பங்கு, 2022-23-ம் ஆண்டில் சுமார் 12% ஆக இருந்ததிலிருந்து, 2025-26-ம் ஆண்டில் சுமார் 9% ஆகக் குறைந்துள்ளது. மேலும், தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு தானியங்களிலிருந்தே , குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்து கிடைக்கிறது.
உண்மையில், எத்தனால் திட்டம் கரும்பு விவசாயிகளுக்கு உதவுவதோடு, சர்க்கரை ஆலைகளையும் வலுப்படுத்தியுள்ளது. சராசரியாக, இந்தியா ஆண்டுதோறும் சுமார் 300-340 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் உள்நாட்டு சர்க்கரை நுகர்வு ஆண்டுக்கு சுமார் 280-290 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
தற்போதைய சர்க்கரை விலை உயர்வைப் புரிந்து கொள்ளுதல்:
சமீபத்திய வாரங்களில் சர்க்கரை விலை, ஜூலை 20, 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 48.18 ஆக இருந்ததிலிருந்து, ஆகஸ்ட் 20, 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட சுமார் 15.6% அதிகரிப்பாகும். இருப்பினும், இந்த சமீபத்திய நகர்வை நீண்ட காலப் போக்கிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். முன்னரே குறிப்பிட்டபடி, ஆகஸ்ட் 2024 - ஜூலை 2026-க்கு இடையில் சர்க்கரை விலை ஆண்டுக்குச் சுமார் 3% மட்டுமே உயர்ந்தது. தற்போதைய இந்த ஏற்றம், அடிப்படை விலைப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டிலும், பெரும்பாலும் குறுகிய கால காரணிகளையே பிரதிபலிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்குப் பின்வரும் பல்வேறு காரணிகள் காரணமாகும்:
* எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி,
* பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகரித்த தேவை,
* கரும்புப் பயிரில் வானிலை தொடர்பான சேதம்
* உலகளாவிய சர்க்கரை விநியோகம் குறைந்து வருவதால் விலை உயர்வது
* சிலரது ஊக வணிகமும் பதுக்கலும்.
நடப்புப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி, ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட சுமார் 343 லட்சம் மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடுகையில், சுமார் 306 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு அழுகல் நோய், அதிக மழைப்பொழிவால் ஏற்பட்ட நீர் தேக்கம் ஆகிய இரண்டு காரணிகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மதிப்பிடப்பட்டதை விட உற்பத்தி குறைவாக இருந்தபோதிலும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான சர்க்கரை கையிருப்பு உள்ளது. புதிய அரவைப் பருவம் அக்டோபர் மாதம் தொடங்கும்.
சர்க்கரை விநியோகத்தில் ஏற்படும் இறுக்கம் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல.
சர்க்கரை பதுக்கலைக் கட்டுப்படுத்தவும் விநியோகத்தை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நுகர்வோர் நலன்கள், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குதல், தொழில்துறையின் நிலைத்தன்மை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவது அரசின் முன்னுரிமையாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303478®=3&lang=1
(Release ID : 2303478)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303558)
வருகையாளர் எண்ணிக்கை : 13