PIB Backgrounder
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா, 2026: கனிமங்களுக்கான வரிவிதிப்பில் சீரான நடைமுறையை உறுதிசெய்தல்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 3:54PM by PIB Chennai
கனிமங்கள் முக்கியமான இயற்கை வளங்களாக விளங்குவதுடன், புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. உள்கட்டமைப்பு, டிஜிட்டல் அமைப்புகள், உற்பத்தித் துறை, எரிசக்திப் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு கனிமங்கள் மிக முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. பிராந்தியங்களுக்கிடையே சமமான, நிலையான கனிம வள மேம்பாடு, பொது நலன், நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக விளங்குகிறது. இந்தியாவில் சுரங்கத் தொழில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. பொது நலனைக் கருத்தில் கொண்டு, இச்சட்டத்தின் 2-வது பிரிவின்படி சுரங்கங்களை ஒழுங்குபடுத்துதல், கனிம வள மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, நாடு முழுவதும் கனிமத் தொழில் துறைக்கு சீரான, சமநிலையான நிதிக் கட்டமைப்பை உருவாக்குகிறது. கனிமங்களுக்கான உரிமைகள், கனிம வளம் கொண்ட நிலங்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மட்டுமே மாநில அரசுகள் புதிய வரிகளை விதிக்க முடியும். இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதைய வரிவிதிப்பு நடைமுறையில் சுரங்கத் துறைக்கு அதிக வரிச்சுமை, சுரங்கப் பணிகள் தொடங்கிய பின்னரும் எதிர்பாராத வகையில் வரி, செஸ், பிற கட்டணங்கள் விதிக்கப்படுதல், கனிம உற்பத்தி அல்லது போக்குவரத்துக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்படுதல், மாநிலங்களுக்கு இடையே மாறுபட்ட வரி விகிதங்கள் ஆகிய சவால்கள் உள்ளன. இவை சுரங்கத் தொழிலின் செயல்பாட்டை பாதிப்பதுடன், சிறு, நடுத்தர அளவிலான சுரங்க நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன. அதிகமான, சமச்சீரற்ற கட்டணங்கள் உள்ளூர் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தி, போக்குவரத்துச் செலவை அதிகரித்துள்ளன. இதனால் உள்நாட்டு கனிம விநியோகச் செலவு அதிகரித்து, கனிம இறக்குமதி அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
இந்த திருத்த மசோதா, கனிம வளம் கொண்ட நிலங்களை மத்திய அரசின் ஒழுங்குமுறை வரம்புக்குள் கொண்டு வருகிறது. இதன் புதிய 9டி பிரிவின்படி, கனிம உரிமைகள் அல்லது கனிம வளம் கொண்ட நிலங்களுக்கு மாநில அரசுகள் எந்தப் பெயரிலும் வரி, செஸ் அல்லது பிற கட்டணங்களை விதிக்க முடியாது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மட்டுமே இத்தகைய கட்டணங்களை விதிக்க முடியும். திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு செலுத்தப்படாத அல்லது வசூலிக்கப்படாத கட்டணங்கள் செல்லாது எனக் கருதப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட தொகைகள் திருப்பி வழங்கப்படாது.
இந்த மசோதா கனிமத் துறையில் உறுதியான, நிலையான நிதி நடைமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் கனிம ஆய்வு, முக்கிய கனிமங்களின் பாதுகாப்பு, நிலையான மேம்பாடு ஆகியவை உறுதி செய்யப்பட்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நமது பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298895®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2299228)
आगंतुक पटल : 7