பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டம்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 2:36PM by PIB Chennai
உள்ளூர் வளங்களை முறையாகப் பயன்படுத்தி, கிராமப் பஞ்சாயத்துகள் தங்கள் சொந்த வருவாயைப் பெருக்கி, நிதி ரீதியாகத் தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகால 'தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான போட்டி முறையின் மூலம் முதல் ஆண்டில் 50 திட்டங்களும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 திட்டங்களும் தேர்வு செய்யப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடித்த தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம மற்றும் ஒன்றிய பஞ்சாயத்துகள் இத்திட்டத்திற்குத் தகுதியானவை ஆகும். கிராம சபையின் ஒப்புதலுடன் கூடிய பங்கேற்புத் திட்டமிடல், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, பொது-தனியார் பங்களிப்பு, பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றைப் பெறுவதற்கும், மத்திய அரசு நிதியுதவிகளை ஒருங்கிணைப்பதற்கும் பஞ்சாயத்துகளுக்குத் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன. 2026 ஆகஸ்ட் 04 நிலவரப்படி, 28 பஞ்சாயத்துகளிடமிருந்து 30 திட்ட முன்மொழிவுகள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளன.
16-வது நிதியாணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, பஞ்சாயத்துகள் அரசு மானியங்களை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்த்து, சுயமான மற்றும் நிலையான வருவாயை ஈட்ட இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இத்தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298162®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2298561)
आगंतुक पटल : 10