PIB Backgrounder
உலக யானைகள் தினம் 2026
யானைகளைப் பாதுகாத்து, இயற்கை-மனிதகுல சகவாழ்வுக்கான சூழலியலை உருவாக்குதல்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 11:27AM by PIB Chennai
உலக அளவில் காடுகளில் வாழும் ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா, யானைகளைப் பாதுகாப்பதில் உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. யானைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதியை யானைகள் பாதுகாப்புத் திட்டம், யானைக் காப்பகங்கள், பாதுகாக்கப்பட்ட வழித்தடங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அறிவியல் அடிப்படையிலான கண்காணிப்பு முறைகள், நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உள்ளூர் மக்களின் பங்களிப்பு ஆகியவை மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான, சுமூகமான வாழ்வை உறுதி செய்யப் பெரிதும் உதவுகின்றன.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 33 யானைக் காப்பகங்களும் 150-க்கும் மேற்பட்ட யானை வழித்தடங்களும் யானைகளின் பாதுகாப்பான வாழ்விடங்களாக விளங்குகின்றன. சமீபத்திய அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 22,446 என மதிப்பிடப்பட்டுள்ளது. வனப்பகுதிகளின் பரப்பளவு குறைவதைத் தடுத்தல், சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுத்தல், வாழ்விடங்களைப் பாதுகாத்தல் போன்ற பன்முக நடவடிக்கைகளை இந்தியா வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
யானைகளின் பாதுகாப்பிற்காகச் செயல்படுத்தப்படும் யானைகள் பாதுகாப்புத் திட்டம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ரேடியோ காலரிங் கருவிகள், மரபணு தரவுத்தளங்கள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் போன்ற அதிநவீன அறிவியல் முறைகள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான யானைகள் கணக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு யானைகளின் எண்ணிக்கைத் துல்லியமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள யானை வழித்தடங்களைப் பாதுகாப்பதன் மூலம் அவைகளின் தடையற்ற நடமாட்டம் உறுதி செய்யப்படுவதோடு, மரபணுப் பரிமாற்றமும் மேம்படுகிறது.
ரயில் பாதைகளைக் கடக்கும்போது யானைகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ரயில் பாதைகளில் அதிநவீன ஒளியிழை உணர்விகள் (சென்சார்), நில அதிர்வு உணரிகள், வெப்பக் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒலியியல் கண்டறிதல் அமைப்புகள் பொருத்தப்பட்டு நிகழ்நேர எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, ரயில்கள் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 2013-ல் 26 ஆக இருந்த நிலையில், 2024-ல் 12 ஆகக் குறைந்துள்ளது.
யானைகள் மீதான கலாச்சார பிணைப்போடு நவீன அறிவியல் முறைகளை இணைத்து, யானைகள் பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298058®=3&lang=1
----
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2298548)
आगंतुक पटल : 10