PIB Backgrounder
இந்தியாவின் கப்பல் மறுசுழற்சி துறை: சீர்திருத்தங்கள் மூலம் உலகளாவிய தலைமைத்துவம்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:36PM by PIB Chennai
இந்தியாவின் கப்பல் மறுசுழற்சித் துறை நவீனமயமாக்கப்பட்டு, சர்வதேசத் தரநிலைகளுக்கு இணையாக மேம்பாடு அடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், மேம்பாட்டு மாநாட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டில் உலகளவில் கப்பல் மறுசுழற்சியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகளாவிய கப்பல் மறுசுழற்சி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2024-ல் 30.1 சதவீதத்திலிருந்து 2025-ல் 35.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் நாட்டின் கப்பல் மறுசுழற்சி அளவு 1.86 மில்லியன் மொத்த டன்னிலிருந்து 2.99 மில்லியன் மொத்த டன்னாக உயர்ந்து சுமார் 60 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியா எட்டியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த கப்பல் மறுசுழற்சியில் சுமார் 98 சதவீதம் குஜராத்தில் உள்ள அலங்-சோசியா கப்பல் மறுசுழற்சி மையத்தில் நடைபெறுகிறது. ஆண்டிற்குச் சுமார் 3.5 மில்லியன் மெட்ரிக் டன் எஃகு இங்கு நடைபெறும் மறுசுழற்சி வாயிலாகப் பெறப்பட்டு உள்நாட்டு எஃகுத் தொழில்துறைக்கு வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆபத்தான கழிவுகளைக் கையாளுதல் தொடர்பாக இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் நாட்டுக்குச் சேவையாற்றிய
ஐஎன்எஸ் விராட் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் அலங் மையத்தில் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யப்பட்டது இந்தியாவின் நவீன மறுசுழற்சித் திறனுக்குச் சான்றாக விளங்குகிறது.
இத்துறையை முறைப்படுத்த 2019-ம் ஆண்டின் கப்பல் மறுசுழற்சிச் சட்டம், 2021-ம் ஆண்டின் கப்பல் மறுசுழற்சி விதிகள், 2026-ம் ஆண்டின் கப்பல் மறுசுழற்சி ஒழுங்குமுறைகள் ஆகிய விரிவான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல் மறுசுழற்சிக்கான ஹாங்காங் சர்வதேச உடன்படிக்கையின் தரநிலைகளுக்கு ஏற்ப இந்திய மறுசுழற்சி மையங்களை நவீனப்படுத்த 53.5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு, 115 மையங்கள் சர்வதேசத் தரச்சான்றைப் பெற்றுள்ளன. மேலும், கப்பல் கட்டுவதற்கான நிதியுதவித் திட்டம் 2.0-ன் கீழ் கப்பல் உடைப்புக்கான கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பழைய கப்பல்களை இந்திய மையங்களில் மறுசுழற்சி செய்வோருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பழைய கப்பல்களைப் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வதன் மூலம் கடலோரச் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு, குறைந்த ஆற்றல் நுகர்வுடன் எஃகு மறுசுழற்சி செய்யப்படுவதால் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வும் பெருமளவில் குறைகிறது. இத்துறை சார்ந்த மறுசுழற்சி, போக்குவரத்து, எஃகு உருக்காலைகள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசின் தொடர்ச்சியான கொள்கை சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் கப்பல் மறுசுழற்சி துறையில் உலகளாவிய தலைமைத்துவத்தை இந்தியா அடைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297515®=3&lang=1
***
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2297793)
आगंतुक पटल : 19